பிறழ்வு என்பது தாவரவகைகளை உண்ணும் விலங்குகளுக்கு மட்டுமல்ல, மாமிசம் உண்ணும் ஊர்வனவற்றிலும் நிகழ்கிறது.
ராஜஸ்தானில் இரண்டு தலைகள் மற்றும் 4 கண்களுடன் எருமை கன்றுகுட்டி பிறந்த வினோத சம்பவம் நடந்துள்ளது. தற்போது இந்த கன்றுக்குட்டியும் அதனை ஈன்றெடுத்த தாய் எருமையும் மக்களிடையே பிரபலமடைந்து வருகின்றன.
ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், ஒரு எருமை இரண்டு தலை கொண்ட கன்றினை ஈன்றதை கண்டு கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ஜீ நியூஸில் வெளியான அறிக்கையின்படி, புதிதாகப் பிறந்த கன்றுக்கு இரண்டு வாய், இரண்டு கழுத்து, நான்கு கண்கள் மற்றும் நான்கு காதுகள் ஆகியவை இருந்தன. பிறவி குறைபாடு கொண்ட இந்த அரிய கன்றுக்குட்டியை பார்க்க அண்டை கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குவிந்துள்ளதால், எருமையும், கன்று குட்டியும் தேசிய அளவில் பிரபலமடைந்துள்ளது.
புதிதாகப் பிறந்த எருமையின் உரிமையாளர், இரண்டு முகம் கொண்ட கன்று குட்டிக்கு தண்ணீர் பாட்டில் உதவியுடன் தண்ணீர் கொடுத்து வருவதாகவும், கன்று ஆரோக்கியமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தனது இரண்டு வாயையும் பயன்படுத்தி கன்று பால் குடித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது பிறழ்வு எனப்படும் மரபணு மாற்றத்தால் நிகழ்ந்த ஒரு வினோத சம்பவமாகும். கொரோனா பெருந்தொற்று காரணமாக இப்போது பிறழ்வு (Mutant) என்ற சொல் நமக்கு பரிட்சயம். பிறழ்வு என்பது உடலில் உள்ள டிஎன்ஏ மரபணு சேதமடையும் போது அல்லது மாறும்போது, அந்த மரபணுவால் கொண்டுசெல்லப்படும் குறிப்புக்கள் மாறும்.
இதுவே பிறழ்வுக்கு வழிவகுக்கிறது. அதாவது ஒரு உயிரில் இருந்து புதிய வகை உருவாவது. அதேதான் கன்றுக்குட்டி கதையிலும் நடந்துள்ளது.
இது குறித்து கால்நடை மருத்துவர் குடே சிங் கூறியதாவது, தாய் எருமை விலங்கு மருத்துவரின் உதவியின்றி இரண்டு முகம் கொண்ட கன்றை ஈன்றுள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார். இதே போன்ற ஒரு சம்பவம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்துள்ளது. அந்த சம்பவத்தில் இரண்டு தலைகள், நான்கு கண்கள் மற்றும் இரண்டு வாய்களுடன் ஒரு கன்று பிறந்ததும் குறிப்பிடத்தக்கது.
பிறழ்வு என்பது தாவரவகைகளை உண்ணும் விலங்குகளுக்கு மட்டுமல்ல, மாமிசம் உண்ணும் ஊர்வனவற்றிலும் நிகழ்கிறது. கடந்த 2019-ல் மேற்கு வங்கத்தின் மிட்னாபூரில் உள்ள ஒரு கிராமத்தில் இரண்டு தலை கொண்ட பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும், புராண நம்பிக்கைகளின் காரணமாக உள்ளூர் கிராம மக்கள் பாம்பை ஒப்படைக்க மறுத்ததால் வன அதிகாரிகளால் அதை மீட்க முடியவில்லை.
இது தொடர்பாக, வனத்துறையின் ஹெர்பெட்டாலஜிஸ்ட் கவுஸ்தவ் சக்ரவர்த்தி, ஏஎன்ஐ பத்திரிகையிடம் பேசுகையில், "இது முற்றிலும் ஒரு மனிதனுக்கு இரண்டு தலைகள் அல்லது கட்டைவிரல் போன்ற ஒரு உயிரியல் பிரச்சினை. இந்த பாம்புக்கு இரண்டு தலைகள் உள்ளன. இது புராண நம்பிக்கைக்கு இங்கு வேலையில்லை. இத்தகைய உயிரினங்களின் ஆயுட்காலம் அவற்றை பராமரிப்பதன் மூலம் அதிகரிக்கிறது. இந்தப் பாம்பைப் பாதுகாத்தால் அதன் ஆயுட்காலம் அதிகரிக்கும்" என்று தெரிவித்திருந்தார். இந்த பாம்பு நாஜா கவுடியா இனத்தைச் சேர்ந்தது என்றும் கூறப்படுகிறது.
Comments
Post a Comment