Aquagenic Pruritus என்ற நீர் அலர்ஜி நோயால் நியா பாதிக்கப்பட்டிருக்கிறாராம். இதனால் அவரின் தோல் கூட உரிந்து விடுகிறதாம். இது மிகவும் அரிதான ஒரு நோயாக பார்க்கப்படுகிறது.
நீரின்றி அமையாது இவ்வுலகு என்பது வள்ளுவன் வாக்கு, அதைப்போல இந்த உலகில் வாழும் எந்த உயிருக்கும் நீர் தான் அத்யாவசிய தேவையாக இருக்கிறது. நீர் இல்லாமல் எந்தவொரு உயிரும் கிடையாது. ஆனால் அந்த நீரே பெண் ஒருவருக்கு எதிரியாகவும் வலி தரக்கூடியதாகவும் மாறியிருக்கிறது என்றால் நம்புவது சற்று கடினமாகத் தான் இருக்கிறது. இருப்பினும் அந்த தண்ணீரால் தான் படும் அவஸ்தையை விவரித்து அந்த பெண் வீடியோ ஒன்றையே வெளியிட்டிருக்கிறார். அதில் அத்யாவசிய செயலான குளிப்பதை கூட அவர் பெரும் சிரமப்பட்டே செய்யவேண்டியிருக்கிறது என்பதை எடுத்துரைத்திருப்பதுடன் நீர் பட்ட பின்னர் அவர் உடல் அனுபவிக்கும் அவஸ்தையும் அவர் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இங்கிலாந்தை சேர்ந்த 23வயதாகும் நியா செல்வே என்ற பெண்ணுக்கு நீர் என்றாலே அலர்ஜி. தண்ணீர் பட்டுவிட்டாலே தனது உடலில் எரிச்சலும், அரிப்பும், வலியும் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். Aquagenic Pruritus என்ற நீர் அலர்ஜி நோயால் நியா பாதிக்கப்பட்டிருக்கிறாராம். இதனால் அவரின் தோல் கூட உரிந்து விடுகிறதாம். இது மிகவும் அரிதான ஒரு நோயாக பார்க்கப்படுகிறது. இவர் பல்துலக்குவதற்கு கூட தண்ணீர் பயன்படுத்துவது இல்லையாம். நீரை கொண்டு செய்யக் கூடிய செயல்களை இவர் தனக்கே உரிய வகையில் மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் குளிக்காமல் இருக்க முடியாது அல்லவா?
நாம் அன்றாடம் குளிப்பதே ஒரு அலாதியான விஷயம் தான், சிலர் சத்தமாக பாடிக்கொண்டே குளிப்பார்கள். ஆனால் நியா குளிப்பதால் தனக்கு ஏற்படும் வலியையும், குளிப்பதற்காக அவர் எத்தனை மெனக்கெடல்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதையும், குளித்த பிறகு மணிக்கணக்கில் அனுபவிக்கும் அவஸ்தையையும் பிறர் அறிந்து கொள்ள வேண்டி வீடியோவாகவே எடுத்து வெளியிட்டிருக்கிறார்.
குளிப்பதற்கும் முன் அவரது பாத் டப்பில் சில க்ரீம்களை தண்ணீருடன் அவர் கலந்து கொள்கிறார். அதே போல நீரால் தனக்கு ஓரளவு பாதிப்பு குறைவதற்காக தனது தோலுக்கு உகந்த சில க்ரீம்களை அவர் அப்ளை செய்து கொள்கிறார். பின்னர் ஒரு வலியாக வலியை பொறுத்துக் கொண்டு குளித்துவிட்டு வெளியேறுகிறார்.
நீரை உடலில் இருந்து உடனடியாக காயவைக்க ஹீட்டர்களையும், ஃபேனையும் அவர் பயன்படுத்துகிறார். பின்னர் சில மாயிஸ்சரைசர் க்ரீம்களை பயன்படுத்துகிறார்.
குளித்துவிட்டு வெளியேறிய சில நிமிடங்களில் இவருக்கு வலியும், அரிப்பும், எரிச்சலும் ஏற்படுகிறது. இந்த வேதனையை அவர் சுமார் 3 மணி நேரம் வரை அனுபவிக்கிறாராம். இதையே கடந்த 5 ஆண்டுகளாக அன்றாடம் அனுபவிப்பதாகவும், நாளுக்கு நாள் தனது நோயின் தீவிரம் அதிகரித்துக் கொண்டே இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்,
மேலும் இந்த நோயில் இருந்து விடுபட ஜெர்மனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு £2,50,000 யூரோக்கள் செலவாகும் என தெரிவிக்கும் நியா, அதற்காக நிதி திரட்டும் வேலைகளில் இறங்கியுள்ளார். GoFundMe என்ற பக்கத்தில் பொதுமக்களின் நன்கொடைகளையும் அவர் எதிர்பார்க்கிறார்.
Comments
Post a Comment