சோலார் பேனல்கள் நீலப்பெட்டிகள் போல் காட்சியளிக்கும் புகைப்படங்களை நாசா பகிர்ந்துள்ளது.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பூமியில் இருக்கும் சோலார் பேனல்கள் நீலப்பெட்டிகள் போல் காட்சியளிக்கும் அட்டகாசமான புகைப்படங்களை நாசா பகிர்ந்துள்ளது.விண்வெளியில் பொதிந்து கிடக்கும் வியத்தகு ஆச்சர்யங்களை கேள்விப்படும்போது அல்லது பார்க்கும்போது, வியப்பின் உச்சத்துக்கு செல்லாமல் இருக்க முடியாது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அவ்வப்போது வெளியாகும் புகைப்படங்கள் பிரபஞ்ச அதிசயத்தையும், பூலோக அழகையும் படம்பிடித்து காட்டுபவையாக எப்போதும் இருக்கின்றன. அந்தவகையில், இப்போது பிரெஞ்சு விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது நெட்டிசன்களிடையே வியப்பை ஏற்படுத்துபவையாக உள்ளது.பூமியில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் பிரெஞ்சு விண்வெளி வீரரான தாமஸ் பெஸ்கெட் இருக்கிறார். அங்கிருந்து, பூமியில் இருக்கும் சோலார் பேனல்களை படம் பிடித்துள்ள அவர், அந்த அழகிய புகைப்படத்தை தன்னுடைய சமூகவலைதள பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இதனை அமெரிக்க விண்வெளி மையமான நாசாவும் பகிர்ந்துள்ளது.400 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படத்தில், சோலார் பேனல்கள் அடுக்கி வைக்கப்பட்ட நீலப்பெட்டிகள் போல் காட்சிகளிக்கிறது. அந்த புகைப்படத்துக்காக அவர் பதிவிட்டுள்ள கேப்சனில், சில நேரங்களில் 400 கிலோ மீட்டருக்கு கீழே அழகு நெருக்கமாக உள்ளது என தெரிவித்துள்ளார். வேறொரு கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பூமியில் இருக்கும் சோலார் பேனல்கள் தெளிவாக தெரிகின்றன.இதுவரை 37 ஆயிரத்துக்கும் மேலான லைக்குகளையும், கமெண்டுகளையும் இந்தப் புகைப்படம் பெற்றுள்ளது. விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்கெட்டின் சமூகவலைதள பக்கங்களில் விண்வெளியில் எடுக்கப்பட்ட ஏராளமான புகைப்படங்கள் இருக்கின்றன. இதற்காகவே ஆயிரக்கணக்கானோர் அவரை பின் தொடர்ந்து வருகின்றன.கடந்த சில நாட்களுக்கு முன்பு மெக்சிகோவின் தென்மேற்கு பகுதியில் இருக்கும் உப்புச் சுரங்கங்கள், நீர்பாசன விவசாய நிலங்களின் அழகை வெவ்வேறு கோணங்களில் புகைப்படங்களாக எடுத்து பதிவிட்டிருந்தார். அவரின் அனைத்து புகைப்படங்களும் ஸ்மார்ட்போன்களுக்கான கவர்களாகவும், வால்பேப்பர்களாகவும் மாறி வருகின்றன.
இதேபோல், காற்றால் அரிக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பின் அரிய புகைப்படங்களை நாசா அண்மையில் வெளியிட்டது. அது காண்போரை பிரமிக்கவைப்பவையாக இருந்தது. நாசாவின் செவ்வாய் கிரக கண்காணிப்பு ஆர்பிட்டர் அதன் சுற்றுப்பாதையில் இருந்து சிவப்பு கிரகத்தை கண்காணித்து வருகிறது. இந்த ஆர்பிட்டர் ஒவ்வொரு முறையும் கிரகத்தில் உள்ள பள்ளங்கள், குன்றுகள், பனிக்கட்டிகள் மற்றும் பிற நிகழ்வுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக படங்களை நாசா-வுக்கு அனுப்பி வருகிறது. நாசாவும் அதனை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா அல்லது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது வெளியிட்டு நெட்டிசன்களை பிரமிக்க வைக்கும். தற்போது, காற்றினால் ஏற்பட்ட அரிப்புக்கு உள்ளான செவ்வாய் கிரக பாறைகளின் அழகிய படங்களை ஆர்பிட்டர் அனுப்பியுள்ளது.
Comments
Post a Comment