ஒரே மரத்தில் 40 வகை பழங்களை காய்க்கச் செய்து அமெரிக்க வேளாண் விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார்.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என பழமொழியாக நம்மூரில் கூறப்படுவதுண்டு. ஆனால் அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் செய்திருக்கும் புதிய கண்டுபிடிப்பால், இந்தப் பழொழியை இனி கூறுவதற்கு சற்று யோசிக்க வேண்டும். ஏனென்றால், அவரின் அயராத முயற்சியால் ஒரே மரத்தில் 40 வகையான பழங்கள் காய்ப்பதை சாத்தியப்படுத்தியிருக்கிறார். அவர் பெயர் சாம் வான் அகேன்.அமெரிக்காவின் சைரகஸ் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பேராசிரியராக பணியாற்றிய அவர், தனது பண்ணைத் தோட்டத்தில் விதவிதமான மரங்கள் மற்றும் தாவரங்களை வளர்த்து வருகிறார். நியூயார்க் மாகாணத்தில் அவர் வைத்திருக்கும் விவசாயப் பண்ணையில் கிராப்டிங் முறையில் உருவாக்கிய ஒரு மரம், ஒரே நேரத்தில் 40 வகையான பழங்களைக் காய்க்கிறது. அந்த மரத்துக்கு ட்ரீ 40 என்றும் பேராசிரியர் சாம் பெயரிட்டுள்ளார்.இதற்காக சுமார் 7 ஆண்டுகளாக தீவிர முயற்சியில் ஈடுபட்ட அவர், அதில் வெவ்வேறு விதமான மரங்கள் மற்றும் தண்டுகளை இணைத்து வளர்த்து வந்துள்ளார். அவரின் தொடர் முயற்சியினால் அந்த மரத்தில் தற்போது செரிஸ், பீச்சஸ், பிளம்ஸ், என 40 வகையான பழங்கள் காய்த்துள்ளன. நம்மூரில் மாம்பழங்களை சுவை மிக்கதாக மாற்றுவதற்கு ‘ஒட்டு மாங்கனி’ என்ற முறை பயன்படுத்தப்படுவதுண்டு. அதில் புளிப்பான மரத்தின் தண்டில், சுவையான மாம்பழத்தின் தண்டை ஒட்ட வைத்து சிறிது நாளில் புளிப்பான மாம்பழத்தை இனிப்பாகவும், அதிகமாகவும் காய்க்க செய்வர்.அதே போன்றுதான் இவரும் ஒரே மரத்தில் பல்வேறு மரங்களின் தண்டுகளை படிப்படியாக இணைத்தும், சில மாற்றங்களை செய்தும் வளர்த்துள்ளார். பார்ப்பதற்கு மட்டுமின்றி கண்ணை கவரும் வகையில் மிகவும் அழகிய தோற்றத்தை உடையதாகவும் அந்த மரம் உள்ளது. சிறுவயது முதல் விவசாயத்தில் மீது அதீத ஆர்வம் இருந்து வந்ததாக தெரிவித்துள்ளார். இதனால், விவசாயம் மற்றும் தோட்டக்கலை சார்ந்த படிப்புகளை தேர்தெடுத்து படித்ததாகவும், படித்து முடித்த பிறகு புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.ஒரே மரத்தில் 40 பழங்களை வளர வைக்க முடியும் என்பதில் தனக்கு திடமான நம்பிக்கை இருந்ததாக தெரிவிக்கும் அவர், அறிவியலின் துணைக் கொண்டு அதற்கான முயற்சியை எடுத்ததாக விளக்கம் அளித்துள்ளார். முதலில் சில தடைகளையும் இடர்பாடுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்ததாக தெரிவித்துள்ள அவர், இதற்காக தொடர்ந்து 7 ஆண்டுகளாக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்ததாக பேராசிரியர் சாம் தெரிவித்துள்ளார்.
ஒரு குழந்தையை கவனித்துக் கொள்வதுபோல் மரத்தை பராமரித்து வந்ததாக கூறியுள்ள சாம், தன்னுடைய முயற்சிக்கு பலன் கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார். மழைக்காலங்களில் இந்த மரத்தை பார்ப்பவர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் எனக் கூறிய அவர், வானவில்லை விட அதிக கலர்கள் இந்த மரத்தில் காண முடியும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment