உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவற்றில் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்களே தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ) பதவிகளை வகிக்கின்றனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான (சி.இ.ஓ) ஜாக் டோர்சியின் பதவிகாலம் அடுத்த ஆண்டு முடிவடைகிறது. இந்நிலையில், தன் தலைமை செயல் அதிகாரி பதவியை ஜாக் டோர்சி நேற்று (நவ.,29) ராஜினாமா செய்தார்.
இதையடுத்து அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்த இந்தியரான பரக் அகர்வால், புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பரக் அகர்வால், மும்பை ஐ.ஐ.டி.,யில் படித்து, உயர் கல்வியை அமெரிக்காவில் முடித்து, அமெரிக்க குடியுரிமை பெற்றவர்.
டுவிட்டர் மட்டுமல்லாமல் உலகின் தலைசிறந்த தொழில்நுட்பவியல் நிறுவனங்களின் சி.இ.ஓ பதவியை இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்களே ஆக்கிரமித்துள்ளனர். கூகுள் சி.இ.ஓ.,வாக சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ., சத்ய நாதெள்ளா, ஐ.பி.எம் நிறுவன சி.இ.ஓ அர்விந்த் கிருஷ்ணா, அடோப் சி.இ.ஓ சாந்தனு நாராயென், வி.எம் வேர் நிறுவன சி.இ.ஓ ரங்கராஜன் ரகுராம் என உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி பதவிகளை இந்தியர்களே அலங்கரித்துள்ளனர்.
இதைப் பார்த்து உலக நாடுகள் ஆச்சரியப்படுகின்றன. இந்தியாவின் மீதான மரியாதையும் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
யார் இந்த பரக் அகர்வால்?
வெறும் 37 வயதே ஆன பரக் அகர்வால், உலகளவில் முன்னணி 500 நிறுவனங்களின் சி.இ.ஓ.,க்களில் மிகவும் இளமையானவர் என்னும் சிறப்பை பெற்றுள்ளார். 1984ல் பிறந்த அவரின் பிறந்த தேதியை பாதுகாப்பு காரணங்களுக்காக டுவிட்டர் நிறுவனம் வெளியிட மறுத்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த பரக் அகர்வால், மும்பை ஐ.ஐ.டி.,யில் பயின்றார். பின்னர் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றார். படித்து முடித்ததும் 2011ம் ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியில் சேர்ந்த அவர், 2018ல் டுவிட்டரின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பொறுப்பேற்றார்.
மற்ற இந்தியர்கள்:
ராஜிவ் சுரி:
இவர் கடந்த 2014 மே மாதம் முதல் 2020 ஜூலை வரை பிரபல செல்போன் நிறுவனமான நோக்கியாவின் சி.இ.ஓ.,வாக இருந்துள்ளார். தற்போது இன்மர்சாட் நிறுவனத்தில் கடந்த பிப்ரவரி முதல் சி.இ.ஓ.,வாக உள்ளார்.
நிகேஷ் அரோரா:
கூகுள் நிறுவனத்தில் மூத்த நிர்வாகியாக இருந்த நிகேஷ் அரோரா, 2018 ஏப்ரல் முதல் சைபர் செக்யூரிட்டி நிறுவனத்தின் தலைவர் மற்றும் சி.இ.ஓ.,வாக உள்ளார்.
அஜய்பால் சிங் பங்கா:
மாஸ்டர்கார்டு நிறுவனத்தில் 2010 ஜூலை முதல் 2020 டிசம்பர் 31 வரை தலைவர் மற்றும் சி.இ.ஓ.,வாக பணியாற்றிய அஜய்பால் சிங் பங்கா, தற்போது அந்நிறுவனத்தில் நிர்வாக தலைவராக உள்ளார். இந்தாண்டு இறுதியில் அவர் ஓய்வு பெறவுள்ளார்.
Comments
Post a Comment