காட்டு கரடிகள் இரண்டு புட்பால் ஆடிய காட்சிகள் தற்போது இணையத்தில் பெரிதும் வைரலாகியுள்ளன.
தொழில்நுட்பங்கள் சில வழிகளில் பாதுகாப்பற்றதாக இருந்தாலும், இணைய வசதி என்ற ஒரு விஷயம் மூலம் தற்போது நம்மால் நம்பமுடியாத சில விஷயங்களை பார்க்க முடிகிறது. அதிலும் இதுவரை அறியப்படாத, விலங்குகளின் இரகசியமான திறமைகளும் தற்போது வெளிச்சத்திற்கு வருகிறது.
பெற்றோருடன் உட்கார்ந்து சாப்பிடும் நல்ல பண்புள்ள நாய், தண்ணீர் பம்பில் இருந்து தண்ணீர் இறைக்கும் யானை மற்றும் துடுப்பு வீரருக்கு நட்பு கொடுத்த திமிங்கலம் ஆகியவற்றைப் காண முடிந்தது. அதிலும் வனவிலங்குகளின் சில செய்கைகள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. அந்த வகையில் காட்டு கரடிகள் இரண்டு புட்பால் ஆடிய காட்சிகள் தற்போது இணையத்தில் பெரிதும் வைரலாகியுள்ளன.
அந்த ஸ்மார்ட் விலங்குகள் இரண்டும் தங்களிடம் கிடைத்த பந்தை வனத்திற்குள் எடுத்துச் செல்வதற்கு முன்பு, தங்கள் கால்பந்து விளையாடும் திறனை வெளிப்படுத்திய காட்சிகள் ஆச்சர்யத்தையே தந்துள்ளது. இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(செப்.12ம் தேதி) ஒடிசாவின் நபரங்பூர் மாவட்டத்தின் சுகிகான் கிராமத்தில் நடந்துள்ளது.
நேற்று அந்த கிராமத்திலிருந்த ஒரு சில இளைஞர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது இரண்டு காட்டு கரடிகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் நுழைந்தன. இரு கரடிகளை பார்த்து பயந்துபோன இளைஞர்கள் கால்பந்தை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அப்போது அங்கிருந்த பந்தை இரு கரடிகளும் உதைத்து, தங்கள் கால்கள் மற்றும் வாய்களால் தூக்கி எறிய ஆரம்பித்தன. பின்னர், கரடிகள் அந்த கால்பந்தை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் சென்றன. கரடிகளை கண்டு மைதானத்தில் இருந்து ஓடிய இளைஞர்களில் சிலர், வெகு தொலைவில் நின்றுகொண்டு கரடிகள் கால்பந்து விளையாடியதை தங்கள் போனில் பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து அந்த கிராமத்தில் வசிக்கும் ஜுகல் சாஹு என்பவர் கூறியதாவது, "கிராமத்தின் எல்லையில் கரடிகளை நாங்கள் இதற்கு முன்பு பார்த்திருக்கிறோம். ஆனால் அவை கால்பந்து விளையாடுவதைப் பார்த்தது இதுவே முதல் முறை. இதுபோன்ற ஒரு நிகழ்வு சர்க்கஸில் மட்டுமே நடக்கும் என்று நாங்கள் நினைத்தோம். அது எங்களுக்கு ஒரு மறக்கமுடியாத காட்சி. " என்று பிரம்மிப்புடன் தெரிவித்திருந்தார்.
இதேபோன்ற சம்பவம் ஒன்று 2019ம் ஆண்டு நடந்தது. மாடு ஒன்று மைதானத்தில் கால்பந்து விளையாடும் வீடியோ காட்சி இணையத்தில் தீயாய் பரவியது. கோவாவின் மார்டோல் பகுதியில் உள்ள மைதானத்தில் சில இளைஞர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரதவிதமாக அங்கு நின்று கொண்டிருந்த மாட்டின் அருகே பால் சென்றது.இதை எடுக்க இளைஞர் ஒருவர் முயற்சி செய்கிறார். ஆனால், பந்தை எடுக்கவிடாமல் தன் அருகில் வைத்து கொண்ட மாடு, அதை முகத்தாலும், கால்களாலும் உதைத்து விளையாடுகிறது. நிஜ கால்பந்தாட்ட வீரரை போல் தன் கால்களுக்குள்ளே வைத்துக்கொண்டு அந்த பந்தை யாரும் நெருங்க விடாமல் பார்த்து கொள்கிறது. ஒரு கட்டத்தில் மாட்டிடம் இருந்து பந்தை எடுத்த இளைஞர் உதைத்து விளையாட தொடங்கினார். இதை பார்த்த அந்த மாடு பந்தை துரத்தி துரத்தி விளையாட தொடங்கியது. அந்த சம்பவத்தை அடுத்து கரடிகள் கால்பந்து விளையாட்டு சம்பவம் இப்போது வைரலாகியுள்ளது.
Comments
Post a Comment