தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி மத்திய நீர்வளத்துறை சார்பில் பகிரப்பட்டுள்ள யானை வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
யானை ஒன்று குடிநீருக்காக அடிபம்ப் ஒன்றில், நீண்ட நேரம் அடித்து வெளிவரும் தண்ணீரை குடிக்கும் வீடியோ, தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
உலகம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலகில் இருக்கும் மொத்த நீரில் 3 விழுக்காடு நீர் மட்டுமே குடிக்க உகந்ததாக இருக்கிறது. அவை பெரும்பாலும் நிலத்தடி நீராக இருக்கிறது. விவசாயம், குடிநீர் என அனைத்துக்கும் நிலத்தடி நீரை சார்ந்திருப்பதால், மக்கள் தொகை பெருக்கம், தண்ணீர் சேமிப்பின்மை காரணமாக நிலத்தடி நீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. இதனால், தண்ணீர் பஞ்சம் அனைத்து காலங்களிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. கோடை காலங்களில் தண்ணீர் பஞ்சத்தைப் பற்றிக் கூறத்தேவையில்லை.
ஆழ்துளை கிணறுகள் அமைக்கும்போது, முன்னெப்பல்லாம் 200 அடிக்குள் கிடைத்த நிலத்தடி நீர், இப்போது 1500 அடி வரை சென்றாலும் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. இது குறித்து அரசுகளும், மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். தண்ணீர் பஞ்சத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், அவற்றை சேகரிக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காத சூழல் உருவாகிவிடும். தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரம் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜீரோ தண்ணீர் நகரமாக அறிவிக்கப்பட்டது. அதாவது, அந்த நகரத்தில் மக்கள் பயன்படுத்துவதற்கான தண்ணீர் ஒரு சொட்டுகூட இல்லை என கூறப்பட்டது. இத்தகைய சூழல் இந்திய நகரங்களும் எதிர்நோக்கியிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதனை பறைசாற்றும் வகையில் இணையத்தில் வைரலான வீடியோ ஒன்று நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி மத்திய நீர்வளத்துறை சார்பில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில் வனப்பகுதியில் தண்ணீர் இல்லாமல், அருகாமையில் இருக்கும் கிராமத்துக்குள் நுழையும் யானை ஒன்று அங்கிருக்கும் அடி பம்ப்பில் தண்ணீரை அடித்துக் குடிக்கிறது. சுமார் 26 நொடிகள் வரை இருக்கும் அந்த வீடியோவில் தாகத்தை போக்க, அவ்வாறு செய்துள்ளது. இந்த வீடியோவுக்கு கேப்சனிட்டுள்ள மத்திய நீர்வளத்துறை, ஒரு சொட்டு நீர் எவ்வளவு முக்கியம் என்பதை யானை அறிந்திருக்கிறது, மனிதர்கள் ஏன் இதனைப் புரிந்து தண்ணீரை சேமிக்கக்கூடாது? தண்ணீரை வீணாக செலவு செய்வதை தவிர்க்கக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த வீடியோவுக்கு கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன்கள், தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தும் அருமையான விழிப்புணர்வு வீடியோ எனத் தெரிவித்துள்ளனர். யானையின் புத்திக் கூர்மையையும், சமயோசித்தமாக செயல்படும் ஆற்றலையும் பார்த்து வியந்துள்ள நெட்டிசன்கள், அடி பம்பை அடித்தால் தண்ணீர் வரும் என்று யானைக்கு எப்படி தெரியும்? உண்மையிலேயே வியப்பாக இருக்கிறது என கமெண்ட் அடித்துள்ளனர். இந்திய வனத்துறை அதிகாரி ரமேஷ் பாண்டேவும் இந்த வீடியோவை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, தண்ணீரையும், வினவிலங்குகளையும் பாதுகாக்க வேண்டும் என கூறியுள்ளார்.
Comments
Post a Comment