ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே ரெயில் பாதை அமைக்கும் பணிக்கு ஏற்கனவே மண் ஆய்வு முடிந்த நிலையில் பட்ஜெட்டில் ரூ.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டதால், இந்த திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படுகிறது.
தனுஷ்கோடி கடலோரத்தில் மீண்டும் ரெயில் பாதை அமைய உள்ள பகுதி அம்புக் குறியிட்டு காட்டப்பட்டு உள்ளது.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றுலாத்தலமான தனுஷ்கோடி அமைந்துள்ளது.
1964-ம் ஆண்டுக்கு முன்பு வரை மிகப்பெரிய தொழில் நகரமாக விளங்கிய தனுஷ்கோடி, கடந்த 1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரும் புயல் காரணமாக முழுமையாக அழிந்து போனது. புயலில் தனுஷ்கோடி வரையிலான ரெயில் பாதையும் கடல் நீரில் அடித்து செல்லப்பட்டது.
அதன்பின்பு தனுஷ்கோடிக்கு ரெயில் திட்டங்கள் எதுவும் கொண்டு வரப்படவில்லை.
இந்தநிலையில் ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி வரையிலும் ரெயில் பாதை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்தியஅரசால் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே புதிய ரெயில் பாதை அமைக்க முதற்கட்டமாக ரூ.75 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- ராமேசுவரத்தில் இருந்து புயலால் அழிந்து போன தனுஷ்கோடி வரை 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்துக்கு முதற்கட்டமாக ரூ. 75 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.
ராமேசுவரம்- தனுஷ்கோடி வரையிலான புதிய ரெயில்பாதை பணி விரைவில் தொடங்கப்படும். வருகிற 2024-ம் ஆண்டு மார்ச் மாத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தாலும், அதற்கு முன்னதாகவே முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் கடந்த 1 ஆண்டுக்கு முன்பே ராமேசுவரம் - தனுஷ்கோடி இடையே புதிய ரெயில்பாதை அமைப்பது குறித்து மண்ஆய்வு பணியும் நடந்து முடிந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இது பற்றி ராமேசுவரம் தங்கும்விடுதி சங்கத்தின் செயலாளர் நாகராஜ் கூறும் போது, “இந்த திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, தனுஷ்கோடி வரை ரெயில் விடப்படும்போது, ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் தனுஷ்கோடி பகுதி மிகப்பெரிய சுற்றுலாதலமாகவும் மாறும்” என்று கூறினார்.
Comments
Post a Comment