கேரளாவில் ஓட்டல் தொழிலாளி வாங்கிய 10 லாட்டரி சீட்டுகளுக்கும் பரிசு விழுந்துள்ளது. அதில் பம்பர் பரிசான ரூ.80லட்சமும் அவருக்கே கிடைத்துள்ளது. குடும்பத்துடன் ஓட்டல் தொழிலாளி
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் காருண்ய பாக்கியகுறி, காருண்ய பாக்கியலட்சுமி, காருண்ய பாக்யஸ்ரீ ஆகிய விஷேச பம்பர் பரிசுகளை வழங்கும் லாட்டரிகள் இயங்கி வருகிறது. இதில் ஓணம், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் குலுக்கல் முறையில் பம்பர் பரிசு வழங்கப்படும்.
ரூ.40 லட்சம், ரூ.50லட்சம், ரூ.80லட்சம், ரூ.1 கோடி என பரிசுத்தொகை மிகவும் அதிகமாக வழங்கப்படுவதால் பாமரரும் பணக்காரர் ஆகி உள்ளனர். இதனால் பாமரர் உள்ளிட்ட பணக்காரர்கள் கூட லாட்டரி சீட்டுகளை வாங்குகின்றனர். கேரள மாநிலத்திற்கு தொழில், வேலை உள்ளிட்ட விஷயங்களுக்கு செல்லக் கூடிய தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கேரளாவில் ஓட்டல் தொழிலாளி வாங்கிய 10 லாட்டரி சீட்டுகளுக்கும் பரிசு விழுந்துள்ளது. அதில் பம்பர் பரிசான ரூ.80லட்சமும் அவருக்கே கிடைத்துள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் விழிஞம் பகுதியை சேர்ந்தவர் சுராஜூதீன். அந்த பகுதியில் ஓட்டல் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜீனத் என்ற மனைவியும், ஷகிரா, ஷகிர், ஷெபிதா ஆகிய 3 மகள்களும் உள்ளனர். போதிய வருமானம் இல்லாததால் சொந்த வீடு கட்ட முடியவில்லை.
இதனால் உறவினர் வீட்டில் குடும்பத்துடன் குறைந்த வாடகைக்கு வசித்து வருகிறார். லாட்டரி மூலமாக என்றாவது ஒருநாள் தனக்கு அதிர்ஷ்டம் வரும் என நினைத்து சுராஜூதீன் லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகிறார்.
அவ்வாறு வாங்கும் லாட்டரி சீட்டுகளில் ரூ.1000, ரூ.5 ஆயிரம் என சிறுதொகை மட்டுமே விழுந்திருக்கிறது இருந்தபோதிலும் மனம் தளராமல் சுராஜூதீன், தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கிய படி இருந்தார். கடந்த நில நாட்களுக்கு முன்பு காருண்ய பாக்கியகுறி லாட்டரி சீட்டில் சனிக்கிழமை குலுக்கலுக்கான 10 டிக்கெட்டுகளை வாங்கினார்.
அன்றைய தினம் மாலை வரை, தான் வாங்கிய லாட்டரி சீட்டுகளுக்கு பரிசு விழுந்ததாக தகவல் எதுவும் வராததால், அந்த சீட்டுகளை தூக்கிவீசுவதற்காக எடுத்தார். அப்போது சுராஜூதீனுக்கு லாட்டரி சீட்டு விற்ற ஏஜெண்ட் வந்தார். அவர் நீங்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பம்பர் பரிசான ரூ.80 லட்சம் விழுந்திருக்கிறது என்று கூறினார்.
இதனால் இன்ப அதிர்ச்சியடைந்த சுராஜூதீன் , தனது லாட்டரி சீட்டை எடுத்து பார்த்தார். அப்போது அவர் வாங்கிய லாட்டரி சீட்டுகளில் ஒரு சீட்டுக்கு பம்பர் பரிசு ரூ80லட்சம் விழுந்திருப்பதை கண்டார். மேலும் அவர் வாங்கியிருந்த மீதி 9 லாட்டரி சீட்டுகளுக்கும் ரூ.8 ஆயிரம் பரிசு விழுந்திருந்தது.
தான் வாங்கிய 10 லாட்டரி சீட்டுகளுக்கும் பரிசு விழுந்தது மட்டுமின்றி, பம்பர் பரிசான ரூ.80 லட்சமும் விழுந்ததால் சுராஜூதீன் மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சுராஜூதீன் கூறும்போது, “எங்களுக்கு சொந்த வீடு கிடையாது. எனது சிறிய வருமானத்தை வைத்தே குடும்பம் நடத்தியதால் மிகவும் சிரமப்பட் டோம். தற்போது கிடைத்துள்ள பரிசுத்தொகை மூலம் சொந்தமாக வீடு கட்டுவேன். மேலும் ஏழைகளுக்கு உதவி செய்ய சிறிது தொகையை செலவிடுவேன். என் குழந்தைகளை நல்ல நிலைக்கு கொண்டுவர தேவையானவற்றை செய்வேன்’’ என்றார்.
Comments
Post a Comment