குளித்த பிறகு நீங்கள் கட்டாயம் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும். இதேபோல, இரவில் தூங்கச் செல்லும் முன்பாகவும் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது நல்லதுதான்.
குளிர் காலத்தில் நம் சருமம் வறண்டு திட்டு, திட்டுக்களாக காட்சியளிப்பதை பார்த்துள்ளீர்களா? இதை தவிர்க்க வேண்டும் என்றால் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. உங்கள் சருமத்தை பாதிக்கக் கூடிய ஆபத்து மிகுந்த ரசாயனங்கள், தூசுகள் மற்றும் நச்சுக்களில் இருந்து பாதுகாக்கும் அரணாக இது செயல்படுகிறது.குறிப்பாக குளிர் காலங்களில், வெதுவெதுப்பான தண்ணீரில் நீங்கள் குளிக்கும்போது உங்கள் உடலுக்கு அது இதமாக இருந்தாலும், சருமத்திற்கு வறட்சியை ஏற்படுத்தி விடுகிறது. ஆகவே கட்டாயம் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும்.இதன் மூலமாக உங்கள் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.
பருக்கள் வராது :
நம் சருமத்தில் உள்ள துளைகளானது தூசு மற்றும் துரும்புகளை உறிஞ்சிக் கொள்வதன் காரணமாக பருக்கள் உண்டாகின்றன. இதை மாய்ஸ்சுரைசர் எப்படி தடுக்கும் என்று கேட்கிறீர்களா? உங்கள் சருமத்திற்கு மேலான லேயர் ஒன்றை இது உருவாக்கி வைத்திருக்கும். ஆகவே, உங்களுக்கு பருக்கள் ஏற்படாது.
சுருக்கங்கள் மற்றும் வயது
முதிர்வை தடுக்கிறது :
நம் உடலில் கொலேஜன் உற்பத்தியை மாய்ஸ்சுரைசர் ஊக்குவிக்கிறது. இது சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்க உதவுகிறது. இந்த சுருக்கங்கள் தான் நமக்கு வயதான தோற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதால், இதை தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நிச்சயமாக மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும்.
கறைகளை போக்கும் :
சருமத்தில் கறைகள் ஏற்படுவது மற்றுமொரு முக்கியமான பிரச்சினை ஆகும். கோடைகாலத்தில் ஈரப்பதம் வற்றுவதன் காரணமாக ஏற்படும் இந்தக் கறைகள், குளிர் காலத்தில் மிகுதியாக தென்படும். ஆகவே, நீங்கள் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தி உங்கள் சருமத்திற்கு நீர்ச்சத்து ஏற்படுத்துவதன் மூலமாக இந்தப் பிரச்சினையை தவிர்க்க இயலும்.
பளபளப்பான சருமம் :
சருமம் வறட்சி அடைவதையும், பொலிவு இழப்பதையும் தடுப்பது தான் ஒரு மாய்ஸ்சுரைசரின் முக்கியமான வேலையாகும். மாய்ஸ்சுரைசர் காரணமாக சருமத்தில் ஈரப்பதம் இருக்கும்போது, அது பளபளப்பான தோற்றத்தை கொடுக்கும். மற்றும் இளமையான தோற்றம் தென்படும்.
அலர்ஜிகளை தடுக்கிறது :
நம் சருமத்தில் ஏற்படக் கூடிய அலர்ஜிகள் தான் சொரியாசிஸ் மற்றும் எக்கீமா போன்ற நோய்களுக்கு காரணமாக அமைகிறது. இவற்றை தடுப்பதற்கு நீங்கள் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தினால் போதுமானது. கற்றாழை சேர்க்கப்பட்ட இயற்கையான மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தினால் இன்னும் சிறப்பான பலன்களை பெற முடியும்.
இயற்கையான மாய்ஸ்சுரைசர்கள் :
கடையில் விற்பனை செய்யப்படும் மாய்ஸ்சுரைசர்களை நீங்கள் பயன்படுத்த விரும்பவில்லை என்றால் கற்றாழை, பப்பாளி, தயிர் போன்றவற்றை கலந்து சருமத்தில் அப்ளை செய்து, சிறிது நேரம் கழித்து கழுவலாம். இல்லையென்றால் குளித்த பிறகு சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் அப்ளை செய்யலாம்.
Comments
Post a Comment