பொதுவாக கண் சிமிட்டுதல் என்பது எதேச்சையாக நடக்கக்கூடிய விஷயமாகும். ஆனால் இதனை பலர் அபசகுனமாகவும், வேறு பலர் அதிர்ஷ்டம் என்றும் கருதுகின்றனர்.
இந்தியா என்பது பன்முக கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்களை கொண்ட தொன்மையான நாடு ஆகும். அதேபோல பல்வேறு மூடநம்பிக்கைகளும், கட்டுக்கதைகளும் இங்கு நிரம்பியிருக்கின்றன. நம் மக்கள் அதிகமாக கடைப்பிடிக்கும் சில மூடநம்பிக்கைகள் குறித்து இங்கே பார்க்கலாம்..
பூனை குறுக்கே வந்துருச்சு
நம் நாட்டில் மிக அதிகமாக கடைபிடிக்கப்படும் அபசகுண பழக்கம் இதுதான். எங்காவது நாம் கிளம்பி சென்று கொண்டிருக்கையில், செல்லும் பாதையின் குறுக்கே பூனை ஒன்று ஓடிவிட்டால், நாம் செய்ய நினைக்கும் காரியம் நிறைவேறாது என்று பலர் நம்புவது உண்டு. சிலர் இதனால் எந்த ஒரு காரியமானாலும் பாதியில் வீடு திரும்பி விடுவது உண்டு. அதேசமயம் பூனை குறுக்கே சென்றாலும், நாம் செல்லும் முன்பாக மற்றொரு நபர் பாதையை கடந்து விட்டால் நம்மை அது பாதிக்காது என்று பலர் கருதுகின்றனர். எச்சில் துப்பி விட்டால்கூட இந்த அபசகுணம் நீங்கிவிடும் என்று சிலர் நம்புகின்றனர்.
உடைந்த கண்ணாடியை பார்க்காதே
நம் வீட்டில் கண்ணாடி லேசாக உடைந்திருந்தால், அதில் முகம் பார்க்காதே என்று அடிக்கடி அறிவுரைகள் பெரியவர்களிடம் இருந்து வரும். உடைந்த கண்ணாடியில் முகம் பார்ப்பதால் நமது உள்ளமும், உடலும் அதுபோலவே உடைந்துவிடும் என்பது பலரது நம்பிக்கையாக இருக்கிறது.
கண் சிமிட்டுதல்
பொதுவாக கண் சிமிட்டுதல் என்பது எதேச்சையாக நடக்கக்கூடிய விஷயமாகும். ஆனால் இதனை பலர் அபசகுனமாகவும், வேறு பலர் அதிர்ஷ்டம் என்றும் கருதுகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் மன அழுத்தம், சோர்வு, அலர்ஜி மற்றும் வறட்சியான கண்கள் போன்ற பல்வேறு காரணங்களால் கண் சிமிட்டுதல் ஏற்படும்.
பொழுது போன பிறகு பெருக்காதே
சூரியன் மறைந்து இருட்ட தொடங்கி விட்டால், வீட்டை பெருக்கக் கூடாது என்பது பெரியவர்களின் கட்டாய கட்டளையாகும். இருள் நேரத்தில் வீட்டை துடைப்பம் வைத்து பெருக்கினால் வீட்டில் உள்ள லட்சுமி, அதாவது செல்வம் குறைந்துவிடும் என்பது பலரது நம்பிக்கையாக இருக்கிறது.
மொய் பணத்தில் ஒரு ரூபாய் சேர்த்து எழுதுவது
கல்யாணம், காதுகுத்து அல்லது பிறந்தநாள் எந்த விசேஷம் என்றாலும், அங்கு பணம் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டால் நமக்கள் ரூ.101, ரூ.1,001 என்ற கணக்கில் பணத்தை கொடுப்பார்கள். ஒரு ரூபாய் என்பது பெறுபவருக்கான கடன் என்றும், அது திரும்ப கிடைத்துவிடும் என்றும் கருதப்படுகிறது.
நகம் மற்றும் முடி வெட்டுதல்
பொதுவாக இருள் சூழ்ந்த பிறகு நகம் மற்றும் முடி வெட்டும் பழக்கம் தவறானதாக கருதப்படுகிறது. இது தவிர சனிக்கிழமைகளில் இதை செய்வது மிகுந்த அபசகுனமாக நம்பப்படுகிறது.
காக்கை எச்சம் இடுவது
நாம் டிப்டாப்பாக கிளம்பி செல்லுகையில் காக்கை எச்சம் இட்டால் நமது உடை நாஸ்தி ஆகிவிடும் என்பது ஒருபுறமிருக்க, ஆனால் இதன் மூலமாக அதிர்ஷ்டம் கை கூடி பணவரவு கிடைக்கும் என்று பலரும் நம்புகின்றனர்.
எலுமிச்சையும் 7 பச்சைமிளகாய்களும்
வீடுகள் மற்றும் கடைகளின் நுழைவுவாயில்கள், வாகனங்களின் முகப்பு ஆகிய இடங்களில் ஒரு எலுமிச்சம்பழமும், 7 பச்சை மிளகாயும் கோர்த்து தொங்கவிடப்பட்டு இருப்பதை பல இடங்களில் நாம் பார்த்திருக்கலாம். இதன் மூலமாக வீட்டுக்கு வரக்கூடிய அவலெட்சிமி, இந்த அமில உணவை சாப்பிட்டு பசியை தீர்த்துக் கொள்ளும் என்பதால் அது மேற்கொண்டு உள்ளே நுழையாது என்று நம்பப்படுகிறது.
Comments
Post a Comment