உடலில் டாட்டூ பதித்துக்கொள்வது பிரபலமான பேஷன் போக்காக மாறிவிட்டது. சிலர் தங்கள் மனதுக்கு பிடித்தமானவர்களின் பெயரை ரகசியமாக பச்சைக்குத்திக்கொள்வார்கள். சிலர் மற்றவர்களை கவருவதற்காக உடலின் வெளிப்பகுதியில் டாட்டூ போட்டுக்கொள்வார்கள்.
ஆனால் ஒன்று அல்லது இரண்டு இடங்களில்தான் போட்டு இருப்பார்கள். ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் தனது உடல் முழுவதும் டாட்டூ குத்தி இருக்கிறார்.
அவரது உடல் பாகங்களில் சுமார் 90 சதவீதத்தை டாட்டூக்கள்தான் அபகரித்திருக்கிறது. 41 வயதாகும் அவரது பெயர் கரக் ஸ்மித். இங்கிலாந்தின் ஷெபீல்டு பகுதியை சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். 18 வயதில் முதன் முதலாக பச்சை குத்தி இருக்கிறார். அது பிடித்து போகவே பச்சை குத்திக்கொள்வதை வழக்கமாக்கி விட்டார். ஒவ்வொரு முறையும் வித்தியாசமான வடிவங்களில் டாட்டூக்களை தன் உடலில் பதிப்பதற்கு விரும்பி இருக்கிறார்.
கன்னங்கள், மூக்கு உள்பட சில பகுதிகள்தான் டாட்டூவின் பிடியில் இருந்து தப்பித்திருக்கின்றன. ஸ்மித் உள்ளூர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். உடல் முழுவதும் டாட்டூ குத்திக்கொண்டதால் 6-7 இடங்களில் வேலைவாய்ப்பை இழந்ததாகவும் கூறுகிறார். தன்னுடன் பணிபுரியும் சிறுவர்கள் தான் டாட்டூ குத்திக்கொள்வதை ரசிப்பதாகவும், தாங்களும் அதுபோல் டாட்டூ குத்திக்கொள்வதற்கு ஆர்வம் காட்டுவதாகவும் கூறுகிறார்.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்தும் தனக்கு அழைப்பு வந்ததாகவும் பெருமிதத்துடன் கூறுகிறார். உடலில் டாட்டூ குத்திக்கொள்வதற்கு எவ்வளவு செலவானது என்று கேட்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார். டாட்டூவுக்காக லட்சக்கணக்கில் செலவழித்திருப்பார் என்று எண்ணி விடாதீர்கள். டாட்டூ குத்துவதற்காக ஒரு ரூபாய் கூட தான் செலவிடவில்லை என்று கேள்வி கேட்பவர்களை ஆச்சரியப்பட வைக்கிறார். ஐரோப்பா முழுவதும் நடைபெறும் டாட்டூ கண்காட்சிகளில் கலந்து கொள்கிறார். அங்கு டாட்டூ கலைஞர்கள் இவருக்கு இலவசமாகவே பச்சை குத்திவிட்டிருக்கிறார்கள். டாட்டூ மீது இவர் கொண்டிருக்கும் காதலை பார்த்து பலரும் தாங்களாகவே முன் வந்து டாட்டூ பதித்திருக்கிறார்கள். டாட்டூவுக்காக தான் பணம் செலுத்தி இருந்தால் சுமார் 40 லட்சம் ரூபாய் செலவாகி இருக்கும் என்றும் சொல்கிறார்.
Comments
Post a Comment