திருப்பதி உருவான தினத்தை பொதுமக்களும், பக்தர்களும் கொண்டாடினர். அவர்கள், அலிபிரி பாத மண்டபத்தில் சிறப்புப்பூஜைகள் செய்தனர்.
திருப்பதி,
வைகுண்டத்தில் இருந்து வெங்கடாஜலபதி விட்டு பிரிந்த மகாலட்சுமி பூலோகத்தில் திருப்பதி பகுதிக்கு வந்தார். இதையறிந்த வெங்கடாஜலபதி, மகாலட்சுமியை தேடி திருப்பதிக்கு வரும்போது, தனது முதல் பாதத்தை திருப்பதியில் உள்ள ஒரு மலைமீது பதித்தார். அங்கு, வெங்கடாஜலபதியின் திருப்பாதங்கள் உள்ளன.
ஆன்மிக பெரியோர்களான ஆதிசங்கரர், ராமானுஜர் ஆகியோர் திருப்பதிக்கு வந்து வெங்கடாஜலபதியை வழிபட்டுள்ளனர். அவ்வாறு முதல் தடவையாக ராமானுஜர் திருப்பதிக்கு வந்தபோது, திருமலை அடிவாரத்தில் ஒரு புளிய மரத்தின் அடியில் நிழலுக்காக ஒதுங்கி, ஓய்வெடுத்தார். இரவில் ராமானுஜர் தனது சீடர்களுடன் புளியமரத்தின் அடியில் அமர்ந்து தினமும் கம்ப ராமாயணம் கதை கேட்டு வந்தார். அவர், புளிய மரத்தின் அடியில் தங்கி ஓய்வெடுத்ததால் அந்தப் பகுதியை ‘அடிபுளி’ என்று அழைத்தனர். அந்தப் பெயர் காலப்போக்கில் மருவி ‘அலிபிரி’ என்று அழைக்கப்படுகிறது. அதேபோல் ராமானுஜர், அலிபிரியை சேர்ந்த ஒரு பகுதிக்கு, ‘திருப்பதி’ என்று பெயர் சூட்டினார்.
இந்தநிலையில் திருப்பதியைச் சேர்ந்த பொதுமக்கள் தரப்பில் டி.எம்.சி பாஸ்கர், ஹேமந்த்யாதவ், சோடம்மது மற்றும் பொதுமக்கள் ஆகியோர் முதல் முறையாக ஒரு குழுவை அமைத்து, அலிபிரியில் உள்ள பாத மண்டபத்தில் நேற்று ‘திருப்பதி’ உதயமான நாளை கொண்டாடினர். அலிபிரி பாத மண்டபத்தில் வெங்கடாஜலபதியின் பாதத்துக்கு சிறப்புப்பூஜை செய்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
திருப்பதி வைணவ பெரியார் ராமானுஜரால் உருவாக்கப்பட்டது. அந்தக் காலத்தில் குக்கிராமமாக இருந்த திருப்பதி தற்போது பெருநகரமாக உருவாகி உள்ளது. திருப்பதிக்கு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்று வருவது வெங்கடேஸ்வரசாமியின் ஆசீர்வாதமாகும். திருப்பதி நகரம் கோவிந்தராஜசாமி கோவில் கட்டுமானத்துடன் தொடங்கியது.
கோவிலை சுற்றி மக்கள் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. அதேபோல் அந்தணர்களுக்காக அக்ரஹாரமும் உருவாக்கப்பட்டது. ‘திருப்பதி’ என்ற சொல் ராமானுஜரின் திருவாய் மொழியால் உருவானது. ஒவ்வொரு ஆண்டும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ‘திருப்பதி’ ஊர் உருவானதை நினைவு கூர்ந்து விழாவாக கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்கள்.
Comments
Post a Comment