"Go Corona Go" வீடியோ கேம்... 14 வயது சிறுவனின் முயற்சி!
- Get link
- X
- Other Apps
கொரோனா வைரஸ் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பெங்களுரூவைச் சேர்ந்த 14 வயது சிறுவன் வீடியோ கேம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தல் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வீட்டில் இருக்கும் 4 சுவர்கள் மட்டுமே பாதுகாப்பு என்ற நிலையில் மக்கள் முடங்கியிருக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். வெளியில் செல்லும்போதேல்லாம் முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு மற்றும் முன்களப் பணியாளர்கள் தொடர்ந்து மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
வைரஸிடம் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் தடுப்பூசி மற்றும் வருமுன் காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது என்ற இருவழிகள் மட்டுமே உள்ளன. இதனை அனைத்து தளங்களிலும் பிரச்சாரமாக மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெங்களுருவைச் சேர்ந்த 14 வயது சிறுவன், வீடியோ கேம் தளங்களிலும் கொரோனா பிரச்சாரத்தை கொண்டு சேர்த்துள்ளார். டெக்னாலஜியால் அனைத்தும் சாத்தியம் என்பதையும், வீட்டில் முடங்கியிருக்கும் பலரும் வீடியோ கேம்களில் மட்டுமே கவனம் செலுத்துவதால், அதனையும் பிரச்சாரக் களமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்த வீடியோ கேம்மை அவர் உருவாக்கியுள்ளார்.
சிறுவனின் பெயர் அபினவ் ரஞ்சித் தாஸ். "Go Corona Go" என்ற பெயரில் கேமை உருவாக்கியுள்ளார். உயர்தரமான அனிமேஷன், விறுவிறுப்பான டாஸ்க்குகள் மற்றும் மியூசிக் என விளையாடுபவர்களை கேம் உடன் ஒன்றியிருக்க வைப்பது மட்டுமில்லாமல், அதில் இருக்கும் 3 லெவல்களும் விளையாடுபவர்களை கொரோனா வைரஸூக்கு எதிராக பயிற்றுவிக்கிறது. கைகளை சுத்தமாக கழுவ வேண்டும், சானிடைசர் பயன்படுத்த வேண்டும், வைரஸிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என, அந்த கேம்மின் லெவல்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
ஒவ்வொரு லெவல்களிலும் தடைகளாக வைரஸ் இருக்கும். அவற்றை கடந்து சென்று பாதுகாப்பு கவசங்களான மாஸ்க் மற்றும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு கவச உடை ஆகியவற்றை எடுக்க வேண்டும். கடைசி லெவலில் வெற்றி பெறுபவர்களுக்கு தடுப்பூசி பரிசாக வழங்கப்படும். இதுகுறித்து பேசிய வீடியோ கேம்மை உருவாக்கிய சிறுவன் அபினவ் ரஞ்சித் தாஸ், "வீடுகளில் முடங்கியிருக்கும் மக்கள் அதிகமாக வீடியோ கேம்களில் பொழுதை கழிக்கின்றனர். அரசும் கொரோனா குறித்து பல்வேறு தளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்த இரு புள்ளிகளையும் ஒரே தளத்தில் இணைக்க வேண்டும் என எண்ணி, நான் இந்த வீடியோ கேம்மை உருவாக்கியிருக்கேன்.
விளையாடும் மக்களுக்கு எந்த இடத்திலும் சுவாரஸ்யம் குறையாத வகையிலும். அதேநேரத்தில் விழிப்புணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தும் விதத்திலும் கேம்மை வடிவமைத்துள்ளேன். கேம் விளையாடும் அதேநேரத்தில் வெளியில் செல்லும்போது, வீடியோ கேம்மில் இருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உள்வாங்கி அதனை பின்பற்றினால் மிகவும் மகிழ்ச்சி" எனக் கூறியுள்ளார்.
அபினவ் ரஞ்சித் தாஸ் கோடிங் மீது அதிக ஆர்வம் கொண்டதால், அண்மையில் அதனை கற்கத் தொடங்கியுள்ளார். இதன் வழியாக தான் கற்றதை வீடியோ கேம்மாக உருவாக்கி தன்னுடைய பெற்றோரையும் பெருமைபடுத்தியுள்ளார். அபினவ்வால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக பெற்றோரும் தெரிவித்துள்ளனர்.
also read :
நோய் எதிர்ப்பு சக்தி உற்பத்தியில் கோவேக்சினை மிஞ்சிய கோவிஷீல்டு தடுப்பூசி - ஆய்வில் கண்டுபிடிப்பு
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment