4,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மத்திய ஐரோப்பிய பெண் எப்படி இருந்தார் என்பதை நாம் இந்த தொழில்நுட்பத்தின் உதவியால் காண முடியும்.
காலத்தை பயணம் செய்து கடந்து செல்வது என்பது இன்னும் சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது. இருப்பினும், இன்றைய நவீன அறிவியலின் உதவியோடு அது தொடர்பான சிலவற்றை நம்மால் சாதிக்க முடியும் என்று பல கண்டுபிடிப்புகள் கூறுகின்றன. விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பத்தின் நம்பமுடியாத வளர்ச்சியால் இது போன்ற அதிசயங்கள் நடக்க வாய்ப்புள்ளது. ஆம், 4,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மத்திய ஐரோப்பிய பெண் எப்படி இருந்தார் என்பதை நாம் இந்த தொழில்நுட்பத்தின் உதவியால் காண முடியும்.
லைவ் சயின்ஸ் பத்திரிகையின் சமீபத்திய அறிக்கையின்படி, செக் குடியரசின் அகாடமி ஆஃப் சயின்ஸின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு, ஐந்து வெண்கல வளையல்கள், இரண்டு தங்க காதணிகள், 400-க்கும் மேற்பட்ட அம்பர் மணிகள் கொண்ட நெக்லஸ், மற்றும் மூன்று இழைகளுடன் புதைக்கப்பட்ட ஒரு பெண்ணின் முகத்தை புனரமைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த பெண்ணின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட கல்லறையின் ரேடியோகார்பன் டேட்டிங் படி, அவர் கி.மு 1880- கி.மு 1750 ஆண்டுகளுக்கு இடையில் வாழ்ந்ததாக அறியப்பட்டுள்ளது.
செக் குடியரசின் வடக்குப் பகுதியில் உள்ள மிகுலோவிஸ் கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு கல்லறையில் யூனிட்டைஸ் (Únětice) கலாச்சாரத்தைச் சேர்ந்த பெண்ணின் எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அப்பகுதியும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் போஹேமியா என்று அழைக்கப்படுகின்றன. இந்த பகுதியில் உள்ள 27 கல்லறைகள் சுமார் 900 ஆம்பர் பொருள்கள் உட்பட கலைப்பொருட்களின் குறிப்பிடத்தக்க புதையலாக தற்போது விளங்குகிறது. கண்டுபிடிக்கப்பட்ட அந்த பெண்ணின் உடலுடன், மூன்று வெண்கல தையல் ஊசிகளும் புதைக்கப்பட்டு இருந்தது. யூனிட்டைஸ் கலாச்சாரம் என்பது ஆரம்பகால வெண்கலக் கால மத்திய ஐரோப்பாவைச் சேர்ந்த மக்களின் குழுவாகும்.
இந்த கால கட்டத்தில் கோடாரிகள், கத்திகள், வளையல்கள் மற்றும் டார்க்ஸ் எனப்படும் முறுக்கப்பட்ட உலோக நெக்லஸ்கள் உள்ளிட்ட உலோகக் கலைப்பொருட்கள் மிகவும் பிரபலமாக இருந்தது. இந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் முகத்தின் மறுசீரமைப்பு பணிகளை நவீன தொழில்நுட்பங்களை கொண்டு செய்தனர். லைவ் சயின்ஸிடம் பேசிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மைக்கேல் எர்னி கூறியதாவது, "இது முழுக்க முழுக்க கலாச்சாரப் பகுதியின் பணக்கார பெண் கல்லறையாக இருக்கலாம்" என்று கூறினார்.
மிகுலோவிஸுக்கு அருகிலுள்ள கல்லறையில் காணப்படும் அனைத்து எலும்புக் கூடுகளிலும், அம்பர் அணிந்த பெண்ணுக்கு சிறந்த பாதுகாக்கப்பட்ட மண்டை ஓடு இருந்தது என்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறினர். இது ஒரு "அதிர்ஷ்டவசமான தற்செயல் நிகழ்வு" என்று எர்னி குறிப்பிட்டார். பணக்கார கல்லறையில் எலும்புக்கூடு எச்சங்கள் இருப்பதாகவும், அது புனரமைப்புக்கான அடிப்படையை வழங்குவதாகவும் அவர் கூறினார். எனவே, அந்த எலும்புக்கூடுகளை வைத்து எளிதில் அந்த பெண்ணின் உருவத்தை தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்க முடியும் என்பதையும் விளக்கினார்.
அப்பெண்ணின் கண்கள் மற்றும் முடி பழுப்பு நிறமாகவும், அவருடைய தோல் அழகாகவும் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிய மரபணு வரிசைமுறைகளை பயன்படுத்தினர். ப்ர்னோவில் உள்ள மொராவியன் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த மானுடவியலாளர் ஈவா வனிகோவா மற்றும் சிற்பி ஒண்டேஜ் பிலெக் ஆகியோர் இணைந்து இந்த பெண்ணின் உடற்பகுதி மாதிரியை உருவாக்கினர் என்று லைவ் சயின்ஸ் பத்திரிகை தெரிவித்தது.
Comments
Post a Comment