ஏலம் விடும் நடைமுறை இன்று நேற்றல்ல, சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திலிருந்தே தொடர்ந்து கொண்டிருக்கிறது. விலை உயர்ந்த பொருட்கள், அரிய பொக்கிஷங்கள் ஏலம் விடப்பட்டுள்ளன.
ஏலம் விடுவதில் உலகம் முழுக்க பல முறைகள் உள்ளன. பொருட்களுக்கான விலையை ஏற்றிக் கொண்டே செல்லும் வெளிப்படையான ஏல முறையை ‘இங்கிலீஷ் ஏலம’் என்பார்கள். ஏலம் கேட்பவர்கள் இதில் போட்டி போட வேண்டும். அதிகபட்ச விலையைக் கேட்பவர்களுக்கு ஏலம் விடப்படும்.
ஏலம் விடப்படும் பொருளுக்கான குறைந்தபட்ச விலையை ஏலம் விடுபவர்களே முடிவு செய்வார்கள். குறைந்தபட்ச நிர்ணய விலையைத் தாண்டி யாரும் ஏலம் கேட்கவில்லை என்றால் நஷ்டம்தான். உலகம் முழுவதும் பரவலாக இந்த ஏல முறைதான் நடைமுறையில் உள்ளது.
சீலிடப்பட்ட விலை ஏலம் என்ற முறை உள்ளது. அரசு டெண்டர்கள் பெரும்பாலும் இந்த முறையில்தான் நடக்கும். ஒருவர் கேட்கும் விலை அடுத்தவருக்கு தெரியாது. ஆனால் ஏலம் கேட்பவர்கள், தங்களின் விலையை மூடிய உறைக்குள் வைத்து கொடுப்பார்கள். குறிப்பிட்ட நாளில் அனைத்து உறைகளும் திறக்கப்பட்டு, விலைக்கு ஏற்ப ஏலம் கொடுக்கப்படும். அரசின் முக்கியமான டெண்டர்கள் ஏலம் இந்த முறையில்தான் நடக்கிறது.
டச்சு ஏலம் என்ற முறையும் உள்ளது. நாம் முன்பு பார்த்த ஏல முறைகளுக்கு நேர் எதிரானது இந்த முறை. ஏலம் விடுபவர்கள் ஒரு தொகையை நிர்ணயம் செய்திருப்பார். ஏலம் கேட்பவர்கள் விலையை குறைத்துக் கொண்டே இருப்பார்கள். குறைந்தபட்ச விலையை முதலில் கேட்கும் நபருக்கு பொருள் விற்கப்படும். காய்கள், பழங்கள், பூக்கள் இந்த முறையில்தான் ஏலம் விடப்படுகிறது.
வங்கிகள் ஜப்தி செய்த ஒரு வீட்டை ஏலம் விடுகிறது என்றால், கடன் தொகை திரும்ப வந்தால் போதும் என்று கணக்கிட்டோ அல்லது சந்தை மதிப்பைக் கணக்கிட்டோ தொகையை நிர்ணயிப்பார்கள். தவிர ஏலத்தில் வீடு வாங்குகிறோம் என்றால், அந்த வீடு பொதுவாக எந்த வில்லங்கமும் இல்லாமல்தான் இருக்கும். பத்திரப் பதிவில் வங்கி மேலாளர் கையொப்பமிடுவார். இப்படி ஏலத்தில் வீடு வாங்க ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன.
ஏலத்தில் தங்க நகைகள் சந்தை விலையை விட குறைவான விலையில் வாங்கலாம். அடகுக்கு வரும் நகைகளை உடனே ஏலத்திற்கு விட்டு விட மாட்டார்கள். நான்கு, ஐந்து முறையாவது நோட்டீஸ் அனுப்பியும், நகையை அடகு வைத்தவர்களிடமிருந்து பதில் வரவில்லை என்றால்தான் ஏலம் விடப்படும் என்பதால் இந்த நகைகளுக்கு பிற்காலத்தில் எந்த சிக்கலும் வராது. கட்ட வேண்டிய அசல், வட்டி மற்றும் அபராத தொகை என அனைத்தையும் சேர்த்து தான் ஏலத்தொகை இருக்கும். ஏலம் நடக்கும்போது, நாம் விரும்பும் விலையை கேட்கலாம். வங்கிக்கு கட்டுப்படியாகும் விலை கிடைத்தால் பணத்தை பெற்றுக் கொண்டு நகையைத் தந்து விடுவார்கள். புதிதாக நகைகள் வாங்கினால் சேதாரம், செய்கூலி என தனியாக ஒரு தொகையை கொடுக்க வேண்டும். ஏல நகையில் அந்த சிக்கல் இல்லை.
Comments
Post a Comment