எங்கேயாவது பொது நிகழ்ச்சிகளுக்கும் விசேஷங்களுக்கும் செல்லும்பொழுது மேக்கப் செய்வது பெண்களின் இயல்பான ஒரு விஷயம்தான். அதிலும் அதற்காக செலவுகள் செய்து பவுண்டேஷன், ரோஸ் பவுடர், லிப்ஸ்டிக் என்று மேக்கப் பொருட்கள் வாங்கி அடுக்கி வைத்திருப்பார்கள்.
அதுமட்டுமில்லாமல் முகம் பளிச்சென்று இருக்க ஃபேஷியல், பிளீச்சிங் செய்வதற்காக நிறைய பணம் செலவு செய்து க்ரீம்களும் வாங்கி வைத்திருப்பார்கள். ஆனால் இவை எதுவும் இல்லாமல் வேதியல் பொருட்கள் எதையும் சேர்க்காமல் வீட்டிலேயே நாம் பயன்படுத்தும் பொருட்களை வைத்து முகத்தை பளிச்சென்று மாற்ற கூடிய ஒரு சுலபமான ஃபேஷியலை செய்ய முடியும். வாருங்கள் இதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
ஃபேஷியல் செய்முறை:
முதலில் முகத்தில் இருக்கும் எண்ணெய் பிசுக்குகள் மற்றும் அழுக்குகளை சுத்தம் செய்ய இரண்டு ஸ்பூன் தயிருடன் அரை எலுமிச்சைப் பழச்சாறை பிழிந்து, நன்றாகக் கலந்து கொண்டு, அதனை பிரஷ் பயன்படுத்தி முகத்தில் முழுவதுமாக தடவிக் கொண்டு இரண்டு நிமிடம் நன்றாக மசாஜ் செய்து ஒரு டவலைக் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.
அதன்பின் ஸ்கிரப் செய்வதற்காக ஒரு ஸ்பூன் அரிசி மாவுடன், 2 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாகக் கலந்து கொண்டு அதனையும் பிரஷ் பயன்படுத்தி முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் நன்றாக தடவி விட்டு, கைகளை பயன்படுத்தி வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் மற்றும் கண்ணுக்கும் தெரியாத அழுக்குகள் வெளியேறிவிடும். இதனையும் ஒரு மூன்று நிமிடம் கழித்து டவல் வைத்து துடைத்து கொள்ள வேண்டும்.
அதன்பின் சுடுதண்ணீர் வைத்து 15 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறிவிடும். அதன் பின் ஒரு ஸ்பூன் ஆரஞ்சு தோல் பவுடர் எடுத்துக்கொள்ள வேண்டும். இது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். அல்லது ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு முடித்தவுடன் அதன் தோலை காய வைத்து மிக்ஸியில் பவுடர் செய்து வைத்துக் கொள்ளலாம்.
ஆரஞ்சு பழத்தோல் பவுடருடன் 2 ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் தேன், அரை ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் மற்றும் அரை ஸ்பூன் எலுமிச்சை பழ சாறு சேர்த்து நன்றாக கலந்து கொண்டு, அதனையும் பிரஷ் பயன்படுத்தி முகம் மற்றும் கழுத்து பகுதியில் முழுவதுமாக தடவிவிட்டு, 20 நிமிடம் அப்படியே காய வைக்கவேண்டும். பின்னர் ஒரு துணியை வைத்துத் துடைத்து விட்டு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
இவ்வாறு வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தியே சுலபமான முறையில் ஃபேஷியல் செய்து விடலாம். இதனை ஒருமுறை செய்து பாருங்கள் நீங்கள் பார்லர் சென்று செய்துவரும் ஃபேஷியலை விட மிகவும் அருமையாக இருக்கும். இதன் மூலம் எந்த வித சரும பாதிப்புகளும் ஏற்படாது. அதுமட்டுமல்லாமல் முகம் எப்போதுமே நல்ல பொலிவுடன் இருக்கும்.
Comments
Post a Comment