யூடியூப் பக்கம் ஒன்றிற்காக கொள்ளையடிப்பதை போன்ற 'ப்ராங்க்' எனப்படும் குறும்பு காணொளி எடுக்க முயன்றபோது, அதில் ஈடுபட்டதாக கூறப்படும் 20 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் பலியானார்.அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் நாஷ்வில் என்ற நகரத்திலுள்ள பூங்கா ஒன்றின் முன்பு, நின்றுகொண்டிருந்த மக்களை நோக்கி, டிமோத்தி வில்க்ஸும் அவரது நண்பரும் பெரிய கத்திகளை கையில் ஏந்தியவாறு வந்ததாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இவர்கள் இருவரும் குறும்பு காணொளி எடுப்பது குறித்து தெரியாத 23 வயது இளைஞர் ஒருவர், தற்காப்பு நடவடிக்கையாக வில்க்ஸை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், யூடியூப் பக்கம் ஒன்றிற்காக "ப்ராங்க்" காணொளி எடுக்கப்பட்டபோது இதுபோன்ற அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டதாக வில்க்ஸின் நண்பர் கூறுகிறார்.
எனினும், இந்த இறப்பு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
கொள்ளையபடிப்பதை போன்ற குறும்பு காணொளிகள், குறிப்பாக சில நேரங்களில் போலியான துப்பாக்கிகள், முகமூடிகள் ஆகியவற்றை கொண்டும் வாகனத்தை திருடுவதை போன்றும் வேடிக்கை காணொளிகளை எடுப்பது என்பது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் யூடியூபர்களால் சர்வசாதாரணமான செய்யப்படுகின்றன.
இதுபோன்ற காணொளிகளுக்கு லட்சக்கணக்கான பார்வையாளர்கள் இருந்தாலும், பெரும்பாலான காணொளிகள் சாதாரண மக்கள் போன்று சிலரை நடிக்க செய்து எடுக்கப்படுபவையாக இருக்கின்றன.
ஆனால், குறும்பு என்ற பெயரில் அபாயகரமான அல்லது அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காணொளிகளை பதிவேற்றுவதை தடுக்கும் வகையில் இரண்டாண்டுகளுக்கு முன்பே யூடியூப் நிறுவனம் விதிமுறைகளை கொண்டுவந்தது.
அதில் "மக்களுக்கு உடனடி உடல் பாதுகாப்பு சார்ந்த அச்சத்தை விளைவிக்கும் அல்லது சிறார்களுக்கு கடுமையான மன உளைச்சலை உருவாக்கும் குறும்புகள்" அடங்கும்.
ஆயுதங்களை வைத்து மிரட்டுவது, கொள்ளையடிப்பது போன்ற போலியான காணொளிகளை எடுப்பது ஆகியவை குற்றங்களாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இதை மீறி பதிவேற்றப்படும் காணொளிகள் யூடியூப் தளத்திலிருந்து நீக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெஞ்சை உலுக்கும் அசம்பாவிதங்கள்
இதுபோன்ற பல தீவிரமான அசம்பாவிதங்கள் கடந்த காலங்களிலும் நிகழ்ந்ததை அடுத்தே, யூடியூபில் காணொளி பதிவேற்றுவதில் பல்வேறு புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன.
2015இல் சாம் பெப்பர் என்ற பிரபல யூடியூப் நிகழ்படப்பதிவாளர், நபர் ஒருவரை அவரது நண்பர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுவிட்டதாக கூறி நம்ப செய்யும் காணொளி, இணையத்தில் கடும் எதிர்ப்பை சந்தித்தது. எனினும், அந்த காணொளியை தங்களது தளத்திலிருந்து நீக்க முடியாது என யூடியூப் மறுத்துவிட்டது.
ஆனால், 2017ஆம் ஆண்டில், இரண்டு யூடியூபர்களின் சாகசம் கடைசியில் ஒரு மரணத்தில் முடிந்தது. 19 வயதான மோனலிசா பெரெஸ், தனது ஆண் நண்பரான பெட்ரோ ரூயிஸை ஒரு தடிமனான புத்தகத்தை அவர் முன்வைத்து சுட்டார். இந்த புத்தகம் தோட்டாவை தடுத்துவிடும் என்று அவர்கள் நம்பிய நிலையில், அது பொய்த்துப் போய் மரணத்தில் முடிந்தது.
இதுதொடர்பான வழக்கில், 2018ஆம் ஆண்டு மோனலிசா பெரெஸுக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் நடந்து, சுமார் பத்து மாதங்களுக்கு பிறகே, அபாயகரமான 'ப்ராங்க்' காணொளிகளை தடைசெய்யும் வகையிலான விதிமுறைகளை யூடியூப் நிறுவனம் கொண்டுவந்தது.
Comments
Post a Comment