உலகளவில் கிரிப்டோகரன்சி வர்த்தகம் மக்கள் மத்தியில் வேகமாக வளர்ந்து வரும் இதேவேளையில் கிரிப்டோகரன்சி வைத்து பல்வேறு குற்றங்கள் நடந்து வருகிறது. இந்தப் பிரச்சனையைத் தீர்க்க ஒவ்வொரு நாட்டின் அரசே தனது நாணய மதிப்பின் அடிப்படையாகக் கொண்டு ஒரு கிரிப்டோகரன்சியை உருவாக்கினால் பாதுகாப்புடன், பரிமாற்றங்களைக் கண்காணிக்கவும் முடியும் எனக் கருத்து நிலவி வருகிறது.
இதன் அடிப்படையில் அமெரிக்காவில் பல முன்னணி நிறுவனங்கள் வங்கி மற்றும் அரசு அமைப்புகள் இணைந்து புதிதாகக் கிரிப்டோகரன்சியை உருவாக்கும் பணியில் மிகவும் ரகசியமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்தியாவும் புதிதாக டிஜிட்டல் கரன்சியை உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளது.
டிஜிட்டல் கரன்சி
டிஜிட்டல் கரன்சி குறித்து ரிசர்வ் வங்கியின் ஒரு முக்கியக் குழு தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் டிஜிட்டல் கரன்சி குறித்து முடிவுகளை அறிவிக்கப்படும் என ரிசர்வ் வங்கியின் துணை கவர்னரான B.P.Kanungo இன்று நடந்து முடிந்த ரிசர்வ் வங்கியின் இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார்.
பட்ஜெட் அறிக்கை
பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யும் முன்பே தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் ரிசர்வ் வங்கியும், மத்திய நிதியமைச்சகமும் இணைந்து ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் கரன்சியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்படலாம் எனக் கணித்திருந்தது.
புதிய டிஜிட்டல் கரன்சி
ஆனால் பட்ஜெட் அறிக்கையில் எதிர்பார்க்கப்பட்டது பெரும்பாலானவை நடக்காமல் போனது பெரும் ஏமாற்றமாக விளங்கினாலும், இன்று ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் B.P.Kanungo கூறியதன் மூலம் ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்சி உருவாக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பது உறுதியாகியுள்ளது.
தனியார் கிரிப்டோகரன்சி
மத்திய அரசு இந்தியாவில் தனியார் கிரிப்டோகரன்சியின் பாதுகாப்பின்மை மற்றும் பல மோசடிகளுக்குப் பயன்படுத்துவதை உணர்ந்த நிலையில் இந்தியாவில் முன்னணி கிரிப்டோகரன்சி என அழைக்கப்படும் டிஜிட்டல் கரன்சி தடை செய்ய முடிவு செய்துள்ளது. இதேவேளையில் தனியார் கிரிப்டோகரன்சிக்கு மாறாக இந்திய ரூபாய் மதிப்பில் புதிய டிஜிட்டல் கரன்சி உருவாக்க முடிவு செய்துள்ளது.
சக்திகாந்த தாஸ்
டிஜிட்டல் கரன்சி குறித்து ரிசர்வ் வங்கியின் சக்திகாந்த தாஸ் அவர்களும் டிஜிட்டல் பேமெண்ட் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனால் இந்தியா உலக நாடுகளுக்குப் போட்டியாகப் புதிய டிஜிட்டல் கரன்சியை உருவாக்கி வருகிறது.
Comments
Post a Comment