தமிழ்நாட்டில் செட்டிநாடு ரெசிபிக்கள் மிகவும் பிரபலமானவை மற்றும் சுவையானவையும் கூட. அதோடு பலருக்கும் செட்டிநாடு ரெசிபிக்கள் பிடிக்கும். இதற்கு செட்டிநாடு ரெசிபிக்களில் பயன்படுத்தும் மசாலாக்கள் தான் காரணம். செட்டிநாடு ரெசிபிக்களில் அசைவம் மட்டுமின்றி, சைவ ரெசிபிக்களும் அட்டகாசமாக இருக்கும். அதில் ஒரு வித்தியாசமான ரெசிபி தான் செட்டிநாடு சைவ மீன் குழம்பு. இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
கீழே செட்டிநாடு சைவ மீன் குழம்பு ரெசிபி எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சைவ மீன் செய்வதற்கு...
* தட்டபயறு - 1 கப்
* பூண்டு - 2 பற்கள்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
குழம்பு செய்வதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* தக்காளி - 1 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1.5 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* புளிச்சாறு - 3 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 2-3 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் தட்டபயறை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை நன்கு கழுவி விட்டு, மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் 'சைவ மீன் செய்வதற்கு' கொடுத்துள்ள பிற பொருட்களையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு அலுமினியம் தாள் அல்லது வாழை இலையில் அரைத்த விழுதை தட்டையாக பரப்பி மூடி, இட்லி பாத்திரத்தில் வைத்து, 15-20 நிமிடம் வேக வைத்து இறக்கிக் கொள்ளவும். பின் வேக வைத்ததை மீன் போன்று ஓரளவு நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
* பிறகு ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வேக வைத்து வெட்டிய துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் தாளிக்கவும்.
* அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை சேர்த்து, உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் புளிச்சாறு மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைக்கவும்.
* இறுதியில் பொரித்து வைத்துள்ளதைப் போட்டு, குறைவான தீயில் சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கினால், சுவையான செட்டிநாடு சைவ மீன் குழம்பு தயார்.
Comments
Post a Comment