திருப்பூரில் கொரோனா உருவ பொம்மை, முகக்கவசம், சோப், கிருமிநாசினி பாட்டில் ஆகியவற்றை கருங்கல்லில் சிற்பமாக வடித்து சிற்பி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், அவினாசி திருமுருகன்பூண்டி பகுதிகள் சிற்பங்கள் செய்வதில் பிரசித்தி பெற்ற இடமாகும். திருமுருகன் பூண்டி பகுதியில் 200க்கும் மேற்பட்ட சிற்ப கலைக் கூடங்கள் இயங்கி வருகின்றன. இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் பல வகைகளில், பல்வேறு வடிவங்களில் புகழ் பெற்ற சிலைகள் இங்கிருந்து தயாரித்து அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் மிகப்பெரிய எடையுடன் கூடிய ஒரே கல்லால் செதுக்கப்பட்ட பெரும் சிலைகள் செய்வதில் இங்குள்ள சிற்பிகள் திறமை வாய்ந்தவர்கள்.
மேலும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் செய்வதிலும் திறமை வாய்ந்த சிற்பிகள் பலர் திருமுருகன் பூண்டி பகுதியில் உள்ளதால் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் இப்பகுதியில் சிலைகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சிற்பக் கலைஞர்
இந்நிலையில் கொரோனா நோய் பரவலால், அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக சிற்பம் செய்யும் தொழிலும் முடங்கியது. இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த சிற்பி ஒருவர் கொரோனா விழிப்புணர்வு சிற்பங்களை வடிவமைத்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.திருப்பூர் மாவட்டம், அவிநாசியை சேர்ந்த சிற்ப கலைஞர் சரவணன். தனது பத்து வயது முதலே சிற்பத்தொழில் கற்று, பல்வேறு புதிய சிற்பங்களை தனது முயற்சியால் வடித்து வருகிறார். இவர் தெய்வங்களின் சிலைகளை கலை நயத்துடன் வடித்து வருவதால் இவர் வடிக்கும் சிலைகளுக்கு மவுசு அதிகம். கொரோனாவால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் புதிய ஆர்டர்கள் இல்லாததால் கிடைத்த ஓய்வு நேரத்தையும் பயனுள்ள முறையில் பயன்படுத்த திட்டமிட்ட சரவணன், கொரோனா நோய் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரானா உருவ பொம்மை, முக கவசம், கிருமிநாசினி பாட்டில் மற்றும் சோப் உள்ளிட்டவற்றை கருங்கற்களால் சிற்பமாக வடித்துள்ளார்.ஓரு மாத காலத்திற்கும் மேலாக தன்னுடைய உழைப்பால் இந்த சிற்பங்களை வடிவமைத்துள்ளார். இதுகுறித்து சிற்பகலைஞர் சரவணன் கூறும் பொழுது, ’சிறுவயது முதலே சிற்பம் வடித்து வருவதால், ஊரடங்கின் காரணமாக சிற்பம் செய்யும் தொழிலும் பாதிக்கப்பட்டது. ஓய்வு நேரத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த கருங்கல்லால் ஆன சிற்பங்களை அமைத்துள்ளேன். நலிந்து போன சிற்ப கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டால் உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இவர், சிற்பங்களை பொதுமக்கள் பார்வைக்காக வைத்துள்ளார். இந்த சிற்பங்களை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment