விமான பணிப்பெண்கள் ஏன் தங்கள் ஒரு கையை முதுகுக்கு பின்னால் மடித்து வைத்து கொள்கின்றனர்? என்ற சந்தேகத்திற்கான விளக்கத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.
நீங்கள் விமானத்தின் கேபினுக்குள் செல்லும்போது, விமான பணிப்பெண்கள் உங்களை வரவேற்பார்கள். அப்போது அவர்கள் தங்கள் கையை முதுகுக்கு பின்னால் மடித்து வைத்திருப்பார்கள். நீங்கள் விமானங்களில் அடிக்கடி பயணம் செய்யக்கூடியவர் என்றாலும் சரி, அல்லது எப்போதாவது பயணிக்க கூடியவர் என்றாலும் சரி, விமான பணிப்பெண்களின் இந்த செய்கையை நீங்கள் கவனித்திருக்க கூடும்.
அப்படி கவனித்திருந்தால், விமான பணிப்பெண்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்? என்ற சந்தேகம் உங்களுக்கு எழுந்திருக்கலாம். அந்த சந்தேகத்திற்கான விளக்கத்தை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம். விமான பணிப்பெண்களின் வேலை பல்வேறு பொறுப்புகள் நிரம்பியது என்பது நம் அனைவருக்கும் நிச்சயமாக தெரியும்.
விமானங்கள் நேர்த்தியாக இருப்பதை உறுதி செய்வது, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது என அவர்களுக்கு ஏராளமான பொறுப்புகள் இருக்கின்றன. ஒரு கையை தங்கள் முதுகுக்கு பின்னால் வைத்திருப்பதும் அவர்களுக்கான பொறுப்புகளில் ஒன்று. ஆனால் அது ஏன்? என்பதுதான் நம்முடைய சந்தேகமே.
எளிமையாக சொல்வதென்றால், அவர்கள் தங்கள் கையில் கவுன்டர் (Counter) ஒன்றை மறைத்து வைத்திருப்பதுதான் இதற்கு காரணம். ஸ்கேன் செய்யப்பட்ட டிக்கெட்களின் எண்ணிக்கையுடன், விமானத்தில் ஏறிய பயணிகளின் எண்ணிக்கை ஒத்துபோவதை உறுதி செய்வதற்காக இந்த கவுன்டரை விமான பணிப்பெண்கள் பயன்படுத்துகிறார்கள்.
இதன் மூலம் விமானங்களில், குறிப்பாக பிஸியான விமானங்களில் உள்ள பயணிகளின் தெளிவான எண்ணிக்கை அவர்களுக்கு தெரியவரும். பொதுவாக நாம் சுற்றுலா செல்கிறோம் என்றால், வாகனத்தில் அனைவரும் ஏறி விட்டார்களா? என்பதை யாரேனும் ஒருவர் முன்னால் நின்று விரல் விட்டு எண்ணி உறுதி செய்து கொண்டிருப்பார்.
அப்போது வாகனத்தில் உள்ள அனைவரின் கவனமும், விரல் விட்டு எண்ணி கொண்டிருப்பவரின் மீதுதான் குவிந்திருக்கும். ஆனால் எவ்வித தொந்தரவு அல்லது சங்கடமும் இல்லாமல் பயணிகளின் எண்ணிக்கையை உறுதி செய்வதற்காகவே விமான பணிப்பெண்கள் கவுன்டர்களை பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொரு பயணி புதிதாக விமானத்தில் ஏறும்போதும், அவர்கள் இந்த கவுன்டரை ஒரு முறை 'க்ளிக்' செய்து கொள்வார்கள்.
இதன் மூலம் இறுதியில் அவர்களுக்கு குழப்பம் இல்லாத தெளிவான எண்ணிக்கை கிடைக்கும். இந்த கவுன்டர்கள் கைக்கு அடக்கமாக சிறிதாக இருக்கும். சில சமயங்களில் பயணிகள் விமானத்தில் ஏறும்போது எண்ணிக்கை கணக்கிடப்படும். அப்போது விமான பணிப்பெண்களின் ஒரு கை பின்னால் மடித்து வைக்கப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம்.
இன்னும் சில சமயங்களில் பயணிகள் இருக்கைகளில் அமர்ந்த பிறகு எண்ணிக்கை கணக்கிடப்படும். அப்போது விமான பணிப்பெண்கள் ஒரு கையை முதுகுக்கு பின்னால் மடித்து வைத்து கொண்டே நடந்து செல்வதை காணலாம். இன்னும் சில விமானங்களில் பயணிகள் ஏறும்போதும், இருக்கைகளில் அமர்ந்த பிறகும் என இரண்டு முறை எண்ணிக்கை கணக்கிடப்படும்.
அடுத்த முறை நீங்கள் விமானத்தில் செல்லும்போது முதுகுக்கு பின்னால் மடித்து வைக்கப்பட்டிருக்கும் விமான பணிப்பெண்களின் கைகளை நன்றாக கவனித்து பாருங்கள். அவர்கள் சிறிய கவுன்டரை கைகளுக்குள் வைத்து கொண்டு, 'க்ளிக்' செய்து கொண்டே இருப்பதை அப்போது நீங்கள் தெளிவாக பார்க்கலாம்.
Comments
Post a Comment