பழக்க வழக்கங்களை பின்பற்ற வைப்பதில் தவறில்லை. அதற்காக கடுமை காட்டக்கூடாது. குறிப்பிட்ட நேரத்திற்குள் எழும் வழக்கத்தை பின்பற்ற வைக்க வேண்டும்.
குழந்தை பருவத்திலேயே நல்ல பழக்க வழக்கங்களை குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். அவற்றை தவறாமல் பின்பற்ற வைக்கவும் வேண்டும். சில பழக்கவழக்கங்களை முறையாக கடைப் பிடிக்காமல் அசட்டையாக இருப்பார்கள். அதற்காக அவர்கள் மீது கோபமோ, கடுமையோ காண்பிக்கக்கூடாது. அவசியம் பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்று வற்புறுத்தவும் கூடாது. அப்படி கட்டாயப்படுத்தினால் விரக்தி அடைவார்கள். அடம்பிடிக்கவும் செய்வார்கள். மென்மையான அணுகுமுறையை கையாண்டு குழந்தைகளை நல்வழிப்படுத்தி வளர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது.
குழந்தைகளின் வளர்ச்சிக்கு தூக்கம் இன்றியமையாதது. இரவில் குழந்தைகள் தாமதமாக தூங்கும் வழக்கத்தை பின்பற்றுவதற்கு அனுமதிக்கக்கூடாது. சில குழந்தைகள் பகல் பொழுதில் நன்றாக தூங்கிவிட்டு இரவில் தாமதமாக தூங்குவார்கள். அதுவே நாளடைவில் வழக்கமாகிவிடும். இரவில் குறிப்பிட்ட நேரத்திற்குள் தூங்கவைக்கும் வழக்கத்தை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அதேபோல் அதிகாலையிலேயே குழந்தைகளை எழுப்பி சிரமப்படுத்தக்கூடாது. காலையில் நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்ற வைப்பதில் தவறில்லை. அதற்காக கடுமை காட்டக்கூடாது. குறிப்பிட்ட நேரத்திற்குள் எழும் வழக்கத்தை பின்பற்ற வைக்க வேண்டும். அது தவறும் பட்சத்தில் அடித்து எழுப்பக்கூடாது. மென்மையாக அணுகி தூக்க நேரத்தை வரைமுறைப்படுத்திவிட வேண்டும்.
குழந்தைகள் பல் துலக்கும் விஷயத்தில் அலட்சியம் காட்டுவார்கள். பற்களை நன்றாக அழுத்தி தேய்க்கிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும். நன்றாக பல் துலக்குவதால் எந்தெந்த மாதிரியான பல் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம் என்பதை விளக்கி புரிய வைக்க வேண்டும். தினமும் இரண்டு முறை பல் துலக்கும் வழக்கத்தையும் பின்பற்ற வைப்பது நல்லது.
குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே ‘டேபிள் மேனர்ஸ்’ எனப்படும் சாப்பிடும் விதம் பற்றி சொல்லிக்கொடுக்க வேண்டும். நேர்த்தியாக அமர்ந்து சாப்பாட்டை கீழே சிந்தாமல் சாப்பிடுவதற்கு பழக்க வேண்டும். சாப்பாட்டை வீணாக்குவதற்கும் அனுமதிக்கக்கூடாது.
சிறுவயதிலேயே உடல் தூய்மையை கடைப்பிடிப்பதற்கு பழக்கிவிட வேண்டும். சாப்பிட செல்லும் முன்பு கை, கால்களை கழுவுவது, வெளியே சென்று விளையாடிவிட்டு வந்தால் கை, கால், முகம் கழுவுவது, விளையாட்டு பொருட்களை அந்தந்த இடத்தில் வைப்பது, சாப்பிட்ட பிறகு அந்த இடத்தை சுத்தப்படுத்துவது என சுத்தம், சுகாதாரத்தை பின்பற்றுவதற்கு பழக்கிவிட வேண்டும். வாரம் ஒருமுறை அவர்கள் பயன்படுத்தும் அறையை சுத்தம் செய்யும் வழக்கத்தையும் பின்பற்ற வைக்க வேண்டும்.
சிறுவயது முதலே குடும்ப பொறுப்புணர்வு கொண்டவர்களாக வளர்க்க வேண்டும். குடும்பத்தின் நிதி நிலையை அவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். அவசியம் தேவைப்படும் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் விதைக்க வேண்டும். அப்படி செய்தால் வெளி இடங்களுக்கு செல்லும்போது பிடித்தமான பொருட்களை அழுது அடம்பிடித்து வாங்குவதற்கு முயற்சிக்க மாட்டார்கள். அதேவேளையில் அவர்கள் கேட்காமலேயே அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கிக்கொடுக்கும் வழக்கத்தை பெற்றோரும் பின்பற்ற வேண்டும். சேமிப்பு பழக்கத்தையும் சிறு வயதிலேயே கற்றுக்கொடுத்துவிட வேண்டும்.
தங்களிடம் இருக்கும் விளையாட்டு பொருட்களை பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் பகிர்ந்து விளையாடும் பழக்கத்தையும் பின்பற்ற வைக்க வேண்டும். மற்ற பொருட்களையும் பிறருக்கு பகிர்ந்து கொடுக்கும் வழக்கத்தையும் கடைப்பிடிக்க வைக்க வேண்டும். யாராவது ஒருவர் உதவி செய்யும்போது நன்றி சொல்லும் வழக்கத்தையும் பின்பற்ற வைக்க வேண்டும். பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பதற்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகள் நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதற்குத்தான் விரும்புவார்கள். சிறு வயதிலேயே அவர்கள் கேட்கும் நொறுக்குத்தீனிகளை வாங்கிக்கொடுப்பதுதான், அவர்களின் உடல் வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. சில குழந்தைகள் வயதுக்கு பொருத்தமில்லாமல் உடல் பருமனாக காணப்படுவார்கள். சிறுவயதிலேயே உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வைக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதற்கு பழக்கிவிட வேண்டும்.
டி.வி., வீடியோ கேம், செல்போன் போன்ற மின் சாதனங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத அங்கமாகிவிட்டன. அவற்றை கையாள்வதற்கு நேரக்கட்டுப்பாடு விதிக்க வேண்டும். கண்களுக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அவைகளை உபயோகப்படுத்துவதற்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
Comments
Post a Comment