பிரியாணி பிறந்த இடம் பாரசீகம் ஆகும். பாலைவனங்கள் நிறைந்த பாரசீகத்தின் இன்றைய பெயர் ஈரான்.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே பிரியாணி பிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாரசீகத்தின் பாலைவனத்தில் பிறந்த பிரியாணி, இன்று அனைவருக்கும் பிரியமான உணவாக மாறியது எப்படி? விவரிக்கிறது இந்த பதிவு.
பழைய சோறு முதல் பர்கர் வரை எத்தனையோ உணவுகள் உள்ளன. சாம்பார் முதல் சவர்மா வரை எத்தனையோ சுவைகள் இருந்தாலும், இன்றைய இந்தியாவின் தேசிய உணவாக மாறிவிட்டது பிரியாணி.
வீதிக்கு வீதி, தெருவுக்கு தெரு முளைத்துவிட்ட பிரியாணி கடைகளே அதற்கு சாட்சி.
மணத்திலும் சுவையிலும் சுண்டியிழுக்கும் இந்த பிரியாணி பிறந்த இடம் பாரசீகம் ஆகும். பாலைவனங்கள் நிறைந்த பாரசீகத்தின் இன்றைய பெயர் ஈரான்.
எடுக்க எடுக்க குறையாத எண்ணெய் வளத்தோடு, குங்குமப்பூ உற்பத்தியிலும் சிறந்து விளங்கிய நாடு ஈரான். அபரிமிதமாக உற்பத்தி செய்யப்பட்ட குங்குமப்பூவை, அண்டை நாடுகளுக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்வது பாரசீகர்களின் பாரம்பரிய தொழிலாக இருந்து வந்தது. பாலைவனங்களை கடந்து பல நாட்கள் பயணப்படும் பாரசீகர்கள் கண்டுபிடித்ததுதான் பிரியாணி.
உணவு சமைக்கத் தேவையான அரிசி, மசாலா பொருட்களை ஒன்றாக தண்ணீரோடு கலந்து பாத்திரத்தில் இடுவார்கள். இதனைத் தொடர்ந்து, இறுக்கி மூடி, துணியால் கட்டிய பாத்திரத்தை கொதிக்கும் பாலைவன மணலில் புதைத்துவிட்டு, ஒட்டக நிழலில் ஓய்வெடுப்பார்களாம் பாரசீக வியாபாரிகள்.
கொதிக்கும் மணல் மூலம் சமைக்கப்பட்ட உணவை உட்கொண்டு பாலைவனத்தை கடப்பது அவர்கள் வாழ்வில் அடிக்கடி நடக்கும் நிகழ்வாக இருந்திருக்கிறது. சுடுமணலில் தம் போட்டு சமைக்கப்பட்ட உணவின் சுவையில் கவரப்பட்ட பாரசீகர்கள், போருக்கு செல்லும்போது இதையே சாப்பிடத் தொடங்கியதாக வரலாறு கூறுகிறது.
பாலைவனத்தில் சென்றால் பழைய முறையில் சமைக்கும் அவர்கள், காட்டுப் பகுதியில் சென்றால் ஆழமாக குழி தோண்டி அதில் தீமூட்டி சமைக்கத் தொடங்கியுள்ளனர்.
காலப் போக்கில் காட்டில் வேட்டையாடும் விலங்குகளின் இறைச்சியையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டதுதான் பிரியாணியாக உருவானது. முதலில் வெறும் மசாலாக்களை மட்டுமே பயன்படுத்திய பாரசீகர்கள், நாளடைவில் நறுமணத்திற்காக பல வாசனைப் பொருட்களையும் சேர்க்க ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு பாரசீக வணிகர்களும், போர் வீரர்களும் பயன்படுத்திய பிரியாணியை, சுவையின் காரணமாக தங்களது பாரம்பரிய உணவாக பாரசீக மக்கள் மாற்றிக் கொண்டனர்.
பாரசீகர்கள் வணிகம் செய்ய சென்ற ஊர்களிலும், அவர்கள் போரால் கைப்பற்றிய நாடுகளிலும் பிரியாணியின் சுவை பரவியது. இவ்வாறு தெற்காசியா முழுவதும் பரவிக் கிடந்த பிரியாணி, இந்தியாவிற்குள் முகலாயர்களின் மூலம் புகுந்தது.
இஸ்லாமியர்கள் ஆட்சி செய்த இடங்களில் எல்லாம் பரவிய பிரியாணி, இந்தியாவிலும் பரவ அதிக காலம் ஆகவில்லை. ஒரு முறை போர்க்களத்திற்கு வருகை தந்த ஷாஜஹானின் மனைவி மும்தாஜ், போர் வீரர்களின் நிலையைக் கண்டு மிகவும் வருந்தியதாகச் சொல்லப்படுகிறது.
வீரர்கள் ஊட்டச்சத்து குறைந்தவர்களாக காணப்பட்டு இருந்ததால், அவர்களுக்கு பிரியாணியின் செய்முறையை கற்றுத் தந்ததாகவும் கூறுகிறது வரலாறு.
பின்னாளில் ஹைதராபாத் நிஜாம்களுக்கும், லக்னோ நவாப்களுக்கும் பிரியமான உணவாக பிரியாணி மாறிப் போனது. இதையே, ஈகைத் திருநாளான ரம்ஜான் தினத்தில், பிறருக்கும் அளித்து மகிழ்ந்தனர் இஸ்லாமியர்கள்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆவாதி பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, ஐதராபாத் பிரியாணி என பலவகையான பெயர் உண்டு.
இடத்திற்கு தகுந்தாற்போல என்னதான் பெயர் மாறினாலும், சுவையால் எல்லோருக்கும் பிடித்த உணவாக பிரியாணிதான் நீடிக்கிறது.
Comments
Post a Comment