PCOS ஒரு வாழ்க்கை முறை கோளாறு தான் என்பதை நாம் அடிக்கடி மறந்துவிடுகிறோம். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் உகந்த எடையை பராமரிப்பது ஆகியவை இந்த பிரச்சனையை நிர்வகிக்க உதவும்.
ஐந்தில் ஒரு பங்கு பெண்கள் PCOS எனப்படும் பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். இனப்பெருக்க வயதுடைய பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் கோளாறால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இது முக்கியமாக கருவுறுதல் பிரச்சினைகள் உள்ள பெண்களில் காணப்படுகிறது.
PCOS பிரச்னையுடன் வாழும் பெண்கள் நீரிழிவு, இதயம் மற்றும் இரத்த நாள பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. கூடுதலாக, கருப்பைகள் அதிக அளவு ஆண்ட்ரோஜனை உற்பத்தி செய்கின்றன. இது ஹிர்சுட்டிசம் மற்றும் முகப்பரு போன்ற விளைவுகளுக்கு காரணமாகின்றன. இதுதவிர PCOS பிரச்சனை ஒழுங்கற்ற மாதவிடாய் முதல் கருத்தரிப்பதில் சிரமம் வரை பல இனப்பெருக்க சுகாதார பிரச்சினைகளையும் அதிகரிக்கிறது. இருப்பினும், PCOS ஒரு வாழ்க்கை முறை கோளாறு தான் என்பதை நாம் அடிக்கடி மறந்துவிடுகிறோம். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் உகந்த எடையை பராமரிப்பது ஆகியவை இந்த பிரச்சனையை நிர்வகிக்க உதவும். அதன்படி உங்கள் PCOS பிரச்சனையை சிறப்பாக நிர்வகிக்க உதவும் சில வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்து பின்வருமாறு காணலாம். சரியான டயட்டை பராமரிக்கவும்: பொதுவாக நார்ச்சத்து இன்சுலின் அளவைக் குறைத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பெர்ரி, ஆளி அல்லது சியா விதைகள் மற்றும் முழு தானியங்களை சாப்பிடுவதன் மூலம் உங்கள் தினசரி உணவில் நார்சத்தினை சேர்த்துக்கொள்ளலாம். ஓட்ஸ், தாலியா மற்றும் போஹா போன்ற உணவுகளையும் கூட உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம். இதுதவிர கோழி, முட்டை, சால்மன், மீன், பீன்ஸ், டோஃபு, இறால் மற்றும் டூனா போன்ற புரதங்களும் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் நிறைந்த உணவுகளையும் சாப்பிடலாம். PCOS உள்ள பெண்களுக்கு டைப் -2 நீரிழிவு நோய் வரும் அபாயம் இருப்பதால், குறைந்த கிளைசெமிக் உணவுகளை (குறைந்த GI உணவு) சாப்பிடுவதன் மூலம் எடை இழப்பு மற்றும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த முடியும். குறிப்பாக, இனிப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகளைக் கொண்ட உணவுகளைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். PCOS பிரச்சனையை நிர்வகிப்பதில் உணவுக்கு முக்கிய பங்கு உண்டு. சரியான உணவின் மூலம், உடல் பருமனை சமாளிக்க முடிந்தால், PCOS தொடர்பான பிரச்சனைகளை சமாளிப்பது மிக எளிது. உடற்பயிற்சி: ஒவ்வொரு வாரமும் 3 மணி நேரம் உடற்பயிற்சி செய்யும் பெண்கள் தங்களில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தியுள்ளதாக பல ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. எனவே, உங்கள் தினசரி வொர்க்அவுட் உங்கள் எடையைக் குறைக்கவில்லை என்றாலும், வழக்கமான உடற்பயிற்சியைத் தொடர வேண்டியது அவசியம். ஏனெனில் அவை மாதவிடாய் சுழற்சியை சீராக்கவும், இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது. மனம் மற்றும் உணர்ச்சிகளின் நலனை கவனித்துக்கொள்ளுங்கள்: PCOS உள்ள பெண்களுக்கு மனநிலை மாற்றங்கள் மற்றும் கவலை போன்ற உணர்வு ரீதியான பிரச்சினைகள் இருக்கலாம். எனவே, PCOS பிரச்சனை உள்ளவர்கள் காட்டாயம் மனம் மற்றும் உணர்ச்சிகளின் ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு பிராணாயாமம், உடற்பயிற்சி மற்றும் தியானம் போன்ற மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சிகள் உதவியாக இருக்கும். இருப்பினும், PCOS பிரச்சனை உள்ளவர்களில் மனநலப் பிரச்சினைகள் மோசமாகிறது என்றால், மருத்துவ உதவியை நாடுவது மிக நல்லது.
Comments
Post a Comment