'நன்கு சமைக்கப்பட்ட கோழி மற்றும் முட்டையில் இருந்து, மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவாது என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருப்பதால், அதை பாதுகாப்புடன் உண்பதில் ஆபத்து இல்லை' என, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசம், ஹரியானா, மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம், குஜராத், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், டில்லி, ராஜஸ்தான். ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாப் ஆகிய, 12 மாநிலங்களில், காகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து வரும், பறவைகளிடையே, 'ஏவியன் இன்ப்ளுயன்ஸா' எனப்படும், பறவைக் காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டுள்ளது.இதில், ஒன்பது மாநிலங்களில், பண்ணைக் கோழிகளுக்கும், இந்த நோய் பரவியிருப்பதை, மத்திய அரசு, நேற்று முன் தினம் உறுதி செய்தது. இதையடுத்து, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:முழுமையாக நன்கு சமைக்கப்பட்ட, கோழி மற்றும் முட்டையில் இருந்து, மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் நோய் பரவுவதற்கான வாய்ப்பு இல்லை என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, மக்கள் வீணாக அச்சமடைய தேவையில்லை.நன்றாக சமைக்கப்பட்ட இறைச்சியில் இருந்து தொற்று பரவாது. முட்டைகளை பாதி வேகவைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கோழி இறைச்சியை கையாளும், சில்லரை வர்த்தகர்களும், அதை வீடுகளில் வாங்கி சமைப்பவர்களும், சில பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.பறவைக் காய்ச்சல் தொற்று உள்ள பகுதியில் வசிப்போர், பறவைகளை கைகளால் தொட்டு பழகுவதை தவிர்க்கவும். கோழி இறைச்சியை வெறும் கையால் தொடுவது கூடாது.கையுறைகள் மற்றும் முகக்கவசம் அணிந்தே, கோழி இறைச்சிகளை கையாள வேண்டும். இறைச்சியை திறந்தவெளியில் வைக்க கூடாது. பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதிகளில் உள்ளபண்ணைகளில் இருந்து, கோழி மற்றும் முட்டைகள் வாங்கக் கூடாது.
வீடுகளில் கோழிகளை வெட்டும் போது, கையுறை மற்றும் முகக்கவசம் அணிந்து கொள்வது பாதுகாப்பானது. மேலும், கோழியை சமைக்க பயன்படுத்தும் பாத்திரங்கள், கத்தி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும், சமையலுக்கு பின், கிருமி நாசினி வாயிலாக நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.கோழி இறைச்சியை, நேரடியாக குழாய் நீரில் காட்டி கழுவக் கூடாது. இறைச்சியில் பட்டு தெறிக்கும் நீர் துளிகள் வாயிலாக, தொற்று பரவும் வாய்ப்புள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.-
also read : செல்போனில் பேசினால் கொரோனா பரவும்: மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்!
Comments
Post a Comment