சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வரும்போது நாம் ஆன்டிபயாடிக் பற்றி அதிகம் பேசுவோம். சரி..
இந்த ஆன்டிபயாடிக் என்பது என்ன? உயிரியல் பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்டு, நோய்க்கிருமிகளான பாக்டீரியாவை அழிக்கும் திறன்கொண்டவை ஆன்டிபயாடிக் எனப்படுகிறது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் போகும்போதுதான் நோய்கள் உருவாகின்றன. ஆன்டிபயாடிக் மருந்துகள் நோய்க்கு காரணமான பாக்டீரியாக்களை கொன்று, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. நமது உச்சி முதல் பாதம் வரை ஏராளமான நோய்க்கிருமிகள் நோயை பரப்புவதற்காக உடலில் காத்திருக்கின்றன. எதிர்ப்பு சக்தி இருக்கும் வரை கிருமிகளின் செயல் எதுவும் எடுபடாது. எதிர்ப்பு சக்தி குறையும்போதும், அந்த கிருமிகளின் வீரியம் அதிகரிக்கும்போதும் நோய் நம்மை தாக்குகிறது. நோய்த் தாக்கும்போது மருத்துவரிடம் செல்கிறோம். அவர் பரிசோதித்துவிட்டு மாத்திரைகளை எழுதிக்கொடுப்பார். எந்த கிருமி உடலைத் தாக்கியிருக்கிறது? அதை அழிக்க எந்த ஆன்டிபயாடிக் மருந்து- எந்த அளவுக்கு- எத்தனை நாட்களுக்கு தேவை என்பதை மருத்துவர் தீர்மானித்து பரிந்துரைப்பார்.
இதில் குறிப்பிடத்தக்க நெருக்கடி என்னவென்றால், சிலர் நோயின் அறிகுறி சற்று குறைந்துவிட்டாலே அந்த மருந்துகளை சாப்பிடுவதை நிறுத்திவிடுகிறார்கள். பாதியிலே மருந்தை நிறுத்தும்போது மருந்துகளுக்கு நோய் கட்டுப்படாது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி, மருந்தை எதிர்க்கும் சக்தியை பாக்டீரியாக்கள் உருவாக்கிக்கொள்ளும். அதாவது அரைகுறையாக இருக்கும் கிருமிகள் மீண்டும் முழுபலம் பெற்றுவிடும். அது ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகிவிடும். சிலர் சளி, இருமல், காய்ச்சல், தலைவலி போன்றவைகளுக்கு மருத்துவரின் ஆலோசனையின்றி, கடைகளில் போய்
சுயமாக மாத்திரைகளை வாங்கி உட்கொள்கிறார்கள். தேவையற்ற ஆன்டிபயாடிக் மாத்திரைகளை உட்கொள்ளும்போது நோய்க்கிருமிகள் அதிக சக்தியை பெற்றுவிடுகின்றன. அப்படிப்பட்டவர்களுக்கு ஒன்றுக்கு பதிலாக இரண்டு மாத்திரைகளை சாப்பிட்டாலும் நோயின் பாதிப்பு குறைவதில்லை.
சரி.. எந்தெந்த நோய்களுக்கெல்லாம் ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்ளக்கூடாது? அம்மை நோய், அக்கி, மஞ்சள்காமாலை, சாதாரண காய்ச்சல், சளி போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் தேவையில்லை.
அதை மீறி ஆன்பயாடிக் மருந்துகளை சாப்பிட்டால் என்னவாகும்?
தேவையே இல்லாத நேரத்தில் ஆன்டிபயாடிக் மருந்துகளை சாப்பிட்டால் அவை நோய்க் கிருமிகளை கொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், நல்ல பாக்டீரியாக்களையும் கொன்றுவிடும். ஜீரணசக்திக்கும்,
உயிர்ச்சத்துக்களை தருவதற்கும் நமது உடலில் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன. அவைகளையும் இவை கொன்றுவிடும். அதனால் அலர்ஜி, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை உருவாகும். அதோடு நோய்க்கிருமிகள் மருந்து மாத்திரைகளுக்கு கட்டுப்படாமல் பெருகவும் செய்யும். ஆன்டிபயாடிக் மருந்துகளை எதிர்க்கும் கிருமிகள் இருபது நிமிடங்களில் இரண்டு மடங்காக பெருகும்தன்மை கொண்டவை.
ஆன்டிபயாடிக் மருந்துகள் உடலில் வேலை செய்யாததை எப்படி அறிந்து கொள்வது?
ஏதாவது ஒரு நோய்க்கு நாம் மருந்து சாப்பிடுவதாக எடுத்துக்கொள்வோம். இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் அந்த நோய் கட்டுப்படாமல் இருந்தால், ஆன்டிபயாடிக் வேலை செய்யவில்லை என்பதை உணர்ந்துகொள்ளலாம். தாங்க முடியாத வயிற்றுவலி, அவ்வப்போது வயிற்றுப்போக்கு, சருமத்தில் கட்டி- வீக்கம் போன்ற திடீர் மாற்றங்களும் உருவாகும். அதனால் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்ளவேண்டும்.
Comments
Post a Comment