பிளாஸ்டிக் எனும் ஆபத்தை உணர்ந்த உலக நாடுகள் தற்போது அதனுடைய பயன்பாட்டை கூடுமான வரையில் தவிர்க்க முடிவெடுத்துள்ளன.
மனிதர்களின் ஒரே வாழ்விடமான பூமியின் சுற்றுச்சூழலுக்கு மனிதர்களே தீங்கிழைப்பது காலத்தின் கொடுமையாக அரங்கேறி வருகிறது. நாகரீக வாழ்க்கை முறைக்கு மாறிவருவதில் கவனம் கொண்டுள்ள மனிதர்கள், சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மாசுபாட்டை பற்றி அதிகம் கவலைப்படுவதாக இல்லை. இதன் காரணமாக பருவநிலை மாற்றம் எனும் கொடிய ஆபத்தை மெல்ல மெல்ல அனுபவிக்கத் தொடங்கியுள்ளோம். காற்று, நிலம், நீர் என அனைத்து இயற்கை வளங்களையும் நஞ்சாக மாற்றி வருகிறோம்.
பூமியின் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு ஏற்படுத்தி வரும் மிக முக்கிய பொருளாக இருப்பது பிளாஸ்டிக். இலகுவாக இருக்கிறதே என கடைக்கு செல்லும் போது கைகளை வீசி சென்று, பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் வாங்கி வருகிறோம். இந்த பிளாஸ்டிக் மீண்டும் குப்பைக்கு தான் செல்கிறது, ஆனால் அது பூமியில் பல நூறாண்டுகள் மக்கிப் போகாமல் தங்கி இயற்கை சமன்பாட்டை பாழ்படுத்தி வருகிறது. நிலத்தில் ஆபத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த பிளாஸ்டிக் தற்போது கடலுக்கும் சென்று அங்கு வசித்து வரும் உயிரினங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்திவருகின்றன.
பிளாஸ்டிக் எனும் ஆபத்தை உணர்ந்த உலக நாடுகள் தற்போது அதனுடைய பயன்பாட்டை கூடுமான வரையில் தவிர்க்க முடிவெடுத்துள்ளன. அந்த வகையில் இந்தியாவில் ஒற்றை முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை 2022ம் ஆண்டு முதல் முற்றிலும் தடை செய்வோம் என 2018ல் பிரதமர் மோடி அறிவித்தார். 2019ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற சூழலியல் மாநாட்டில் ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக்கை முற்றிலும் தடை செய்வதற்கான அவசியத் தேவையை இந்தியா வலியுறுத்தியது.
இந்நிலையில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த விதிகள், 2021ஐ, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது, 2022 ஜூலை 1 முதல் மிட்டாய் குச்சிகள், தட்டுகள், கோப்பைகள் மற்றும் கட்லரி உட்பட அடையாளம் காணப்பட்ட ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் (SUP) பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றைத் தடை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி செப் 30 2021 முதல், பிளாஸ்டிக் கைப்பைகளின் தடிமன் 50 மைக்ரான்களில் இருந்து 75 மைக்ரான்களாக அதிகரிக்கப்படும், டிசம்பர் 2022 முதல் இத்தடிமன் 120 மைக்ரான்களாக அதிகரிக்கப்படும். இதன் மூலம் இவ்வகை பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்ய இயலும் என சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2022 ஜூலை முதல் தடை செய்யப்படவிருக்கும் பிளாஸ்டிக் பொருட்கள்:
பாலிஸ்டிரீன் மற்றும் விரிவாக்கப்பட்ட பாலிஸ்டிரீன் உள்ளிட்ட பின்வரும் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கின் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு, ஜூலை 1, 2022 முதல் பொருட்கள் தடை செய்யப்பட வேண்டும்.
பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட காதுகுடையும் இயர் பட்ஸ்
பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள்
பிளாஸ்டி கொடிகள்
மிட்டாய் குச்சிகள்
ஐஸ்கிரீம் குச்சிகள்
அலங்காரத்துக்கு பயன்படுத்தும் தெர்மாகோல்
பிளேட்கள்
கப்கள்
கட்லரி பொருட்களான ஸ்பூன், கத்தி, ஸ்ட்ரா, ட்ரே
ஸ்வீட் பாக்ஸ்களை சுற்றியிருக்கும் ரிப்பன்கள்
வாழ்த்து அட்டை
சிகரெட் பாக்கெட்கள்
பிளாஸ்டிக் அல்லது பிவிசி பேனர்கள் (100 மைக்ரான்களுக் கு குறைவு)
Comments
Post a Comment