நாள் முழுவதும் அடிக்கடி காஃபி அருந்துவதற்கு பதிலாக ஆரோக்கியமான கிரீன் டீ அருந்துவது நல்லது.
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், குடல் ஆரோக்கியம் சீராக இருக்க வேண்டும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி முதல் மன ஆரோக்கியம் வரை, உங்கள் உடலை பல்வேறு வியாதிகளிலிருந்து பாதுகாக்கிறது. எனவே உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும். மேலும் உங்கள் அன்றாட வாழ்க்கை முறையில் நீங்கள் செய்யும் சில மாற்றங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதற்கு நீங்கள் தினமும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
நார்ச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுங்கள்:
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஃபைபர் முக்கியமானது. இதற்கு உணவில் அதிகளவிலான நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்க்க வேண்டும். ஆண்கள் மற்றும் பெண்கள் ஒவ்வொரு நாளும் 25-30 கிராம் ஃபைபர் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். ஆப்பிள், கொய்யாப்பழம், வாழைப்பழம், அத்திப்பழம், பாப்கார்ன், சுண்டல், கேரட், காலிஃப்ளவர், பாசிப்பயறு மற்றும் பாதாம் பருப்பு போன்றவற்றில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
நிறைய தண்ணீர் குடிக்கவும்:
தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியம். இது உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமின்றி, குடலை சுத்தப்படுத்தவும் உதவுகிறது. இதனால் குடல் இயக்கமானது எளிதாக மாறுகிறது. போதுமான அளவு தண்ணீர் அருந்தாமல் இருந்தால் நீரிழப்பு மாற்றம் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே தண்ணீர், இளநீர், பழ ஜூஸ்கள் போன்றவற்றை அடிக்கடி அருந்த வேண்டும்.
புரோபயாடிக்குகள் அவசியம்:
உங்கள் உணவில் புரோபயாடிக்குகளை சேர்ப்பதில் கவனம் செலுத்துங்கள். புரோபயாடிக்குகள் உங்கள் உடலில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது மற்றும் அதை நன்றாக செயல்பட வைக்கிறது. மேலும் நன்மை பயக்கும் நேரடி பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் ஆகியவை நம் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. தயிர், டார்க் சாக்லேட், ஊறுகாய், ஆலிவ் எண்ணெய், சீஸ் போன்ற பல சுவையான உணவுகளில் புரோபயாடிக்குகள் இருக்கிறது. இது போன்ற இயற்கை உணவுகள் மூலமாக புரோபயாடிக்குகளை பெறலாம்.
சுறுசுறுப்பாக இருங்கள்:
நீங்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டே இருந்தால் குடல் இயக்கம் பாதிக்கப்படும். எனவே எப்போதும் சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டும். எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்கும் வாழ்க்கை முறை உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே எந்த அளவிற்கு உணவு சாப்பிடுகிறீர்களா அந்த அளவிற்கு வேலை செய்யுங்கள். வீட்டில் இருந்தே வேலை செய்பவர்கள் அடிக்கடி எழுந்து நடந்து சென்று வாருங்கள்.
சாப்பிட்ட உடனேயே படுக்க வேண்டாம்:
நம்மில் சாப்பிட்ட உடனேயே படுக்கும் பழக்கம் ஏராளமானோருக்கு உள்ளது. இது முற்றிலும் தவிர்க்க வேண்டிய விஷயம் ஆகும். இதனால் செரிமான பிரச்சனை ஏற்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் பல்வேறு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அசவுகரியத்தை ஏற்படுத்தும்.
காஃபிக்கு பதிலாக கிரீன் டீ அருந்தலாம்:
நாள் முழுவதும் அடிக்கடி காஃபி அருந்துவதற்கு பதிலாக ஆரோக்கியமான கிரீன் டீ அருந்துவது நல்லது. இது குடலுக்கு நன்மை பயக்கும். மற்றும் செரிமானத்தை எளிதாக்குகிறது. கிரீன் டீயில் தயனைன் உள்ளது. இந்த அமினோ அமிலம், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் ஆன்டி-பாடிகளை வழங்கும். இதனால் மழைக்காலத்தில் உருவாகும் தொற்று பாதிப்புகளை தடுக்க முடியும்.
பல் சுகாதாரத்தில் கவனமாக இருங்கள்:
வாயில் உள்ள பல தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் குடலுக்குள் நுழைந்து ஆரோக்கியத்தை பாதிக்கும். இதனால் வழக்கமான பல் துலக்குதல் சரியாக இருக்க வேண்டும். இதனால் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உடலுக்குள் செல்வது தவிர்க்கப்பட்டு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும். எனவே தினமும் இரண்டு முறை பல் துலக்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
Comments
Post a Comment