சமுதாயத்தில் நீங்கள் எந்த விஷயத்தை செய்ய நினைத்தாலும், ஆதரவும் எதிர்ப்பும் சேர்ந்தே இருக்கும். சிலர் கூறும் எதிர்மறை கருத்துக்களை யோசித்துக் கொண்டு, நல்ல செயல்களை செய்வதற்குத் தயங்கக் கூடாது.
நம் வாழ்க்கையில், ஒவ்வொரு நாளும் பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறோம். அந்த அனுபவத்தைக் கொண்டு புதிய செயல்களை தொடங்க விரும்புவோம்.
அத்தகைய தொடக்கங்கள், ஆரம்பத்திலேயே பெரியதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிறிய செயல்களில் இருந்தே தொடங்கலாம். உதாரணமாக, தினமும் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும் என்று நினைப்பது, நாம் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு வாழ்க்கையை மேம்படுத்த நினைப்பது, உடல் ஆரோக்கியத்திற்காக சில மாற்றங்களை செய்ய நினைப்பது போன்றவை சிறு செயல்களுக்கான தொடக்கமாகவும் இருக்கலாம்.
இவ்வாறு புதிய தொடக்கங்களை மேற்கொள்ள ஆரம்பிக்கும்போது, சில தடைகளை சந்திக்க நேரிடலாம். அதன் காரணமாக, ஆரம்பித்த சில நாட்களிலேயே அவற்றை முழுவதும் பின்பற்றாமல் கைவிட்டிருக்கலாம். இதை மனதில் கொண்டு வேறு சில காரியங்களை தொடங்குவதற்கு தயக்கம் ஏற்படும்.
புதிய செயல்களைத் தொடங்கும்போது, நடந்து முடிந்ததைப்பற்றி யோசிக்காதீர்கள். வாழ்க்கையில் ஒரு சில விஷயங்களை பின்பற்ற முடியாமல் போவது இயல்புதான் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
எந்த செயலையும் ‘பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ எனத் தள்ளிப்போடுவது மிகப் பெரிய தடையாக இருக்கும். ஒரு செயலில் ஆரம்பத்தில் இருக்கும் ஆர்வமும், உந்துதலும் இறுதிவரை சீராக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சோம்பலாக இருக்கும்போது உங்களுக்கு பிடித்தவற்றைச் செய்வதன் மூலம், உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ள முடியும்.
சமுதாயத்தில் நீங்கள் எந்த விஷயத்தை செய்ய நினைத்தாலும், ஆதரவும் எதிர்ப்பும் சேர்ந்தே இருக்கும். சிலர் கூறும் எதிர்மறை கருத்துக்களை யோசித்துக் கொண்டு, நல்ல செயல்களை செய்வதற்குத் தயங்கக் கூடாது. ‘அடுத்தவர்கள் என்ன சொல்வார்கள்? ஒருவேளை நான் தோற்றுவிட்டால் என்னாகும்?’ என்று யோசித்து பல விஷயங்களை செய்யாமல் விட்டுவிடுவோம்.
தோற்றுப்போவதில் எந்தத் தவறும் இல்லை. பல முறை தோற்றாலும், திரும்பத் திரும்ப முயற்சி செய்யுங்கள். தோல்வியால் மட்டும் தான் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டு திருத்திக்கொள்ள முடியும். மற்றவர்கள் கூறும் எதிர்மறையான கருத்துக்களை மனதிற்குள் எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் செய்யப் போகும் செயல் சரி என்று உங்களுக்கு தோன்றினால், எதைப்பற்றியும் யோசிக்காமல் செயல்படுத்தத் தொடங்குங்கள்.
‘இந்த வயதில் நான் இதைச் செய்யலாமா? செய்தால் நன்றாக இருக்குமா? மற்றவர்கள் என்ன சொல்வார்கள்?’ என்று யோசிப்பது, உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் புதிய தொடக்கத்துக்கு தடையாக இருக்கும்.
பெரிய சாதனைகளுக்கு பின்னால், ஒரு சின்ன புதிய தொடக்கமே காரணமாக இருக்கும். புதிய விஷயங்களை செய்வதற்கும், தொடங்குவதற்கும் வயது தடையில்லை. சாதனைகளுக்கும், மாற்றத்திற்கும் வயது தேவையில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
Comments
Post a Comment