பெண்ணின் புதிய ஓட்டுநர் உரிமத்தால் இணையத்தில் பெரும் அதிர்வைலையை உருவாகியிருக்கின்றது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக உலக நாடுகள் பலவற்றில் முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மக்கள் தனியாக காரில் பயணிக்கும்போது கூட மாஸ்க் அணிந்தவாறே பயணிக்க வேண்டும் என இந்தியா போன்ற உலக நாடுகள் பல அறிவித்திருக்கின்றன. ஆகையால், பொதுவெளியில் பயணிக்கும்போது மாஸ்க் கட்டாயமாகியுள்ளது.
இது கொடிய கொரோனா வைரசிடம் இருந்து பாதுகாக்கும் என நம்பப்படுகின்றது. ஆகையால், உலக நாடுகள் பலவற்றில் மக்கள் மாஸ்க்குடனே வலம் வந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த நிலையில், பெண் ஒருவர், முக கவசம் அணிந்தவாறு எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய ஓட்டுநர் உரிமத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றார்.
பலர் இதனை ஃபோட்டஷாப் என கருத்து தெரிவித்து வந்தநிலையில், அதிகாரி ஒருவரின் கவனக்குறைவால் அரங்கேறிய தவறு என்பது இது தெரிய வந்திருக்கின்றது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலேயே இந்த விநோத சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. பில்கிரிம் லெஸ்லி ரே எனும் இளம்பெண்ணுக்கே இந்த விநோத சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.
அமெரிக்காவிலும் கடந்த சில மாதங்களாகவே முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அனைவரும் மாஸ்க்குடன் பொது வெளியில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். இதேபோன்று, அண்மையில் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்த பில்கிரிம்-ம் மாஸ்க் அணிந்தவாறு உள்ளூர் மோட்டார் வாகனத்துறை அலுவலகத்திற்கு சென்றிருக்கின்றார்.
அப்போது, மாஸ்க் அணிந்திருப்பதை சற்றும் கவனிக்காத அவர் நேரடியாக கேமிராவின் முன்பு நின்று புகைப்படத்திற்காக போஸ் கொடுத்திருக்கின்றார். இதனை பில்கிரிம் முன்னாடி அமர்ந்திருந்த ஓட்டுநர் உரிமத்திற்கான புகைப்படத்தை எடுக்கும் அதிகாரியும் கவனிக்கவில்லை. புகைப்படத்தை எடுத்த பின்னரே இருவரும் தவறை உணர்ந்திருக்கின்றனர்.
இதையடுத்து மீண்டும் பில்கிரிம்மை அமர வைத்து அந்த அதிகாரி புகைப்படத்தை எடுத்திருக்கின்றார். சரி, அனைத்தும் சரியாகவிட்டது என நினைத்து பில்கிரிம் வீடு புறப்பட்டார். இந்த நிலையில், பில்கிரிம்மின் ஓட்டுநர் உரிமம் அவரது கைகளுக்கு மிக சமீபத்தில் வந்து சேர்ந்திருந்தது.
அதை பிரிதித்து பார்த்தபோது அவருக்கு செம்ம ஷாக் காத்திருந்தது. திருத்தி எடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு பதிலாக, முன்னதாக மாஸ்க்குடன் எடுக்கப்பட்ட புகைப்படமே அதில் இடம் பெற்றிருந்தது. இதனைக் கண்டு அதிர்ந்துபோன பில்கிரிம், தன்னுடைய 35 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ஓட்டுநர் உரிமத்தில் என்னுடைய பாதி முகம் மட்டுமே தெரிகின்றது என கிண்டலாக தெரிவித்திருக்கின்றார்.
மாஸ்க் அணிந்தவாறு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பில்கிரிம்மின் கண்கள், புருவங்கள், நெற்றி, தலை முடி மற்றும் கழுத்து ஆகியவை மட்டுமே வெளிப்படையாக தெரியும் வகையில் இருக்கின்றது. இவற்றை மட்டுமே வைத்து அப்படத்தில் இருப்பவர் யார் என்பதை கண்டறிய முடியாது.
இதனை சற்றும் கவனிக்காமல் அரசு அதிகாரிகள் ஓட்டுநர் உரிமத்தை பிரிண்ட் போட்டு அனுப்பி வைத்திருக்கின்றனர். இதனால், பில்கிரிம் மட்டுமின்றி அமெரிக்கர்கள் பலர் அதிர்ச்சியுற்றிருக்கின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலர் தங்களின் பங்காக, அதிகாரிகளின் கவன குறைவை மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
Comments
Post a Comment