புத்தகங்களை வாசித்துக் காட்ட வேண்டும், தலையணை சண்டை போட வேண்டும், நாய்க்குட்டிகள் போல மல்யுத்தம் செய்ய வேண்டும் என சில நேரங்களில் வாடிக்கையாளர்களிடமிருந்து விநோத கோரிக்கைகள் தனக்கு வரும் என்று கூறுகிறார் கீலி ஷூப்.
உலக நாடுகளில் கொரோனா தொற்று நோய் தொடங்கியதில் இருந்தே, சமூக விலகல் எனும் புதிய முறையின் காரணமாக ஒருவரை ஒருவர் அரவணைக்கக்கூட வழியில்லாமல் தனித்து விடப்பட்டிருக்கின்றனர் மக்கள். அயல்நாடுகளில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, கைகொடுப்பது தான் வழக்கமாக இருந்து வருகிறது, ஆனால் இப்பழக்கம் கூட தற்போது மாறத்தொடங்கிவிட்டது, அதற்கு பதிலாக இந்திய கலாச்சாரத்தை பின்பற்றி கைகளை கூப்பி வணக்கம் செலுத்தத் தொடங்கியிருக்கின்றனர்.
நெருங்கியவர்கள் கூட நம்மை விட்டு விலகிச் செல்லும் போது அரவணைப்பின் மகத்துவத்தை மக்கள் இழந்திருக்கின்றனர். இந்த நிலையில் ஒரு சில நாடுகளில் கட்டிப்பிடிப்பதையே தொழில்முறையாக தொடங்கியிருக்கின்றனர். ‘மருத்துவ முத்தம்’ என்பது நமக்கெல்லாம் அறிமுகமான ஒரு சொல் தான், பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது நடிகர் ஆரவ், ஓவியாவுக்கு கொடுத்த இந்த மருத்துவ முத்தம் தமிழகம் முழுவதும் ஒரு புதிய ட்ரெண்டையே தொடங்கி வைத்தது.
இதே போன்ற காரணங்களுக்காகத்தான் மருத்துவ கட்டிப்பிடித்தல் எனும் தொழில் தொடங்கப்பட்டுள்ளதாக விளக்கம் தருகிறார்கள் இதில் ஈடுபட்டுள்ள தொழில்முறை கட்டிப்பிடிப்பவர்கள். இது என்ன விநோதம் என நினைக்கலாம், இத்தொழில் குறித்தும் அதில் ஏற்பட்ட சில விநோத அனுபவங்கள் குறித்தும் மனம் திறந்துள்ளார் 7 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வரும் கீலி ஷூப் என்ற பெண். இவர் அமெரிக்காவின் சிகாகோவைச் சேர்ந்தவர்.
தற்போது கொரோனா காலம் என்பதால் பலரும் மன அழுத்தத்தில் தவித்து வருவதாகவும், அதில் இருந்து விடுபட அவர்களுக்கு மனித அரவணைப்பு அவசியமாகிறது என்று விளக்கம் தருகிறார் கீலி ஷூப். இதற்காக ஒரு மணி நேரத்திற்கு 100 டாலர்கள் கட்டணமாக வசூலிக்கிறார். நம்ம ஊர் மதிப்பில் தோராயமாக 7300 ரூபாய் கட்டணம் பெறுகிறார்.
தன்னுடைய பணியினை மிகவும் கட்டுக்கோப்பாக செய்துவருவதாகவும், ஒரு போதும் செக்ஸூவலாக செய்வதில்லை எனவும், தன்னுடைய விதிமுறைகளுக்கு உட்பட்டே இதனை செய்து வருவதாகவும் கூறுகிறார் கீலி ஷூப். இருப்பினும் வாடிக்கையாளர்களிடமிருந்து புத்தகங்களை வாசித்துக் காட்ட வேண்டும், தலையணை சண்டை போட வேண்டும், நாய்க்குட்டிகள் போல மல்யுத்தம் செய்ய வேண்டும் என சில நேரங்களில் விநோத கோரிக்கைகள் தனக்கு வரும் என்று கூறும் கீலி ஷூப், அவ்வாறான கோரிக்கைகள் தன்னுடைய விதிமுறைகளுக்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே அவற்றை செய்வேன் எனவும் தெரிவிக்கிறார் அவர். இருப்பினும் இது போன்ற கோரிக்கைகளை செய்வதன் மூலம் தனது வாடிக்கையாளர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு வெளிவர தான் உதவிகரமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதே நேரத்தில் மிக சில நேரங்களில் வாடிக்கையாளர்களிடமிருந்து செக்ஸூவல் கோரிக்கைகளும் வந்துள்ளன எனவும் கூறினார்.
கீலி ஷூப் போலவே கட்டிப்பிடிப்பதை தொழிலாக கொண்டிருக்கும் கன்சாஸைச் சேர்ந்த ராபின் மேரி என்ற பெண், ஆண்டுக்கு 28 லட்ச ரூபாய் சம்பாதிப்பதாக கூறுகிறார். இவர் கன்சாஸ் நகரில் இதற்காகவே வாடகைக்கு ஒரு இடத்தை எடுத்து அங்கு தன்னுடைய சேவைகளை அளித்து வருகிறார். இவருடைய செஷன்கள் ஒவ்வொன்றும் பொதுவாக ஒன்று முதல் நான்கு மணி நேரம் நீடிக்கும் என அவர் தெரிவித்தார்.
தொழில்முறை கட்டிப்பித்தல் என்பது கேட்க விநோதமாக இருந்தாலும், மன அழுத்தத்தில் தனித்து விடப்பட்ட நபர்களுக்கு மட்டும் தான் அதன் அவசியமும், மகத்துவமும் புரியும் என விளக்கம் தருகின்றனர் இப்பெண்கள்.. இச்சேவை விரைவில் இந்தியாவுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...
Comments
Post a Comment