சர்க்கரை வள்ளிக்கிழங்கு இரவு உணவுக்கு சிறந்த தேர்வாகும். இரவில் இறைச்சி உண்ண விரும்புபவர்கள் மீன் சாப்பிடலாம்.
நீங்கள் இரவில் நன்றாக தூங்க முடியாமல் சிரமப்படுபவர்களாக இருந்தால் உணவு பழக்கங்களில் சில மாற்றங்களை கொண்டு வருவது அவசியம். அவை நல்ல தூக்கத்தை வரவழைக்கும்.
அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:
* மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு காபின் கலந்த பானங்களையும், உணவுகளையும் தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில் அவை தூக்கத்தை மோசமாக பாதிக்கும். ''காபி, தேநீர் ஆகியவை தூக்கத்தை தடுக்கும் காபினை கொண்டிருப்பவை. நல்ல தூக்கத்தை வரவழைப்பதற்கு சாக்லேட், குளிர்பானம் மற்றும் எனர்ஜி பானங்களை கூட தவிர்க்க வேண்டும். படுக்கைக்கு செல்வதற்கு 4 முதல் 6 மணி நேரத்திற்கு முன்பே அவைகளை தவிர்க்க வேண்டும்'' என்பது டாக்டர்களின் கருத்தாக இருக்கிறது.
* தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் மூன்று வேளை சாப் பிடுவதற்கு பதிலாக குறைந்தது ஐந்து வேளையாக பிரித்து உண்ண வேண்டும். இது செரிமானத்திற்கு உதவுவதோடு தூக்கத்தையும் மேம்படுத்தும். ''நோய் பாதிப்புக்குள்ளாகி இருப்பவர்கள் இரண்டு மணி நேர இடைவேளையில் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வேண்டும். அப்படி செய்தால் வயிறு எப்போதும் நிரம்பி இருக்கும். ஒரே நேரத்தில் அதிகம் சாப்பிடுவதும் தவிர்க்கப்படும். எடை குறைப்பு, வளர்சிதை மாற்றத்திற்கும் உதவும். இரவில் சாப்பிடும் உணவில் புரதம் மற்றும் கொழுப்புகள் குறைவாக இருக்க வேண்டும். தூங்க செல்வதற்கு முன்பு வயிறு நிரம்ப சாப்பிடுவது அஜீரணம், வீக்கம் போன்ற சிக்கல்களை உருவாக்கக்கூடும். இரவில் நிம்மதியாக தூங்க விடாமல் தடுக்கும்'' என்பது உணவியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
* இரவு உணவில் சேர்க்கப்படும் காய் கறிகள், இறைச்சிகளை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். "முட்டைக்கோஸ், வெங்காயம் போன்ற காய்கறிகள் இரைப்பை பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். அதே வேளையில், சர்க்கரை வள்ளிக்கிழங்கு இரவு உணவுக்கு சிறந்த தேர்வாகும். மேலும், இரவில் இறைச்சி உண்ண விரும்புபவர்கள் மீன் சாப்பிடலாம். அதில் இருக்கும் புரதம் இரவு தூக்கத்திற்கு நலம் சேர்க்கும்'' என்கிறார், டாக்டர் பாலியா.
* இரவில் தூங்க செல்வதற்கு முன்பு காரமான உணவை உட்கொள்வது உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும். தூக்கத்தையும் பாதிக்கும். இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இரவில் சாப்பிடப்படும் காரமான உணவு, தூக்க சுழற்சியை சீர்குலைத்து உடல் வெப்பநிலையின் அளவை உயர்த்துவதாகவும், அதன் காரணமாக தூக்கத்தின் தரம் குறைவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
* நள்ளிரவில் எழுந்து பசியுடன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இதுபற்றி டாக்டர் பாலியா கூறுகையில், ''நள்ளிரவில் பசியை போக்குவதற்கு பர்கர், பீட்சா, ஐஸ்கிரீம் சாப்பிட்டால் அது உடலுக்கு கேடு தரும். நன்றாக தூங்குவதற்கு அனுமதிக்காது. பசியோடு வெறும் வயிற்றில் தூங்க நேர்ந்தால், பாலுடன் சிறிதளவு தேன் சேர்த்து பருகலாம். அல்லது தின்பண்டங்கள் ஏதாவது சிறிதளவு சாப்பிடலாம்'' என்கிறார்.
* படுக்கை அறை தூய்மையும் தூக்கத்தை வரவழைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மெத்தை, படுக்கை விரிப்புகள் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். படுக்கை அறையில் அதிக வெளிச்சமோ, அதிக இருளோ சூழ்ந்திருக்கக்கூடாது.
Comments
Post a Comment