சிறிய மாற்றம் பெரிய வித்தியாசத்தை உருவாக்கும் என்று சொல்வார்கள். கூந்தல் பராமரிப்பு விஷயத்தில் சிறிய மாற்றத்தை செய்வதன் மூலம் ஆச்சரியத்தக்க பலன்களை அடையலாம்.
பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் பளபளப்பான, அடர்த்தியான கூந்தலை பெற விரும்புகிறார்கள். வழக்கமாக பயன்படுத்தும் சீப்புக்கு பதிலாக வேப்ப மர துண்டுகளை கொண்டு தயாரிக்கப்பட்ட சீப்பை உபயோகித்தால் தலைமுடியில் நல்ல மாற்றத்தை காணலாம்.
தலை முடிக்கு வேப்பம் சீப்பு பயன்படுத்துவது நல்லதா? என்ற கேள்வி நிறைய பேரிடம் இருக்கிறது. வேப்ப மரத்தின் ஒவ்வொரு பகுதியும் மருத்துவ குணங்களை கொண்டது. வேப்ப மர சீப்பு பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்டது. அதனை பயன் படுத்துவது தலை முடியின் ஆரோக்கியத்தை மேம் படுத்தும்.
பிளாஸ்டிக் சீப்புகள் முடிக்கு கேடு விளைவிக்கக் கூடியவை என்பது பலருக்கு தெரியாது. அவற்றின் முட்கள் உச்சந்தலையில் எரிச்சலை உண்டாக்கக்கூடியவை. அதனை அழுத்தமாக பயன்படுத்தினால் உச்சந்தலையின் அடிப்பகுதியில் நோய்த்தொற்றை ஏற்படுத்திவிடும். அதன் காரணமாக பொடுகுத் தொல்லையும் தலைதூக்கும். பிளாஸ்டிக் சீப்பால் உச்சந்தலையில் தொற்று ஏற்படுவதை கவனிக்காமல் விட்டுவிட்டால் நாளடைவில் பொடுகு பிரச்சினை அதிகரித்துவிடும்.
உங்களுக்கு பொடுகுத் தொல்லை இருந்தால், வேப்ப மர சீப்பை பயன்படுத்த தொடங்கிவிடலாம். ஏனெனில் வேப்ப மரத்தில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், பொடுகுக்கு முக்கிய காரணமான பாக்டீரியா மற்றும் நோய்த்தொற்றுகளில் இருந்து உச்சந்தலையை பாதுகாக்கும்.
வேப்பம் சீப்பு பயன்படுத்துவது தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். இது முடி ஆரோக்கியத்திற்கு சிறந்தது. உச்சந்தலையில் தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவும் அக்குபிரஷர் புள்ளிகளுக்கும் இதமளிக் கும். பிளாஸ்டிக், உலோகத்தில் தயாரிக்கப்படும் சீப்புகள் நாளடைவில் உச்சந்தலையில் மயிர்க்கால்களை வலுவிழக்கச் செய்யக்கூடியவை. தலை முடி நாளுக்கு நாள் வலுவிழந்து கடுமையானதாக இருந்தால் அதற்கு சீப்பும் காரணமாக இருக்கும். நாளடைவில் மென்மை தன்மையை இழந்து கரடுமுரடாக மாறிவிடும். ஆனால் வேப்ப மர சீப்பு எப்போதும் மென்மையாக இருக்கும். அதில் இருக்கும் முட்கள் முடிக்கு எந்த தொந்தரவையும் கொடுக்காது.
நிறைய பேர் பேன் தொல்லையால் அவதிப்படுவார்கள். தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தொடர்ந்து அங்கும் இங்கும் நகர்ந்து அரிப்பு, எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் பேன்கள் தலையில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் கிருமிகளாகும். தலைமுடிக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை அபகரித்துவிடும். வேப்ப மரச் சீப்பை கொண்டு தொடர்ந்து தலை சீவுவது பேன்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்கும். வேப்ப மரத்தில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு தன்மைதான் அதற்கு காரணம். பேன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வேப்ப மர சீப்பை சில காலம் பயன்படுத்தினாலே பேன்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி விடலாம்.
வேப்ப மர சீப்பை பயன்படுத்த தொடங்கிய ஓரிரு வாரங்களிலேயே கூந்தலில் மாற்றத்தை காணலாம். இது ரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதால், முடி ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். கிருமி உருவாக்கத்தை குறைக்கும். உச்சந்தலையில் பொடுகு மற்றும் பூஞ்சை தொற்றுகளையும் தடுக்கும். இத்தகைய பாதிப்புகள் இல்லாவிட்டாலே முடி உதிர்வு பிரச்சினையும் குறைந்துவிடும்.
Comments
Post a Comment