நகல் எழுதுதல், மொழி பெயர்ப்பு, விளம்பரம் மற்றும் விற்பனை, கிராபிக் டிசைனிங் , வீடியோக்களை மேம்படுத்துதல் என்று பலவகையான பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் உள்ளது.
நிற்பதற்கு நேரமில்லாமல் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடிக் கொண்டு இருக்கும் பலரையும் வீட்டுக்குள் கட்டிப் போட்டு விட்டது கொடிய வைரஸ் கொரோனா. சில நூறு முதலீடு செய்து வயிற்றைக்கழுவும் தெருவோர வியாபாரிகள் முதல் பல நூறு கோடிரூபாய் முதலீடு செய்து தொழிலைப் பெருக்கும் முதலாளிகள் வரை அனைவரும் கொரோனாவின் கெட்ட ஆட்டத்தில்முடங்கிப்போய் விட்டனர்.
இணைய வெளியில்...
பலரின் வாழ்வாதாரம் பறி போனது என்று வேதனைப்படுவதா? அல்லது பலரின் வாழ்வே பறி போய் விட்டதே என்று கண்ணீர் விடுவதா? என்று தெரியாமல் அனைவரும் கலங்கி நிற்கும் தருணம் இதுவாகும்.
இந்தநிலையில் மன உறுதியே மகத்தான மருந்து என்பதும், வீட்டுக்குள் இருப்பதே பாதுகாப்பு என்பதும் அரசாலும், மருத்துவர்களாலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் செல்போன்களைத் தொடாதே என்று பெற்றோரால் எச்சரிக்கப்பட்ட மாணவர்கள் இன்று செல்போனும் கையுமாகவே இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தநிலையில் எத்தகைய இடர்பாடுகளையும் தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் சில இளைய தலைமுறையினர் இணைய வெளியில் கலக்கி புதிய தொழில் முனைவோராக உருவெடுத்திருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.
ஏராளமான வழிகள்
இதுகுறித்து இளைய தலைமுறையினர் கூறியதாவது:-
ஆரம்ப காலங்களில் பொழுது போகாமல் இணையத்துக்குள் உலா வரத்தொடங்கினோம். காலப்போக்கில் பொழுதை பயனுள்ளதாக கழிக்கலாம் என்று யோசிக்கத்தொடங்கும் போது தான் ஆன்லைன் மூலம் சம்பாதிப்பதற்கு ஏராளமான வழிகள் கொட்டிக் கிடப்பது தெரியவந்தது. அதன்படி ப்ரீலான்ஸ், வேலைகளான நகல் எழுதுதல், மொழி பெயர்ப்பு, விளம்பரம் மற்றும் விற்பனை, கிராபிக் டிசைனிங் , வீடியோக்களை மேம்படுத்துதல் என்று பலவகையான பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் உள்ளது.
இதுதவிர வலைத்தளங்கள் மற்றும் யூ டியூப் சேனல்களை உருவாக்கி அதிகப்படியானவர்களைக் கவர முடிந்ததால் அதன் மூலமும் வருமானம் ஈட்ட முடிகிறது. இன்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகப்படியான பின் தொடர்வோரை உருவாக்கி இன்ஸ்ட்டா இன்ப்ளூயன்சராக மாறி ஒவ்வொரு பதிவுக்கும் பணம் சம்பாதிக்கலாம். இதுதவிர ஆன்லைன் மூலம் மூளையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு பணம் சம்பாதிக்கும் வழிகள் ஏராளமாக இணையத்தில் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
எதிர்பாராத ஒன்று
ஒட்டுமொத்தமாக அனைத்து கதவுகளையும் அடைத்து வைக்கும் ஊரடங்கு என்பது யாரும் எதிர்பாராத ஒன்றாகும். அதேநேரத்தில் இணையக் கதவுகளை விரியத்திறந்து வைத்துள்ளது இயற்கையின் வழிகாட்டல் என்றுதான் சொல்ல வேண்டும்.
இணையம் மூலம் உலகம் நம் உள்ளங்கைக்குள் அடங்கி விட்டது என்று பெருமை பீற்றிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அதனைப் பயன்படுத்தி வருமானம் ஈட்டும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு நிச்சயமாக சபாஷ் போடலாம்.
இனிவரும் காலங்களில் இணையம் என்பது ஒவ்வொருவரோடும் இணைந்த ஒன்று என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இணையத்தில் இணைந்து தொழில் வாய்ப்புகளை உருவாக்குவது குறித்து பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்குப் பாடம் நடத்தினால் நல்லது என்பது சமூக ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.
Comments
Post a Comment