யூடியூப் சேனல் நடத்தும் இளைஞர் ஒருவர் தனது வேடிக்கையான முயற்சிக்காக பழைய கார் ஒன்றை வாங்கி, அதை இந்தியாவின் சிறிய காராக மாற்றியுள்ளார். அமித் இந்தியாவின் மிகச் சிறிய காரை தயார் செய்ய நினைத்தார்.
அவரது பெயர், அமித் ஷர்மா. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர் கிரேஸி எக்ஸ், ஒய், இசட் என்ற யூ-டியூப் சேனலை நடத்தி வருகிறார். இயந்திரவியல் தொழில்நுட்பத்தில் பி.டெக் படித்திருக்கும் அமித் ஷர்மா, மற்ற யூ-டியூபர்கள் போல இல்லாமல் புதுமையான ஒரு முயற்சியை காரில் செய்ய வேண்டும் என திட்டமிட்டார்.
வழக்கமாக யூ-டியூபர்கள் கார் அல்லது வேனை முழுவதுமாக உருமாற்றம் செய்து பயன்படுத்துவார்கள். அதை வீடியோவாகவும் எடுத்து வெளியிடுவார்கள். ஆனால், அமித் இந்தியாவின் மிகச் சிறிய காரை தயார் செய்ய நினைத்தார். இதற்காக மாருதி நிறுவனத்தின் பழைய கார் ஒன்றை விலைக்கு வாங்கினார். அதை சிறிய காராக மாற்றுவதற்கு முயன்றார். முன்பகுதியில் இருந்த இரண்டு இருக்கைகளை மட்டும் விட்டுவிட்டு, பின்புறத்தை அப்படியே வெட்டி எடுத்தார். இதையடுத்து, காரின் முன்பகுதியில் பெட்ரோல் டேங்கை பொருத்த முயன்றார். இருக்கைகளுக்கு அடிப்புறத்தில் இருந்த இடத்தில் பெட்ரோல் டேங்க் மற்றும் என்ஜினுக்கு பெட்ரோல் செல்லக்கூடிய குழாய்களை அமைத்தார். அவர் நினைத்ததுபோல என்ஜினுக்கு பெட்ரோல் சென்று கார் இயங்கியது. ஆனால், முன்புறத்தில் இரண்டு சக்கரங்கள் மட்டுமே இருந்ததால் காரை ஓட்ட முடியவில்லை. இதையடுத்து, பின்புறத்தில் இரண்டு சக்கரங்களைப் பொருத்த நினைத்தார் அமித். ஆனால், அதற்கு போதிய இடமில்லை. இதனால் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் ஸ்ட்ரெச்சர் வண்டியின் சக்கரங்களை வாங்கி வந்து அதை பின்புறத்தில் அமைத்தார்.
அந்த சக்கரங்களுக்காக மரத்தில் செய்யப்பட்ட ஓர் அச்சையும் அவர் பொருத்தியிருந்தார். இதையடுத்து, தனது நண்பரை அழைத்துக்கொண்டு காரில் பயணிக்க தொடங்கினார். எதிர்பார்த்ததை போலவே கார் இயங்கியது. ஆனால், 1.5 கிலோ மீட்டர் தூரம் சென்றதும் சக்கரங்கள் அதிக அழுத்தத்தால் உடைந்தன. இதையடுத்து மரத்தில் செய்யப்பட்ட சக்கர அச்சிற்குப் பதிலாக இரும்பிலான அச்சைக் கொண்டு சக்கரங்களைப் பொருத்தினார். மீண்டும் கார் ஓட ஆரம்பித்தது. இந்த முறை சில மணி நேரங்கள் வெற்றிகரமாக கார் ஓடியது.
ஆனால் மீண்டும் சக்கரங்களில் அதே பிரச்சினை ஏற்பட்டு, கார் இயங்க முடியாத நிலை உண்டானது. இருப்பினும் இந்தியாவில் வெளியான சிறிய ரக காராகிய டாடா நானோ காரை விடவும், சிறிய கார் ஒன்றை யூ-டியூபர் ஒருவர் கண்டுபிடித்துவிட்டார் என்பதே யாராலும் மறுக்க முடியாத உண்மை.
Comments
Post a Comment