தூய்மையான சந்தனத்தை தேடிப்பிடித்து வாங்க வேண்டும். போலியான சந்தனம் சருமத்தை பாதிக்கும்.
- சந்தனம் சருமத்தை மிருதுவாக்கும்
- வெயிலில் செல்வதை தவிர்ப்பது நல்லது
- வாரம் ஒருமுறை ஃபேஸ் பேக் போடலாம்
திருமணத்துக்காக நகை, பட்டுப்புடவைகள் வாங்குவதை விட மணப்பெண்களுக்கு முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்வது தான் முக்கியம் என நினைப்பார்கள். இப்போதெல்லாம் திருமணப் பேச்சு தொடங்கியதும், பேஷியல் பேக்கேஜ் எடுத்துக்கொள்கிறார்கள். இதன்படி தொடர்ந்து 3 முதல் 6 மாதங்கள் ஆயிரக்கணக்கில் அழகு நிலையங்களுக்கு செலவு செய்கிறார்.
அழகு நிலையங்களுக்கு சென்று ஃபேசியல் செய்வதை விட வீட்டிலிருந்தபடியே சருமத்தைப் பாதுகாக்கலாம். தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கொண்டு முகத்தை மசாஜ் செய்து 10 நிமிடங்களுக்குப் பின்னர் குளிர்ந்த நீரால் சுத்தம் செய்து விட்டு உறங்கச் செல்லலாம். இது சருமத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி பொலிவைக் கொடுக்கும். அதேபோல் காலையில் குளிப்பதற்கு 10 நிமிடங்களுக்கு முன் தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெய் தேய்த்துவிட்டு குளிக்கச் செல்லலாம். இதனால் வறண்ட சருமம் மிருதுவாகும். காலை குளித்ததும் முகத்தில் மாய்ஸ்சரைசர் அல்லது கிரீம்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு கிரீன் டீயை காட்டன் கொண்டு முகத்தில் தடவுங்கள். இதனை தினமும் செய்வது மூலம் முகத்தில் உள்ள கருமை நீங்கும்.
இதெல்லாம் இருக்க திருமணத்துக்கு தயாராகும் பெண்கள் வீட்டிலேயே சுலபமாக செய்து கொள்ளக்கூடிய 3 ஃபேஸ் பேக்குகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்
முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் கருமைகளை நீக்க தக்காளியை அரைத்து அதனுடன் மஞ்சள் மற்றும் சந்தனம் சேர்த்து முகத்தில் தடவலாம். சந்தனம் தான் சருமத்திற்கு மிகச் சிறந்தது. ஆனால் தூய்மையான சந்தனத்தை தேடிப்பிடித்து வாங்க வேண்டும். போலியான சந்தனம் சருமத்தை பாதிக்கும். இந்த கலவையை வாரம் 2 முறை அப்ளை செய்து வர வேண்டும். எண்ணெய் சருமம் கொண்டவர்கள் 3 முறை வரை செய்யலாம். சுமார் 20 நிமிடங்கள் இந்த கலவையை தடவி விட்டு பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவிவிடுங்கள்.
முகத்தில் உதட்டிற்கு மேல் முடிகள் இருக்கும். இவற்றை நீக்க பச்சைப் பயிறை 2 மணி நேரம் ஊறவைத்து பின்னர் அரைத்துக் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சந்தனப் பொடி, உலர்த்திய ஆரஞ்சுத் தோலினை பொடியாக்கி அதனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் எலுமிச்சை, ரோஸ் வாட்டர், கருவேப்பிலைப் பொடியையும் சேருங்கள். இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம். இதனால் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் அதுவாகவே நீங்கிவிடும். இந்த ஃபேஸ் பேக்கை அதிகபட்சமாக 20 நிமிடங்கள் வரை முகத்தில் ஊற வைக்கலாம். பின்னர் லேசாக மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
சருமம் பொலிவு பெற கடலை மாவு, எழுமிச்சை, சந்தனம் சேர்த்து முகத்தில் தடவவும். இதனை வாரம் 2 முறைச் செய்யலாம். இந்த ஃபேஸ் பேக்குகளை இரவில் செய்வது நல்லது. ஃபேஸ் பேக்குகள் பயன்படுத்திய பின்பு குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் வரை முகத்தில் சோப்பு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.இதில் எலுமிச்சை சேர்ப்பது மூலம் அலர்ஜி அல்லது முகவறட்சி ஏற்படுவதாக உணர்பவர்கள் எலுமிச்சைக்குப் பதிலாக தயிர் சேர்த்துக் கொள்ளலாம். ஃபேஸ் பேக்குகளை கழுவிய பின்பு சீரம் அல்லது முகக் கிரீம்களை தடவி விட்டு உறங்கச் செல்லுங்கள். தேங்காய் எண்ணெய்யையும் பயன்படுத்தலாம்.
Comments
Post a Comment