உலகத்தின் பழமையான பாரம்பரியச் சின்னங்களின் வரிசையில் இந்தியாவை சேர்ந்த இயற்கை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் அளித்துள்ளது. அவை இங்கே....
மனாஸ் வன விலங்கு சரணாலயம், அசாம்
இது இமாலயத்தின் அடிவாரத்தில் உள்ள மனாஸ் ஆற்றின் சமவெளிப் பகுதியில் அமைந்துள்ளது. 50 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து காட்சி அளிக்கிறது. பாலூட்டி விலங்குகள் அதிகம் வசிக்கும் சரணாலயம் இது.
கடற்கரைக் கோவில், மாமல்லபுரம்
சென்னையில் இருந்து 58 கி.மீ. தொலைவில் உள்ளது மாமல்லபுரம். அங்கு பல்லவ மன்னர்களால் இந்த கலை எழில் கொஞ்சும் கோவில்கள் கட்டப்பட்டன. உலகத்திலேயே திறந்தவெளி சிற்பங்களாக இந்த நினைவுச் சின்னங்கள் இருக்கின்றன. இது 1984-ம் ஆண்டு யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
குதுப்மினார், டெல்லி
டெல்லியின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள குதுப்மினார், சிவப்புக் கற்களால் உருவாகியுள்ள 72.5 மீட்டர் உயரமுள்ள கோபுரம். இது 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
செங்கோட்டை, டெல்லி
17-ம் நூற்றாண்டில் ஷாஜஹான் காலத்தில் கட்டப்பட்டது செங்கோட்டை. டெல்லியின் வடக்குப் பகுதியில் 120 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.
தாஜ்மகால், ஆக்ரா, உத்தரப்பிரதேசம்
உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று. தனது காதல் மனைவி பேகம் மும்தாஜ் மஹால் நினைவாக ஷாஜஹான் கட்டிய கலைக்கோவில் இது. முகலாய கட்டிடக் கலை நுட்பத்துடன் வெள்ளை மார்பிள் கற்களால் கட்டப்பட்டது.
அஜந்தா குகை ஓவியங்கள், மகாராஷ்டிரா
இந்தியாவின் பெருமைமிகு அடையாளங்களில் அஜந்தா குகை ஓவியங்கள் மிக முக்கியமானது. இரண்டு தளங்களாக கட்டப்பட்டது. முதல் தளம் இரண்டாம் நூற்றாண்டில் உருவாகியுள்ளது. பச்சிலைகளால் உருவாக்கப்பட்ட பழம்பெரும் ஓவியங்கள் இங்கு உள்ளன.
பெரிய கோவில், தஞ்சாவூர்
சோழ சாம்ராஜ்யத்தின் கலைச்சின்னம் இக்கோவில். காலத்தால் அழியாத கலைச்சின்னமாக விளங்கும் இக்கோவில், ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. 1987-ம் ஆண்டு யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களில் பட்டியலில் இடம்பெற்றது.
ஆக்ரா கோட்டை, உத்தரப்பிரதேசம்
ஆக்ராவின் சிவப்புக் கோட்டை என இது அழைக்கப்படுகிறது. முகலாய அரசர்களால் கட்டப்பட்டது. யமுனை நதியின் வலது கரையில் சலவைக் கற்களால் கட்டப்பட்டது இக்கோட்டை.
மேற்குத்தொடர்ச்சி மலை
மேற்குத்தொடர்ச்சி மலை சாயாத்திரி மலைகள் என்று அழைக்கப்படுகிறது. பல்லுயிர்ச் சூழல் உள்ள பாரம்பரிய சின்னமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment