நியூசிலாந்து விஞ்ஞானிகள் ஆழ்கடலில் வாழும் ஒரு அரிய வகை பேய் சுறா மீனை கண்டுபிடித்துள்ளனர். இது மிகவும் சிறிய மீன்வகை என்றும், ஆழ் கடலில் நிழலான பகுதிகளில் வாழக்கூடியது என்றும் தெரிவித்துள்ளனர். இதை தென் தீவுக்கு அருகே, சுமார் 1.2 கி.மீ. ஆழ்கடலில் கண்டுபிடித்து உள்ளனர், என்று தெரிவித்துள்ளனர்.
இந்த பேய் சுறா மீன்கள் - சிமேரா என்றும் அழைக்கப்படும் என்றும், இது மிகவும் அரிதாகவே காணப்படும், அதிலும் அவற்றின் குட்டிகளை பார்ப்பது இன்னும் அரிதானது.
தற்போது கிடைக்கப் பெற்றுள்ள இந்த பேய் சுறா மீன் இளம் பருவ நிலையில் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த வகையான மீன் குட்டிகளின் இளம் பருவ நிலையை பற்றி அறிந்துகொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.
இந்த மீனை கண்டுபிடித்த குழுவின் உறுப்பினரான டாக்டர் பிரிட் ஃபினுச்சி பேசும்போது, ஆழ்கடல் மீன்கள் எண்ணிக்கையை பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும்போது தற்செயலாக இந்த மீன் எங்களுக்கு கிடைக்கப் பெற்றது, என்றார். மேலும் அவர்கள் கூறுகையில், "ஆழ்கடல் உயிரினங்களை கண்டு பிடிப்பது கடினம் என்றும், அதிலும் பேய் சுறா மீனை கண்டுபிடிப்பது என்பது அரிதானது" என கூறினார்.
தேசிய நீர் மற்றும் வளிமண்டல ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள், இது சம்பந்தமாக கூறுகையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இளம் பருவ மீன் சமீபத்தில்தான் முட்டையிலிருந்து வெளிவந்திருக்கும் எனவும், கண்டுபிடிக்கப்பட்டுள்ள மீனின் வயிற்று பகுதியில் முட்டையின் ஓடுகள் காணப்படுகிறது என்றும் தெரிவித்தனர்.
பேய் சுறா முட்டையின் மாதிரி
இந்த வகையான மீன் இனம் ஆழ்கடல் தரையில் முட்டையிடும். முட்டையிட்ட பிறகு அந்த முட்டையில் இருக்கும் குஞ்சு, மஞ்சள் கருவை உண்டு அதன் மூலம் வளர்ச்சி அடைந்து, பிறகு அதிலிருந்து வெளிவரும். இது சம்பந்தமாக டாக்டர் ஃபினுச்சி கூறியபோது, "இந்த வகை பேய் சுறாக்கள் இளம்பருவத்தில், அவற்றின் வளர்ந்த பருவத்தில் காட்டும் குணாதிசயங்களை விட வித்தியாசமான குணாதிசயங்களை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை. அதனால் இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது", என்றார்.
"இது பலதரப்பட்ட சூழலிலும் வாழக்கூடியது மற்றும் பல வகை உணவுகளை எடுத்துக் கொள்ளும். இந்த வகையான மீன் பற்றி ஆராய்ச்சி செய்வது மூலம் ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்" என்று கூறினார்.மேலும் அவர் கூறுகையில், "முதல் கட்டமாக இந்த மீன் எந்த இனத்தைச் சேர்ந்தது என்பதைக் கண்டறிய உள்ளோம். முதலில் திசு மாதிரிகள் மற்றும் சீரற்ற மரபியல் முறைகளை செய்ய உள்ளோம். அதன்பின் மார்போமெட்ரிக்ஸ் அல்லது உடல் அளவீடுகளையும் எடுப்பதால் மீனின் இனத்தைக் கண்டறிய முடியும்", என்றார்.பேய் சுறா என்று கூறுவதால் இது சுறா மீன் குணாதிசயங்களைக் கொண்டிருக்கும் என்று பொருள் அல்ல. ஆனால் சுறா மீன் வகையில் வரும். மீனின் உடல் குருத்தெலும்புகளைக் கொண்டது.
Comments
Post a Comment