நகரங்களில் மட்டும்தான் ஐ.டி நிறுவனங்கள் செயல்பட வேண்டுமா... ஏன் கிராமங்களில் செயல் பட முடியாதா... அதற்கு விடையளித்த தமிழகத்து பில்கேட்ஸ் ஸ்ரீதர் வேம்வுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தின் கொள்ளிடக் கரையோரம் உள்ள திருப்பனந்தாள் அருகேயுள்ள சிதம்பரநாதபுரம் கிராமம் தான் ஸ்ரீதர் வேம்புவின் சொந்த ஊர். சென்னையை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஸோஹோ(Zoho) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிதான் இவர். 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் இப்போது 9,000 க்கும் மேற்பட்டவர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
கிராமப்புறங்களில் இருந்து மக்கள் நகரங்களுக்கு குடியறுவதை விரும்பாத . ஸ்ரீதர் வேம்பு தன் பணியிடத்தை தென்காசிக்கு அருகேயுள்ள மத்தளம்பாறை கிராமத்துக்கு மாற்றிக் கொண்டார். பிழைப்பு தேடி நகரங்களுக்கு சென்று மக்கள் குடியேறுவது குறைய வேண்டும். அதிக மக்கள் தொகையால்தான் நகரங்களில் உள் கட்டமைப்பு வசதிகளை கட்டமைத்தாலும் பிரச்னைகள் தீர்வதில்லை என்பது இவரின் வாதம். இதனால், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக நகரத்திலிருந்து கிராமத்தில் சென்று குடியேறினார் ஸ்ரீதர் வேம்பு.
கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தென்காசி ஸோஹோ நிறுவனத்தின் ஊரக கிளை அலுவலகத்தில் இன்று சுமார் 500 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள், அனைவருமே தென்காசியை சுற்றி 80 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வசிப்பவர்கள். இந்த நிறுவனத்தின் முக்கிய அடையாளமாக ஸோஹோ டெஸ்க், வாடிக்கையாளர் சேவை மென்பொருள் உள்ளிட்ட சில தயாரிப்புகளை மத்தளம்பாறை கிராமத்தின் அலுவலகத்திலிருந்து செயல்படுத்தப்படுகிறது. அதே போல, ஆந்திராவின் ரேணிகுண்டாவிலும் ஸோகோவின் மற்றோரு கிராமப்புற அலுவலகம் இயங்கி வருகிறது.
உலகின் பல நாடுகளில் செயல்படும் ஸோஹோ செயல்படுகிறது. இதனால், வேம்புவின் ஒரு நாள் வாழ்க்கை அதிகாலை 3 மணிக்கே தொடங்கி விடும். பல நாடுகளில் இருந்து வரும் போன் அழைப்புகளுக்கு பதில் பேச தொடங்கும் வேம்பு விடிந்ததும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்வார். நீச்சல் பயிற்சிதான் அவரை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவுவதாக ஸ்ரீதர் வேம்பு கூறுகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டும் இவரின் ஸோஹோ நிறுவனம் ரூ. 3,410 கோடி வருவாய் ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தளம்பாறை கிராமத்தில் ஜோஹோ பள்ளியையும் ஸ்ரீதர் வேம்பு தொடங்கியுள்ளார். முன்னர் வீட்டில் வைத்து குழந்தைகளுக்கு மாலை நேர வகுப்பு எடுத்து வந்த இவர், தற்போது இந்தப் பள்ளியைத் தொடங்கி அந்த பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுத்து வருகிறார். இப்படி, சமூக அக்கறையுடன் செயல்பட்டு வரும் துரை வேம்புவை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது.
Comments
Post a Comment