பெண்களின் அழகிற்கும், ஆரோக்கியத்திற்கும் அடிப்படையாக இருப்பது, சுத்தம். அதிலும் குறிப்பிடத்தக்கதாக இருப்பது அந்தரங்க சுத்தம்.
அதனால் அழகாக தோன்ற விரும்பும் பெண்களும், ஆரோக்கியமாக வாழ விரும்பும் பெண்களும் அந்தரங்க சுத்தத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும். இந்த சுத்தத்தை பேணினால் பெண்கள் பல்வேறு நோய்களில் இருந்தும் தப்பித்து விடலாம்.அந்தரங்க சுத்தம் பற்றி குறிப்பிடும்போது பெரும்பாலான பெண்களுக்கு வெள்ளைப் படுதல் ஒரு பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கிறது. வெள்ளைப்படுதல் என்பது இயற்கையானது. ஆரோக்கியமான கருப்பை யும், சினைப்பையும், இனப்பெருக்கத்திறனும் கொண்ட எல்லா பெண்களுக்குமே இயற்கை யாகவே உறுப்பு பகுதியில் வெள்ளைப்படுதல் தோன்றும். அதுபோல் பெண்களின் இனப் பெருக்க உறுப்புகளில் நோய் எதிர்ப்புத்திறனை தருவதற்காக இயற்கை
அணுக்களும் காணப்படும். வெள்ளைப்படுதலை தவறாக புரிந்துகொண்டு தேவையற்ற ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொண்டுவிட்டால், அந்த நல்ல அணுக்கள் அழிந்துவிடும். அப்போது அந்த திரவம் நிறமாற்றத்துடன் வெளிப்பட்டு வாடையும் வீசும். அதுதான் நோய் பாதிப்பின் அறிகுறியாகும்.
பாதிப்பு எதுவும் இல்லாத இயற்கையான திரவம் நிறமற்றதாக இருக்கும். முகர்ந்து பார்த்தால் அதில் இருந்து வாடை எதுவும் வீசாது. இந்த இயற்கையான வெள்ளைப் படுதல் ஏற்படும்போது சுத்தமான நீரால் கழுவினாலே போதுமானது. உறுப்பு பகுதியில் இருக்கும் தேவையற்ற ரோமங்களை நீக்கி சுத்தப்படுத்துவதும் அந்தரங்க சுத்தத்திற்கு அவசியம். கணவரோடு தாம்பத்ய தொடர்பு வைத்துக்கொள்ளும் பெண்கள் பாலியல் உறவுக்கு முன்பும், பின்பும் தண்ணீர் பயன்படுத்தி கழுவவேண்டும். கணவன், மனைவி இருவருமே இதை அவசியம் கடைப்பிடிக்கவேண்டும். அந்தரங்க சுத்தம் இல்லாத தம்பதிகளுக்கு தாம்பத்ய ஆர்வம் குறைந்துபோகும். அதனால் அவர்கள் தாய்மையடைவதும் தள்ளிப்போகும்.
அந்தரங்க சுத்தத்திற்கு உள்ளாடை பராமரிப்பும் இன்றியமையாதது. செயற்கை நூற்களால் உருவான உள்ளாடைகள் நமது நாட்டு சீதோஷ்ண நிலைக்கு ஏற்றதல்ல. கோடைகாலத்தில் தொடை இடுக்குப்பகுதிகளில் அதிகமாக வியர்க்கும். அந்த வியர்வை தேங்காத அளவுக்கு உறிஞ்சி எடுக்கும் உள்ளாடைகளையே அணிய வேண்டும். அதனை துவைத்து சூரிய ஒளிபடும் இடத்தில்தான் உலரவைக்க வேண்டும்.
Comments
Post a Comment