தீபாவளி லேகியம் செய்வது எப்படி? இப்படித்தான்…
- Get link
- X
- Other Apps
தீபாவளி பலகாரம் செய்வது போலவே, செரிமாணத்தை சரி செய்யும் தீபாவளி லேகியமும் செய்யும் வழக்கம் உண்டு.
தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது கொண்டாட்டமும், திண்பண்டங்களும் தான். பலகாரங்களை ரசித்து ருசித்து உண்டு, தீபாவளியை கொண்டாடினாலும், அதன் பின் இணைப்பாக அஜீரணக் கோளாறும் ஏற்படும். எனவே, தீபாவளி பலகாரம் செய்வது போலவே, செரிமாணத்தை சரி செய்யும் தீபாவளி லேகியமும் செய்யும் வழக்கம் தமிழகத்தில் உண்டு.
வயிறு கோளாறுகளை சரி செய்ய உதவும் தீபாவளி லேகியம், மழைக்காலத்தில் ஏற்படும் மழைத்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கவும் உதவும், ஐப்பசியில் அடைமழை பெய்யும் என்பதால், தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கவும் இந்த வீட்டு மருந்து உதவும். வீட்டில் உள்ள மசாலாக்களை பயன்படுத்தி இந்த லேகியம் தயாரிக்கப்படுகிறது. தீபாவளி மருந்து என்றும் அழைக்கப்படும் தீபாவளி லேகியத்தை தயார் செய்வதும் சுலபம் தான்…
தேவையான பொருட்கள்:
கண்டந்திப்பிலி 50 கிராம்
அரிசி திப்பிலி 20 கிராம்
ஜாதிக்காய் 1
ஜாதிபத்திரி 8 இதழ்
சித்தரத்தை 50 கிராம்
விரலி மஞ்சள் 10
சுக்கு 100 கிராம்
அதிமதுரம் 20 கிராம்
ஒமம் 100 கிராம்
லவங்கம் 6
ஏலக்காய் 6
தனியா 25 கிராம்
மிளகு 50 கிராம்
சீரகம் 50 கிராம்
வெல்லம் 400 கிராம்
நெய் 250 கிராம்
நல்லெண்ணை 250 கிராம்
தேன் 100 கிராம்
கண்டந்திப்பிலி, அரிசி திப்பிலி, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, சித்தரத்தை, விரலி மஞ்சள், சுக்கு,
அதிமதுரம் ஆகியவற்றை நன்கு பொடி செய்து வைக்கவும். பொடி செய்த மசாலாக் கலவையை எண்ணெய் விடாமல் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒமம், லவங்கம், ஏலக்காய், தனியா, மிளகு ஆகிய ஐந்து பொருட்களையும் எண்ணெய் விடாமல் வறுக்கவும். பிறகு வறுத்து வைத்துள்ள அனைத்தையும் அரைக்கவும். நன்றாக சலித்துக்கொண்டு மாவாக உள்ள மசாலாக்களை தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்
அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தை பொடித்து போட்டு, மூழ்கும் வரை தண்ணி ஊற்றி கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பிறகு வெல்லத்தை பாகாக காய்ச்சவும். பிறகு நல்லெண்ணை, நெய் இரண்டிலும் பாதியளவை ஊற்றி, அதில் மசாலாக் கரைசலையும் சேர்த்து வேகவிடவும்.
கட்டி தட்டாமல் வேகவிட்டு, மீதமுள்ள நெய் மற்றும் நல்லெண்ணையை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, நன்றாக கிளறி கொண்டே இருக்கவும். ஒரு கட்டத்தில் நெய்யும், எண்ணையும் கரைசலில் இருந்து பிரிந்து வரும். அப்போது அந்தக் கலவை கெட்டியாக அல்வா பதத்திற்கு வந்துவிடும். அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி, அதில் தேனை சேர்த்து கிளறிவிடவும். தீபாவளி மருந்து தயார்…
ALSO READ : இந்த ஒரே ஒரு சாதம் தேவையற்ற கொழுப்பை நிச்சயம் குறைக்குமாம்! வெறும் 10 நிமிடத்தில் எப்படி தயாரிப்பது?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment