இப்பொழுதெல்லாம் இளம்பெண்கள் பியூட்டி பார்லருக்கு சென்று தங்களை அழகுப்படுத்திக் கொள்வதை ஒரு ஃபேஷனாக வைத்துள்ளனர். மாதத்திற்கு ஒரு முறையாவது பார்லருக்கு செல்லாவிட்டால் அவர்களுக்கு தங்களின் அழகு குறைந்தது போன்ற எண்ணமே வந்து விடுகிறது. ஆனால் திருமணமான பிறகு தனக்கென ஒரு குழந்தை வந்ததும் பெண்கள் தங்களை அவ்வளவு கவனமாக கவனித்துக் கொள்வதில்லை. உணவு முறையிலும் சரி, தன்னை அழகுபடுத்துவதிலும் சரி. முன்பு இருந்த கவனத்தை இப்பொழுது அவர்களால் கொடுக்க முடிவதில்லை. ஆனால் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து தங்கள் அழகைப் பராமரித்து கொள்ள மிகவும் எளிமையான வழியை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அவ்வாறு நமது உடலில் அதிகம் பாதிப்படையும் ஒரு இடம் நமது பாதமாகும். எனவே இதனை எப்படி தூய்மையாக வைத்துக் கொள்வது என்பதைப் பற்றி தான் இங்கு தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை பழம்– 1, தக்காளி – 1, கஸ்தூரி மஞ்சள் – அரை ஸ்பூன், கல் உப்பு – ஒரு ஸ்பூன், சோடா உப்பு – ஒரு ஸ்பூன், ஷாம்பூ – 3ஸ்பூன்.
செய்முறை:
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகு அதில் அரை எலுமிச்சம்பழம் சாறு சேர்க்க வேண்டும். பின்னர் வீட்டில் தலைக்கு குளிக்க பயன்படுத்தப்படும் ஷாம்புவை 3 ஸ்பூன் சேர்க்க வேண்டும்.
பிறகு ஒரு கைப்பிடி கல் உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்துவிட வேண்டும். பிறகு உங்கள் பாதங்களை இந்த தண்ணீரில் மூழ்குமாறு வைத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் எலுமிச்சை பழ தோலினால் பாதங்களை நன்றாக தேய்த்து அந்தத் தண்ணீரிலேயே பாதத்தை கழுவ வேண்டும்.
பின்னர் ஒரு சிறிய கிண்ணத்தில் அரை ஸ்பூன் சோடா உப்பு, அரை எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் ஒரு தக்காளிப் பழத்தின் சாறு இவை மூன்றையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு இந்த பேஸ்ட்டை உங்கள் பாதத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் 5 நிமிடம் இதனை அப்படியே ஊற விட வேண்டும்.
5 நிமிடத்திற்கு பிறகு மறுபடியும் கைகளை வைத்து மசாஜ் செய்து, நன்றாக தேய்த்து விட்ட பின்னர் பாதங்களை அதே சுடு தண்ணீரில் நன்றாக கழுவி விட வேண்டும். பிறகு இறுதியாக நீங்கள் சாதாரணமாக பயன்படுத்தும் மாய்ஸ்சுரைசிங் க்ரீம் அல்லது வாசலின் தடவி விட வேண்டும். இவை இரண்டுமே இல்லை என்றாலும் நீங்கள் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் தடவி விட்டால் மட்டும் போதுமானதாகும். ஒருமுறை இவ்வாறு நீங்களும் செய்து பாருங்கள். உங்கள் பாதம் முன்பு இருந்ததைவிட பளபளவென்று சாஃப்ட்டாக மாறிவிடும்.
Comments
Post a Comment