நான் ஒரு திமிங்கலத்தின் வாயில் இருக்கிறேன் என புரிந்துக்கொண்டேன். என்னை விழுங்குவதற்கு திமிங்கலம் முயற்சி செய்துக்கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் ஆழ்கடலில் லாப்ஸ்ட்டர் எனும் ராட்சத இறால்களை பிடிக்க சென்ற மீனவரை திமிங்கலம் விழுங்கி மீண்டும் கக்கிய சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் massachusetts மாகாணத்தை சேர்ந்தவர் மைக்கல் பேக்கார்ட் ( Micheal packard). இவர் சுமார் 40 ஆண்டுகளாக லாப்ஸ்ட்டர் எனும் ராட்சத இறால்களை பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். வெள்ளிக்கிழமை கேப் கோட் கடல் பகுதியில் லாப்ஸ்ட்டர் டைவிங் செய்துள்ளார். 45 அடி ஆழத்தில் டைவிங் செய்துக்கொண்டிருந்த போது அவரை திமிங்கிலம் விழுங்கியுள்ளது. முதலில் தான் சுறாவுக்கு இரையாகிவிட்டதாக கருதியுள்ளார். பின்னர் தான் திமிங்கலம் விழுங்கியது அவருக்கு தெரிந்தது. 30 நொடிகளில் திமிங்கலம் அவரை மீண்டும் வெளியில் கக்கியது.
திமிங்கலத்தின் வாயில் இருந்த திக் திக் நிமிடங்கள் குறித்து பேக்கார்ட் கூறுகையில், “ திடீரென ஒரு பெரிய அழுத்தத்தை உணர்ந்தேன். எல்லாமே இருளாக இருந்தது. நான் நகர்வதை என்னால் உணர முடிந்தது. கடவுளே நான் ஒரு சுறாவால் விழுங்கப்பட்டேன் என நினைத்தேன். என்னைச் சுற்றி பற்கள் எதுவும் இல்லை என்பதை உணர்ந்தேன். எனக்கு பெரிய அளவில் வலியும் இல்லை. நான் ஒரு திமிங்கலத்தின் வாயில் இருக்கிறேன் என புரிந்துக்கொண்டேன். என்னை விழுங்குவதற்கு திமிங்கலம் முயற்சி செய்துக்கொண்டிருக்கிறது.
என்னால் தப்பிக்க முடியாது. அவ்வளவுதான் என்னுடைய வாழ்க்கையே முடிந்துவிட்டது என நினைத்தேன். எனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை நினைத்துக்கொண்டேன். ஆனால் சில நொடிகளில் நான் கடலின் மேற்பரப்புக்கு வந்துவிட்டது தெரிந்தது. திமிங்கலத்தின் வாயில் இருந்து விடுவிக்கப்பட்டதை உணர்ந்தேன். நான் காற்றில் தூக்கி வீசப்பட்டேன். கடல் பரப்பில் மிதந்துக்கொண்டிருந்தேன். நான் இப்போது உயிருடன் இருக்கிறேன். இந்த கதையை எல்லாம் சொல்கிறேன் என்பதை என்னால் நம்பமுடியவில்லை.
நீரில் மிதந்துக்கொண்டிருந்தவரை அப்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பேக்கார்ட் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. அவருக்கு எலும்பு முறிவு மட்டுமே ஏற்பட்டுள்ளது. பேக்கார்டை விழுங்கியது ஹம்பக் வகை திமிங்கலம் எனக் கூறப்படுகிறது. திமிங்கலங்கள் மனிதர்களை விழுங்காது. மீன்களை பிடிக்கும்போது இவரை விழுங்கியிருக்கும் சில நொடிகளில் மீண்டும் கக்கி வெளியேற்றியுள்ளது.
Comments
Post a Comment