நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகளில் கடும் பாதிப்பு நேரும்போது சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், ஒவ்வாமை போன்றவை ஏற்படக்கூடும்.
நகைச்சுவை சுபாவம் கொண்டவர்களை நோக்கி நாம் ஏன் ஈர்க்கப்படுகிறோம்? நகைச்சுவை நிகழ்ச்சிகள் நம்மை ஏன் கவருகின்றன? சினிமாவில் நகைச்சுவை காட்சிகளுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது? ஏனெனில் நகைச்சுவைதான் அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் அரு மருந்து. மன இறுக்கம், மன அழுத்தம், கவலை போன்றவற்றில் இருந்து மீள வைக்கும் தன்மை நகைச்சுவைக்கு உண்டு.
அன்றாட செயல்பாடுகளில் ஏற்படும் தொய்வு, எதிர்கொள்ளும் பிரச்சினைகள், கவலைகள், கஷ்டங்கள் போன்றவை பதற்றம், டென்ஷனை உண்டாக்கக்கூடும். அதனால் ஏற்படும் மாற்றங்களால் உடலின் நோய் எதிர்ப்புத்திறன் பாதிப்புக்குள்ளாகும். அப்படி நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகளில் கடும் பாதிப்பு நேரும்போது சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், ஒவ்வாமை போன்றவை ஏற்படக்கூடும்.
இவை மட்டுமல்ல, ஹார்மோன்களின் செயல்பாடுகளும் பாதிக்கப்படும். அதன் காரணமாக உடல் எடை அதிகரிக்கும். வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படும். தைராய்டு சுரப்பும் குறைந்து போய்விடும். இதனால் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியிலும் கூட பாதிப்பு நேரும்.
இத்தகைய பிரச்சினைகளுக்கு இடம் கொடுக்காமல் ஆரோக்கியத்தை பேணும் விஷயத்தில் நகைச்சுவைக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஆதலால் நகைச்சுவை உணர்வை எப்படி வெளிப்படுத்துவது என்பதை அறிந்துகொள்வது அவசியமானது.
ஒரு காலத்தில் மிகவும் கவலைப்படும் விஷயம் கூட நாளடைவில் நகைச்சுவையாக மாறிவிடும்.
உங்களிடத்தில் நகைச்சுவை உணர்வு இருந்தால் எப்படிப்பட்ட சூழலையும் இணக்கமானதாக மாற்றிவிட முடியும். பிடிவாதங்களையும் தளர்த்த முடியும்.
நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்வதற்கு ரொம்பவும் சிரமப்பட வேண்டியதில்லை. உங்களது பழக்கவழக்கங்களை நீங்களே கிண்டலடித்து சிரியுங்கள். மற்றவர்களிடம் நகைச்சுவை உணர்வோடு பேசுங்கள். ஆனால் ஒருபோதும் அவர்கள் மனம் நோகும்படி கேலி செய்துவிடக்கூடாது. மற்றவர்களுக்கு மன கஷ்டம் கொடுக்காமல் சிறு குறும்புதனங்களை செய்யலாம். இந்த பழக்கத்தை தினமும் பின்பற்றி வரலாம். அதுவே உங்களை நகைச்சுவை உணர்வு கொண்ட மனிதராக இயல்பாகவே மாற்றிவிடும்.
மேடையில் பேசுவதற்கு நிறைய பேர் பயப்படுவார்கள். மற்றவர்கள் முன்னிலையில் பேசுவதற்கு தயங்குவார்கள். அதனை தவிர்க்க வீட்டில் கண்ணாடி முன்பு ஒத்திகை பார்க்கலாம்.
பயத்தில் மைக்கில் பேசுவது போல கற்பனை செய்து பார்க்கலாம். அப்படி பேசும்போது உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது போலவும், அதை பார்த்து பார்வையாளர்கள் திகைப்பது போலவும் நகைச்சுவை உணர்வோடு கற்பனை செய்து பாருங்கள். உங்களை அறியாமலேயே உதட்டில் புன்னகை எட்டிப்பார்க்கும்.
வேடிக்கையான முகபாவங்கள், நடிப்புகள் மூலம் வீட்டில் இருப்பவர்களை கலகலப்பூட்டுங்கள். நகைச்சுவையான, வேடிக்கையான நிகழ்வுகளை பார்க்கும்போது, கேட்கும்போது புன்னகைக்கவாவது செய்யுங்கள். எப்போதும் உம்மென்று இருக்காதீர்கள்.
Comments
Post a Comment