மனதை ஆழ்த்தும் துயரம் இருந்தால் உண்ணவோ, உறங்கவோ, சிரிக்கவோ தோன்றாது. கவலையில் இருக்கும்போது, மனது தவறான முடிவுகளைத் தேடும். எனவே, தனிமையில் இருப்பதைத் தவிர்க்க முயலுங்கள்.
அன்றாட வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைவதற்கு பல நிகழ்வுகள் இருக்கின்றன. அவற்றை விடுத்து, எதிர்மறையாக நடந்த விஷயங்களுக்காக கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இவ்வாறு கவலையில் மனம் மூழ்காமல், மகிழ்ச்சியாக வாழ்வதற்கு சில வழிகளை பின்பற்றினால் போதும். அவை இங்கே…
காரணத்தை கண்டறியுங்கள்:
ஒரு விஷயத்தை மனதில் நிறுத்தி கவலைப்படுகிறீர்கள் என்றால், அந்தப் பிரச்சினையின் ஆணி வேர் எது? எதனால் கவலை அடைகிறோம் என்பதைக் கவனிக்க வேண்டும். அது தீர்க்கக்கூடிய பிரச்சினையாக இருந்தால், ஆரம்ப நிலையிலேயே சரி செய்ய வேண்டும். கவலை உண்டாக்கும் சம்பவத்தையே தொடர்ந்து அசைபோட்டுக் கொண்டிருக்காமல், மனதை மாற்று வழியில் திருப்பத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்வது முக்கியம்.
நிழல் உலகில் இருந்து வெளியேறுங்கள்:
பலரும் பிரச்சினையை அசைபோட்டுக் கொண்டே, தவறான விஷயங்களைக் கற்பனை செய்து நிஜ உலகை விடுத்து நிழல் உலகில் வாழ்வதுண்டு. இதன் மூலம் கவலை மேலும் அதிகரிக்கும். இதன் காரணமாக, சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் திணறுவார்கள். எனவே, முதலில் கற்பனை செய்து கவலைப்படுவதை நிறுத்தி, எதார்த்தமாக சிந்திக்க வேண்டும்.
மகிழ்ச்சியான தருணங்களை ரசியுங்கள்:
மனதை ஆழ்த்தும் துயரம் இருந்தால் உண்ணவோ, உறங்கவோ, சிரிக்கவோ தோன்றாது. கவலையில் இருக்கும்போது, மனது தவறான முடிவுகளைத் தேடும். எனவே, தனிமையில் இருப்பதைத் தவிர்க்க முயலுங்கள். உங்களைச் சுற்றி நடக்கும் மகிழ்ச்சியான தருணங்களை ரசியுங்கள். மகிழ்ச்சியில் மனதில் தெளிவான சிந்தனைகள் பிறக்கும். மேலும், ஆழ்ந்த உறக்கமும் கட்டாயம் அவசியம்.
தியானத்தில் ஈடுபடுங்கள்:
மனது தெளிவடைய வேண்டுமானால், தினமும் குறைந்தபட்சம் 10 நிமிடமாவது தியானம் செய்யலாம். இதன் மூலம் மனம் லேசாகி தெளிவான சிந்தனை ஏற்படும். மேலும், மூச்சுப்பயிற்சி, யோகா போன்ற பயிற்சிகளையும் செய்யலாம்.
சமூக வலைத்தளங்களை ஒதுக்குங்கள்:
கவலையுடன் இருக்கும்போது, சமூக வலைத்தளங்களை அதிகமாகக் கையாளாதீர்கள். முடிந்தவரை, மனதை லேசாக்கும் வகையில், இயற்கை சூழ்ந்த இடங்களுக்குச் சென்று அங்கு நேரத்தைச் செலவிடுங்கள். சமூக வலைத்தளங்கள் போலியான மகிழ்ச்சியை அளிக்கக்கூடியவை. அவற்றைப் பயன்படுத்தாதவர்கள் அதிக மகிழ்ச்சியுடன் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுங்கள்:
உங்களை எப்போதும் தனியாக இருக்க விடாமல், குடும்ப உறுப்பினர்களுடன் சந்தோஷமாகப் பேசுங்கள். சிறிய விளையாட்டுகளில் ஈடுபடுங்கள். இவை அனைத்தும் ஆரோக்கியமான முறையில் இருக்க வேண்டும். மேலும், இது உளவியல் ரீதியாகவும் மனதை மேம்படுத்த உதவும்.
Comments
Post a Comment