இன்றைய காலகட்டத்தில் நிறைய பேர் தரையில் உட்காருவதற்கு சிரமப்படுகிறார்கள். நாற்காலியில் உட்காருவதை விட தரையில் அமர்வது நல்லது என்பதை அறிந்திருந்தாலும் அப்படி உட்காருவதற்கு நிறைய பேர் ஆர்வம் காட்டுவதில்லை.
தரையில் தினமும் குறிப்பிட்ட நேரமாவது உட்காருவதற்கு பழகிக்கொள்ள வேண்டும். தரையில் உட்கார்ந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.தரையில் அமர்வது உடல் அமைப்பை சரியாக வைத்துக்கொள்வதற்கு உதவும். நமது உடல் அமைப்பின்படி நாம் தரையில் சம்மணம் போட்டு அமர்வதே சிறந்த வழி முறையாகும். தரையில் அமரும்போது முதுகுவலி பிரச்சினையும் குறை யும். கால்களை மடக்கி வைக்கும்போது முதுகு பகுதி இயற்கையாகவே வளைந்து கொடுக்கும். இதனால் கீழ் முதுகு மற்றும் இடுப்பு பகுதி திறம்பட செயல்படும் வாய்ப்பு உருவாகும்.
நீண்ட நேரம் நாற்காலியில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு முதுகுவலி, மூட்டுகள் நகர்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். தரையில் முழங்கால்களை மடக்கி அமர்வது ஓய்வு நிலையாக கருதப்படுகிறது. அப்படி உட்கார்ந்திருக்கும்போது
தசைகளின் செயல்பாடு அதிகரிக்கும். அதன் வலிமையும் கூடும். தரையில் உட்காரும்போது உடலின் கீழ்ப்பகுதியில் உள்ள தசைகள் நீண்டு, நெகிழ்வுத்தன்மையை அடையும். கால்களுக்கும் வலிமையை வழங்கும். மேலும் இடுப்பு, கால்கள், முதுகெலும்புகளுக்கும் நெகிழ்வுத்தன்மையை உண்டாக்கும். சுகாசனா எனும் யோகாசன தோற்றத்தில் தரையில் அமர்ந்திருப்பது செரிமான செயல்முறையை மேம்படுத்த உதவும். தரையில் அமர்ந்து சாப்பிடும்போது தட்டில் இருக்கும் உணவை கையில் எடுப்பதற்கு உடலை சற்று முன்னோக்கி நகர்த்த வேண்டியிருக்கும். பின்பு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டியிருக்கும். இத்தகைய செயல்பாடு மூலம் வயிற்று தசைகள் தூண்டப்படும். அங்கிருக்கும் செரிமான நொதிகளின் சுரப்பும் அதிகரிக்கும். இதனால் உணவு நன்றாக ஜீரணமாகும்.
பத்மாசனம் போன்ற யோகாசன நிலையில் தரையில் அமர்வது மன அழுத்தத்தை குறைக்க உதவும். அப்படி உட்கார்ந்தால் உடலில் ஆக்ஸிஜன் ஓட்டம் அதிகரிக்கும். தரையில் உட்காருவது ஆயுள் காலத்தையும் அதிகப்படுத்தும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தரையில் அமர்ந்து பத்மாசனம் செய்பவர்கள் எந்த பிடிமானமும் இல்லாமல் எழுந்திருக்க முடியும். அந்த நிலையில் அமர்ந்து எழுந்திருக்க உடல் பலமும், நெகிழ்வுத்தன்மையும் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment