ஒரே வகையான மாஸ்கை அணிவதாலும், சுகாதாரமற்ற மாஸ்கை பயன்படுத்துவதாலும் பாக்டீரியா தொற்று பிரச்சனைகள் உருவாவதாக கண்டறியப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள நாள்தோறும் முககவசம் அணிவது என்பது கட்டாயமாகிவிட்டது. இது வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள உதவினாலும், சிலருக்கு மூச்சுத்திணறல், பல் பிரச்சனைகள், முகத்தில் தோல் அழற்சி ஆகிய பிரச்சனைகள் ஏற்படவும் காரணமாக அமைந்தது. தற்போது, கண் எரிச்சல் ஏற்படுவதற்கு முகமூடி அணிவதும் காரணமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
கண் வறட்சி, எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவர்களை அணுகியவர்களை பெற்ற குறிப்புகளின் அடிப்படையில், மாஸ்க் அணிவது கண் எரிச்சல் பிரச்சனைக்கு வழவகுப்பதாக மருத்துவர்கள் எச்சரிப்பதால், அதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கண்கள் வறட்சியடைவது ஏன்?
கண்களின் வறட்சிக்கு பல காரணங்கள் இருந்தாலும், மாஸ்கை தவறாக அணிவதும் ஒரு வகையான காரணமாக மாறியிருக்கிறது. உங்கள் முகத்துக்கு பொருத்தமான மாஸ்க்கை அணியாமல் இருந்தால் அல்லது மூக்கை முழுமையாக மூடாமல் மாஸ்க் அணியும்போது, மூக்கின் வழியாக வெளியேறும் சூடான காற்று மேல்புறமாக சென்று கண்களை வறட்சியடைய செய்கிறது. இதனால் கண்களில் வறட்சி ஏற்படுகிறது.
மேலும், தொடர்ந்து ஒரே வகையான மாஸ்கை அணிவதாலும், சுகாதாரமற்ற மாஸ்கை பயன்படுத்துவதாலும் பாக்டீரியா தொற்று பிரச்சனைகள் உருவாவதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கண்களில் கார்னியல் பாதிப்பும் ஏற்படுவதாக கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் உடல் ஆரோக்கியமின்மை ஆகியவையும் கண்கள் பாதிப்பு ஏற்பட காரணமாக இருக்கின்றன.
மாஸ்கை சரியாக அணிதல்
உங்கள் மூக்கிலிருந்து வெளியேறும் சூடான காற்று உங்கள் கண்களை எளிதில் தொந்தரவு செய்து, வறட்சி மற்றும் எரிச்சலுக்கு வழிவகுக்கும். நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், மாஸ்கை சரியாக அணியவேண்டும். கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்ளவும், கண் பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்கவும் அனைவரும் கட்டாயமாக இதனை செய்யவேண்டும். சிறிய கவனக் குறைவு உங்களின் கண்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன், வீண் மருத்துவச் செலவுகளுக்கும் வழிவகுக்கிறது.
பொருத்தமான மாஸ்க்
உங்களுக்கு பொருத்தமான மாஸ்கை வாங்க வேண்டியது அவசியம். சந்தையில் நிறைய வகைகளில் மாஸ்க்குகள் கிடைக்கின்றன. சுவாசிப்பதற்கு எளிதாகவும், இலகுவான அமைப்பில் உருவாக்கப்பட்ட மாஸ்க்குகளை தேர்தெடுப்பது நல்லது. அதேபோல், பெரிய மாஸ்க்குகளாகவும் இருக்கக்கூடாது. ஏனென்றால், அவை கண்கள் மீது உரசி எரிச்சலுக்கும், கார்னியா பாதிப்புக்கும் வழிவகுக்கும். அதேபோல், முகத்தில் இருந்து மாஸ்க்குகளை கழற்றும்போது கண்கள் மீது படாதவாறு பார்த்துக்கொள்வதும் அவசியம்.
அறிகுறிகளை தவிர்க்காதீர்கள்
கண் எரிச்சல் அல்லது அசௌகரியங்களை நீங்கள் உணர்ந்தால், அதனை அலட்சியம் செய்ய வேண்டாம். டிஜிட்டல் திரைகளை தொடர்ந்து பார்ப்பதும் கண் எரிச்சல் மற்றும் வறட்சிக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. அதனால், அவற்றை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கும்பட்சத்தில் குறிபிட்ட இடைவெளியை எடுத்துக்கொள்ளுங்கள். கண் அசௌகரியம் தொடரும்பட்சத்தில் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்வது சிறந்தது.
கண்களை தொடாதீர்கள்
முகத்தில் அசௌகரியமாக இருக்கும் மாஸ்க்கை சரிசெய்யும்போது, உங்கள் கண்களை தொடாதீர்கள். ஏனென்றால், உங்கள் கைகளில் வேறுவிதமான பாக்டீரியாக்கள் இருக்கக்கூடும். அப்போது, உங்கள் கண்களை தொடும்போது, அது கண்களில் பரவ வாய்ப்புள்ளது. எப்போதும் கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அசுத்தமான கைகளால் கண்களை தொட முயற்சிக்கும்போது கண் வறட்சி, எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை நீங்கள் கட்டாயம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
சூடான ஒத்தடம்
கண் எரிச்சல் அல்லது அசௌகரியத்தை சந்திக்கும்போது சுத்தமான துணியை சூடான நீரில் நனைத்து ஒத்தடம் கொடுப்பது நல்லது. வெதுவெதுப்பான ஒத்தடம், உங்களை கண்களின் வறட்சியை போக்கி, நீரேற்றம் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். ஒரு சில நிமிடங்கள் வரை ஒத்தடம் கொடுக்கலாம்.
Comments
Post a Comment