மாட்டுப் பாலுக்குப் பதில் சோயா பால் உட்பட சைவ பால் உற்பத்திக்கு மாற வேண்டும்’’ என்று இந்தியாவின் மிகப்பெரிய அமுல் நிறுவனத்துக்கு ‘பீட்டா’ அமைப்பு கடிதம் எழுதி உள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பி உள்ளது.
விலங்குகள் நல உரிமை அமைப்பான ‘பீட்டா’ அமெரிக்காவின் வெர்ஜினியாவில் உள்ள நார்போல்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இறைச்சிக்காகவும், தோல் ஆடைகளுக்காகவும், ஆய்வுக் கூடங்களில் சோதனை செய்வதற்கும், சர்க்கஸ் போன்ற பொழுது போக்குகளுக்காகவும் விலங்குகள் பயன்படுத்துவதை எதிர்த்து வருகிறது. விலங்குகளை சித்ரவதை செய்ய கூடாது என்று பிரச்சாரம் செய்து வருகிறது.
அதன் அடிப்படையில்தான் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் வரை வழக்கு தொடுத்தது. எனினும், மக்கள் பேராதரவு மூலம் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.
இந்நிலையில், மாட்டுப் பாலுக்குப் பதில், சைவ பால் உற்பத்திக்கு மாற வேண்டும் என்று வலியுறுத்தி அமுல் நிறுவனத்துக்கு ‘பீட்டா’ அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தது. அதன்படி, சோயா போன்ற இயற்கை தாவர வித்துகளில் இருந்து பால் தயாரிக்கலாம் என்று கூறியுள்ளது.
இந்தியாவில் வெண்மை புரட்சிக்கு வித்திட்டது அமுல் நிறுவனம். குஜராத்தில் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தைப் பின்பற்றி பல மாநிலங்கள் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இதன்மூலம் பால் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவைப் பெற்றுள்ளது.
வளர்ந்து வரும் சைவ உணவு மற்றும் பால் சந்தையை பயன்படுத்திக் கொண்டுபால் கூட்டுறவு சமூகம் பயனடைய வேண்டும் என்று விரும்புகிறோம் என்றுபீட்டா எழுதியது. அதற்கு அமுல் நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ்.சோதி அளித்த பதிலில், ‘‘அமுல்நிறுவனத்தின் மூலம்10 கோடி நிலமற்ற பால் உற்பத்தி விவசாயிகள் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை பீட்டா வழங்குமா? விவசாயிகள் 10 கோடி பேரில் 70 சதவீதம் பேர் நிலமற்றவர்கள். அவர்களுடைய குழந்தைகளின் கல்வி கட்டணத்தை பீட்டாசெலுத்துமா? அவர்களில் எத்தனை பேர், விலையுயர்ந்த ஆய்வுகள் கொண்ட தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் சைவ உணவை தயாரிக்க முடியும்? அத்துடன் சோயா பாலின் விலை மிகவும் அதிகம். அந்த பால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கட்டுப்படியாகாது’’ என்று கூறினார். கடந்த 75 ஆண்டுகளாக உருவாக்கியுள்ள விவசாயிகளின் வளங்களை பணக்கார வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்து, மரபணு மாற்றப்பட்ட சோயாவை அதிக விலைக்கு சந்தைப்படுத்த வேண்டும் என்பதே குறிக்கோளாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ‘பீட்டா’வின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பும் ஆதரவும் பெருகி வருகிறது. ஒரு பயனாளர் கூறும்போது, ‘‘மூர்க்கத்தனமான கோரிக்கை’’ என்று கருத்து வெளியிட்டார்.
இன்னொரு பயனாளர், ‘‘பீட்டாவின் கோரிக்கைளை அமுல் நிறுவனம் ஏற்க கூடாது. அதற்குப் பதில், இத்தனை ஆண்டுகளாக செய்த பணிகளை இன்னும் சிறப்புடன் செய்ய வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
மற்றொரு பயனாளர், ‘‘இந்தியாவிடம் பீட்டா கூறுவதை போல் அமெரிக்கா, ஆஸ்திரேலிய நாடுகளிடமும் பால் பண்ணைகளை ஒழிக்கவும், இறைச்சி உற்பத்தியை நிறுத்தவும் கூற வேண்டும்’’ என்று கோபமாக கூறியுள்ளார்.
ஒரு பயனாளர் கூறும்போது, ‘‘இந்தியாவில் தினமும் பால் வாங்க முடியாமல் பலர் தவிக்கின்றனர். அப்படி இருக்கும் போது, அதிக விலை கொடுத்து சோயா பாலை எப்படி வாங்க முடியும்’’ என்று கேள்வி எழுப்பி உள்ளார். ‘‘ஏன் இந்த கேள்வியை சீனாவிடம் பீட்டா கேட்க தயங்குகிறது?’’ என்று மற்றொருவர் கூறியுள்ளார்.
ஆனால், ‘‘நாய்ப் பாலை குடிப்பீர்களா? மாட்டீர்கள்? ஏன்? நாய்ப் பால் அதன் குட்டிகளுக்கு. அதேபோல்தான் பூனை, எலி போன்றவற்றுக்கும். மனித பால் குழந்தைகளுக்கு. குழந்தை பருவத்துக்குப் பிறகு யாருக்கும் பால் தேவையில்லை?’’ என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இதுபோல் வாத பிரதிவாதங்கள் சமூக வலைதளங்களில் குவிந்து வருகின்றன.
இதற்கிடையில், அமெரிக்காவின் ‘பர்கர் கிங்’ இந்திய பிரிவுக்கு ‘பீட்டா’ அமைப்பு கடிதம் எழுதி உள்ளது. அதில், ‘‘சோயா பாலில் தயாரிக்கப்பட்ட ஊப்பர்ஸ்களை (பால் பொருளில் தயாரிக்கப்படும் உணவு உருண்டைகள்) விற்க வேண்டும். இறைச்சி இல்லாத உணவுகளை வழங்க ஜெர்மனியில் உள்ள பர்கர் கிங் முயற்சித்து வருகிறது. இதேபோல் இறைச்சி, பால் பொருட்கள் இல்லாத சைவ தாவர உணவுகளை வழங்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கும் சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. ‘‘நாங்கள் சோயா பாலில் தயாரிக்கப்பட்ட உணவு மற்றும் சைவ பர்கர்களை உண்ண ஆர்வமுடன் இருக்கிறோம்’’ என்று ஒருவர் கூறியுள்ளார்.
இன்னொருவர், ‘‘நாங்கள் எதை சாப்பிட வேண்டும் என்று நீங்கள் திணிக்க முடியாது. விரும்பும் உணவுகளை சாப்பிடும் உரிமை எல்லோருக்கும் உள்ளது’’ என்று கோபமாக கூறியுள்ளார்.
Comments
Post a Comment