இரண்டு மாடிகளை கொண்ட மண் வீட்டை கட்டி ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்கள், மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த யுகா அகரே-சாகர் ஷிருடே தம்பதியர். கட்டிடக்கலைஞர் களான இவர்கள் இருவரும் மூங்கிலின் துணையுடன் உள்ளூர் கட்டுமான பொருட்களை கொண்டு 4 லட்சம் ரூபாய் செலவில் அழகிய மண் வீட்டை கட்டமைத்திருக்கிறார்கள்.
லோனாவாலா அருகே உள்ள வாகேஷ்வர் பகுதியில் மண் வீடு கட்ட தீர்மானித்தபோது அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஆட்சேபனை தெரிவித் திருக்கிறார்கள். ‘இங்கு கன மழை பெய்யும், காற்றின் வேகமும் தீவிரமாக இருக்கும். இதுபோன்ற வீட்டை கட்டுவது சாத்தியமற்றது' என்று கூறி இருக்கிறார்கள். ஆனால் இந்த தம்பதியரோ மனம் தளரவில்லை. பல நூற்றாண்டு களுக்கு முன்பு மண்ணைப் பயன்படுத்தி கட்டப்பட்ட கோட்டைகள் இன்றும் கம்பீரமாக காட்சியளிப்பதை முன்னுதாரணமாக கொண்டு கட்டுமான பணியை தொடங்கி வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டார்கள். ஆனால் கிராம மக்கள் கூறியதுபோலவே பேரழிவுக்கு வித்திடும் சூறாவளியை இவர்களின் மண் வீடு எதிர்கொள்ள வேண்டிய நிலை உண்டானது. ஆனால் அதற்கு ஈடுகொடுத்து எந்த சேதமுமின்றி மண் வீடு நிலைத்து நின்று கிராம மக்கள் உள்பட பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
‘‘காற்றின் வேகம் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் இருந்தது. ஆனாலும் எங்கள் வீட்டிற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. மழைநீர் கசிந்து கட்டுமானத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கூரையின் மேல் போடப்பட்டிருந்த ஸ்லாப்பில் மூன்று நாட்கள் தண்ணீர் நின்றது. ஆனாலும் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை”என்கிறார், யுகா.
இருவரும் நவி மும்பையில் உள்ள கல்லூரியில் கட்டிடக்கலை சார்ந்த பட்டப்படிப்பை முடித்துவிட்டு 2014 -ல் கட்டுமான நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்கள். நிறுவனங்கள், குடியிருப்பு கட்டிடங்கள் உள்பட பல கட்டுமான திட்டங்களை செயல்படுத்தினாலும் மண் அரண்மனை எனப்படும் ‘மிட்டி மஹால்’தான் இவர்களின் கனவு திட்டமாக இருந்திருக்கிறது.
உள்ளூர் பொருட்கள், மறுசுழற்சி பொருட்களை பயன்படுத்தியது முதல் ஆர்கானிக் விளை பொருட்களை வளர்ப்பது வரை திட்டமிட்டு கட்டுமான கட்டமைப்புகளை உருவாக்கி இருக்கிறார்கள். வீட்டின் காம்பவுண்ட் சுவரை மூங்கில்கள் மற்றும் மண்ணை கொண்டே கட்டமைத்து இருக்கிறார்கள்.
‘‘வீட்டின் அடித்தள சுவரை கற்களை கொண்டே எழுப்பி இருக்கிறோம். அதற்காக குழி தோண்டியபோது குவிந்த மண்ணை வீணாக்காமல் மீண்டும் எப்படி உபயோகிப்பது என்று யோசித்தோம்.
ராணுவம் பதுங்கு குழிகள் அமைக்க பயன்படுத்துவது போன்று சிமெண்டு சாக்குகளுக்குள் மண்ணை நிரப்பி கட்டு மானங்களை எழுப்பினோம். தரை மட்டத்தில் இருந்து 3 அடிக்கு கீழும், தரைக்கு மேல் 4 அடி உயரத்திலும் சுவரை கட்டினோம். இந்த வீட்டுக்கு மூங்கில், சிவப்பு மண், புல் ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளோம். கார்வி செடிகளின் தண்டுகள் மற்றும் மூங்கில் பாய்களை அருகில் உள்ள காட்டில் இருந்து எடுத்து வந்து சுவர் கட்டுமானங்களை வலுப்படுத்தினோம். செம்மண், உமி, வெல்லம் மற்றும் இயற்கை சாறு ஆகியவற்றை கொண்டு களிமண் கலவையை தயாரித்தோம். அதனுடன் வேப்பம்பூ, மாட்டு சிறுநீர் மற்றும் மாட்டு சாணமும் கலக்கப்பட்டது. சுவர் பூச்சுக்கும் மாட்டு சிறுநீர் மற்றும் சாணத்தை பயன்படுத்தினோம்” என் கிறார் சாகர்.
தமிழ்நாட்டின் திருவண்ணாமலை, கர்நாடகாவின் பெங்களூரு பகுதியில் மண்களால் வீடுகளை எழுப்பும் கட்டிடக்கலை நிபுணர்களிடம் ஆலோசனையும், பயிற்சியும் பெற்று இந்த இரண்டு அடுக்கு வீட்டை கட்டி இருக்கிறார்கள். மூங்கில்கள்தான் பிரதானமாக கூரைகளை தாங்கி நிற்கின்றன. ஜன்னல், கதவுகளுக்கும், குளியலறை தளங்களுக்கும் மறுசுழற்சி பொருட்களை பயன் படுத்தி இருக்கிறார்கள். நான்கு மாதங்களில் கட்டப்பட்டிருக்கும் இந்த வீடு, வராண்டா, சமையலறை, வரவேற்பறை, குளியலறை, படுக்கையறை மற்றும் மொட்டை மாடி ஆகிய அம்சங்களை கொண்டிருக்கிறது.
700 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ‘வாட்டில் அண்ட் டாப்’ என்ற நுட்பத்தை கையாண்டிருக்கிறார்கள். இந்த முறையில் மரக்கட்டைகள் அல்லது மூங்கில்கள், மண் பிளாஸ்டர், களிமண், மாட்டு சாணம், வைக்கோல், மாட்டு சிறுநீர் மற்றும் சுண்ணாம்பு போன்றவை முக்கிய மூலப்பொருட்களாக அமைந்திருக்கின்றன. முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்தவகையில் கட்டமைக்கப்பட்டிருப்பதன் காரணமாக, வீட்டிற்குள் வெப்பநிலை வெளிப்புறத்தை விட குறைவாகவே உள்ளது. மேலும் கோடையில் குளிர்ச்சியான சூழலை உண்டாக்கும். குளிர்காலத்தில் வெப்பத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது.
இந்த ஆண்டு ஏ.சி, மின்விசிறிகள் இல்லாமல் கோடை காலத்தை கழித்துவிட்டதாகவும், தங்கள் செலவுகள் ஏறக் குறைய 70 சதவீதம் குறைந்துள்ளதாகவும் இந்த தம்பதியர் பெருமிதமாக கூறுகிறார்கள். வீட்டை சுற்றி இயற்கை விவசாய முறையில் காய்கறி செடிகளை வளர்க்கிறார்கள். தோட்டக் கலையை மேம்படுத்துவதற்காக கிரேவாட்டர் மறுசுழற்சி அமைப்பையும் நிர்வகிக்கிறார்கள்.
“செப்டிக் டேங்கில் மணல், கூழாங்கற்கள், கரி மற்றும் நீர்வாழ் தாவரங்கள் என ஏழு சுத்திகரிப்பு வடிகட்டிகள் இருக்கும். அதன் மூலம் வடிகட்டப்பட்ட நீர் இயற்கை விவசாய முறையில் செடிகள் வளர்க்கப் பயன்படும்” என்கிறார் சாகர்.
Comments
Post a Comment